Thursday, August 26, 2010

செவாக்கின் சதத்துடன் இந்தியாவுக்கு இலகு வெற்றி


Virakesari.

இலங்கையில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விரேந்தர் செவாக்கின் சதத்துடன் இந்திய அணி இலகுவாக வெற்றி பெற்றது.

இலங்கை, இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் போட்டி தம்புளை ரங்கிரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 6 ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் இந்திய அணியும் மோதின.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தினேஷ் கார்த்திக் ஓட்டம் எதுவும் பெறாது முதல் ஓவரிலேயே வெளியேறினார். இதனையடுத்து, கொஹ்லி, யுவராஜ், ரெய்னா ஆகியோர் முறையே 8, 6, 1 ஓட்டங்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

எனினும் மறு முனையில் ஆரம்ப ஆட்டக்காரரான செவாக் அதிரடியாக ஓட்டங்களை பெற்றார். இவருடன் ஜோடி சேர்ந்த அணி தலைவர் தோனி நிதானமாக ஆடினார். 93 பந்துகளைச் சந்தித்த செவாக் 110 ஓட்டங்களை எடுத்த நிலையில் மெக்லம் பந்துவீச்சில் வாட்லிங்கிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்தவர்கள் அனைவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததால் இந்திய அணி 223 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

224 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்தின் ஆரம்ப வீரர்கள் ஓட்டங்களை பெற திணறினர். பின் வரிசையில் வந்த கேடி மில்ஸ் மட்டும் அதிரடியாக ஆடி 52 ஓட்டங்களை சேர்த்தார்.

பந்துவீச்சில் மிரட்டிய பிரவின் குமார் நியூசிலாந்தின் மூன்று முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார். முனாப் படேல் 3 விக்கெட்களையும், ஆஷிஷ் நெஹ்ரா 2 விக்கெட்களையும், ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

நியூசிலாந்து அணியால் 118 ஓட்டங்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இறுதியில் இந்திய அணி 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றது. ,


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment