Friday, August 27, 2010

மறைந்தும் மக்களின் மனங்களில் வாழும் அன்னை தெரெசா


Virakesari.
கருணையின் வடிவம் என்று போற்றப்படும் அன்னை திரேசாவின் 100 ஆவது பிறந்த தினம் நேற்றாகும். 1910 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி மசிடோனியா கோஜிப்லில் பிறந்த அன்னை தெரேசா, அக்னஸ் கோன்ஜா போஜாஜியூ எனும் இயற்பெயருடன் இந்திய குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியாவார்.

இவர் 1979இல் அமைதிக்கான நோபல் பரிசும், 1980இல் மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத் ரத்னா விருதும் பெற்றார்.

அன்னை தெரேசாவின் அன்பின் பணியாளர் சபை, அவர் மரணத்த வேளை, 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக் கொண்டிருந்தது.

இவர், அல்பேனியா ஷ்கோடரில் வாழ்ந்து வந்த நிக்கல் - டிரானா போஜாக்சியு தம்பதியரின் இளைய புத்திரியாவார். இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919 இல், அரசியலிலிருந்து விலகிய அவர் நோய்வாய்ப்பட்டு, அக்னஸுக்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார். தந்தையின் மரணத்திற்குப் பின், தாயார் அவரை ரோமன் கத்தோலிக்கராக வளர்த்து வந்தார்.

ஜோன் கிராப் க்ளூகாஸின் வாழ்க்கை வரலாற்றின் படி குழந்தைப் பருவத்தில் அக்னஸ் மதபோதனையினாலும் சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதில் இறைபணியில் தன்னை அர்ப்பணிப்பதற்குத் தீர்மானித்தார்.

1929 ஆம் வருடம் அவர் இந்தியா சென்று, டார்லிங்கில் தனது கன்னியர் மட பயிற்சியை ஆரம்பித்தார். மே 24,1931 இல் வாக்குத்தத்தம் எடுத்துக் கொண்டு அருட்சகோதரியானார். மத போதகர்களின் காவல் புனிதரான தெரேசா டி லிசியுவின் பெயரைத் தனக்குத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.கிழக்குக் கொல்கத்தாவின் லொரேட்டோ கன்னிமடப் பள்ளியில் தனது இறைபணியை ஆரம்பித்தார்.

1950 ஆம் ஆண்டு அன்னை திரேசாவின் தலைமையில் மிஷனரி ஒப் செரிட்டி இல்லம் ஸ்தாபிக்கப்பட்டது.தூய்மையான பணிக்கு எடுத்துக் காட்டாக நீல நிறக்கரையுடன் கூடிய வெள்ளை கைத்தறிச் சேலையை அணிந்தார்.

அன்னையுடன் முதன் முறையாக இணைந்து கொண்ட சுபாஷினிக்கு தனது இயற்பெயரைச் சூட்டினார். இவரது பணிக்குத் தலைவணங்கிய பிரிட்டிஷ் மகாராணி 1980 ஆம் ஆண்டு கௌரவ விருது வழங்கிக் கௌரவைத்தார்.1997 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பில் கிளிண்டன் கௌரவ பிரஜா உரிமை வழங்கினார்.

1997 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் அன்னை தெரெசா இறைவனடிசேர்ந்தார்.

அவரது மறைவையடுத்து சகோதரி நிர்மலா மிஷனரி ஒப் செரிட்டியின் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அன்னை இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவர் உலக மாந்தர் மனங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்.

அன்னைக்குப் புனித பட்டம் அளிக்கும் அந்நன்னாளை முழு உலகும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. அதற்கான இறை ஆசீரை வேண்டிப் பிரார்த்திப்போம்


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment