Monday, October 28, 2013

அவள்!


அவள்,
அழகிய வினா?
என் இரகசியக் கனா!

அவள்,
ஆறாத காயம்,
என் வாழ்வின் பாலம்.

அவள்,
இதயத்தின் ஒலி,
என் வறட்சியின் வலி.

அவள்,
ஈரமான தென்றல்,
என் பாதையின் முட்கள்.

அவள்,
உணர்வுள்ள இசை,
என்னை இயக்கும் விசை.

அவள்,
ஊக்க நதி,
என்னை துரத்தும் விதி.

அவள்,
எளிமையின் உருவம்,
என் சுவாசத்தின் துயரம்.

அவள்,
ஏகாந்தப் பாதை,
பனியுடன் பிறந்த காலை.

அவள்,
ஐயத்தின் உடல்,
என் துணிச்சலின் நிழல்.

அவள்,
ஒடுங்கிய இரவு,
என் தனிமையில் உறவு.

அவள்,
ஓவிய வர்ணம்,
என் தேடலின் கிண்ணம்.

Post Comment

Saturday, July 06, 2013

அழகிய தருணங்கள்

அம்மாவின் மடியோடு
உறங்கிய இரவுகள்,
அப்பா அரவணைத்து
தட்டிக் கொடுத்த நேரங்கள்..

இருட்டு வானில்
ஜன்னல் நட்சத்திரம்
எண்ணி மகிழ்ந்த
இரவுகள்..

எதற்கும் துணியும்
இயல்பான வீரனாய்
சுற்றித் திரிந்த
பள்ளிப் பருவங்கள்..

நட்புக்குள் வாழ்வை
சுருக்கி நகைப்புடன்
நடந்த தருணங்கள்..

கரையை சேர போராடும்
அலையில் காதலோடு
கால் நனைத்த நாட்கள்..

மனதை திருடிய
மங்கையை மண மேடையில்
கைப் பிடித்த நிமிடங்கள்..

முதல் மோகத் தீயில்
வெட்கப் போர்வை எரிய
வியர்வையோடு கழிந்த
பொழுதுகள்..

என் உயிர் சுமந்து
புதிதாய் பூத்த பிஞ்சை
அள்ளிக் கொஞ்சி
விளையாடிய வினாடிகள்..

வறட்சியிலும் பசுமையிலும்
நம்பிக்கையோடு வாழ்ந்த நாட்கள்..
சுழலும் வாழ்வினில்
சுகமான அழகிய தருணங்கள்.

ஓடி ஒடுங்கிய -ஒரு
உடலோடு உறவாடும் ஆத்மாவின்
நினைவலைகளின் வாசிப்பு
இவ் வரிகளாய்..

Post Comment

Monday, April 15, 2013

"போய் வாறன்"



இது ஒரு ஊஞ்சல் பயணத்தின் ஒப்பிடம்,
உணர்வைக் கிறுக்கும்
ஒரு கைக் குழந்தையின் ஓவியம்.

பிரிவை விடப் பயங்கரம் பூமியில் இல்லை,
அதை ருசிப்பவன் மறுமுறை மரணிப்பதில்லை.

நினைவோடு வாழ்ந்தால்
எங்கிருந்தும் வாழலாம் என்ற
என் கருத்துக்கள் எல்லாம்
கண்முன்னே கருகிப் போகிறது..

கண்களிடம் இருந்து, கனவுகளை;
காலம் கழட்டி எறிந்த வலி
இன்னும் தீரவில்லை.

வலியினால்
விழி நீர் விழுவதை
தடுக்க முடியவில்லை.

"விமான நிலையம்"
என் போன்றோருக்கு
கண்ணீரைக் காதலிக்கும்
ஒரு கல்லறைக் கட்டடம்.

பிரிவுகளுக்கு
பின்னணி இசை வடித்துக் கொண்டிருக்கிறது
ஏறி இறங்கும் விமானங்கள்.

போலிப் புன்னகையின் பெறுமதியை
புரியவைக்கிறது காலம்.
நடிப்பு என்ற மனித குணம்
நல்லது என்பதை கற்றுக் கொடுக்கிறது வாழ்க்கை.

சுமக்க முடியாத உறவுகளின் பிரிவை,
சுமந்து கொண்டு பறப்பது காலக் கட்டாயமாகிப் போனது..

சூரியன் மேல் வாழும்
பனித்துளியாய் கரைகிறது வினாடிகள்..

கட்டி அனைத்து விடை கொடுக்கிறது
அத்துணை உறவுகளும்
அவள் ஆன்மாவைத் தவிர..

தாய் மண்ணோடும்
தன் உறவுகளோடும்
ஏதோ பேச நினைக்கிறேன்
மொழிகள் மறந்து மௌனித்து விடுகிறேன்.

மறுபடி முயல்கிறேன்
மீண்டும் தோற்கிறேன்.

வறண்ட உதடுகள் நனைத்து,
ஒரு முறை கனைத்து சொல்கிறேன்
போய் வாறன்

கைகளை அசைத்து விட்டு
திரும்பி நடக்கும் என் உறவுகளுடன்
என் நிஜம் நடப்பதைப் பார்கிறேன்.

வெறும் நிழலாய் நான் நடந்து
ஒரு முறை திரும்பிப் பார்கிறேன்,

மௌனத்துக்குள் அழும் என் குரல்
இவர்கள் செவி சேராது என்றெண்ணி
என் திசையில் நடக்கிறேன்..

நாளை நிச்சயமில்லா உலகில்
நடப்பதை இறைவன் நாட்டத்தில் விட்டு..

Post Comment

Monday, March 18, 2013

நான் கவிஞனாய்..



நான் கவிஞனாய்..

நிஜங்களை சொல்லி விட ஆசைதான்
நிதர்சனம் தொகுத்துவிட ஆசைதான்
மனிதனை நேசிக்க ஆசைதான் - அவன்
மனங்களை வாசிக்க ஆசைதான்.

நான் கவிஞனாய்..

கல்லறைக்குள் வாழ்ந்திட ஆசைதான்
கனாவினுள் கண்மூடிட ஆசைதான்
மௌனத்தின் மொழி எழுத ஆசைதான்- முதல்
மோகத்தில் ஊமையாக ஆசைதான்.

நான் கவிஞனாய்..

ஊனங்களை உசுப்பிவிட ஆசைதான்
ஊழல்களை ஒழித்துவிட ஆசைதான்
காதலுக்கு கண் செதுக்க ஆசைதான் - இந்த
காலத்துக்கும் கற்றுக் கொடுக்க ஆசைதான்.

நான் கவிஞனாய்..

எண்ணங்களை எடுத்தியம்ப ஆசைதான்
எளிமையில் ஏழை போல் என் கவியிருக்க ஆசைதான்
குழந்தைக் கோபம் கொள்ள ஆசைதான் -சிறு
குடத்தினுள் குள நீச்சல் போட ஆசைதான்.

நான் கவிஞனாய்..

தாய் போல் அரவணைக்க ஆசைதான்
தாய்மை சுகம் அனுபவிக்க ஆசைதான்
மொழிக்கும் கவிக்கும் உயிர் கொடுக்க ஆசைதான்
மொத்த பூமிக்கும் உதவிட ஆசைதான்.

நான் கவிஞனாய்..

மெழுகு போல் உருகிவிட ஆசைதான்
மக்கள் இருள் நீக்கிவிட ஆசைதான்
உரிமைக்காய் உயிர் துறக்க ஆசைதான் - பின்பு
என் கவியில் நான் சுவாசிக்க ஆசைதான்.

Post Comment

Saturday, March 02, 2013

நான் ஒரு உரிமைப் போராளி.



இருளின் ஒளிக்குள்
இரவின் உயிருக்குள்
ஒரு உரிமைக் குரலின்
ஒலிப் பிரளயம்

வாழ்வின் வலிக்குல்
அடக்கு முறைக்குள்
இந்த கவிதைப் பிரியனின்
கவி முழக்கம்

உவமைகள் துறந்து,
உரிமைகள் இழந்து
ஓரமாய் ஒடுங்கி ஒலிக்கிறது
என் கானம்..

தன்னை தொலைத்து
தன்மானம் களைந்து
தரம் கேட்டுக் கிடக்கிறது
இப் பூகோளம்..


என் வாழ்கைச் சுவர்களை
வலிக் கற்கள் கொண்டு
வடிமைத்திருக்கிறது காலம்..

மூச்சு முட்டும் இருளிலும்
அதை விட மிஞ்சியதாய்
பிழிந்தெடுக்கிறது ஒரு சோகம்..

நம்பிக்கை இறுக்கிப் பிடித்து
முயற்சியை மூச்சாக்கி
ஓராயிரம் சுவரையும்
தகர்த்து விடுவேன்.

அதே வலிக் கற்கள் உரசி
அக்கினி செதுக்கி
உண்மைகள் உரத்து உரைத்திடுவேன்.

சமூகப் பார்வையில்
நான் சிறுபான்மை,
தாழ்த்தப் பட்டவன்,
உரிமை இழந்தவன்.

காலச் சொற்கள்
கசப்பாயினும்
எண்ணத்தின் பரிணாமத்தில்
நான் ஒரு உரிமைப் போராளி.

என் காகிதக் கிருக்களை
காற்றுச் சுமக்கும் வரை
எனக்கு மரணமில்லை.

உண்மைகள் என்னுடன் இருக்கும் வரை
என் நிழலுக்கும் பயமில்லை.

மீண்டுமொரு முறை அழுத்திச்
சொல்லி விடுங்கள்
"உரிமை இழந்து உயிர் வாழ்வதை விட
உயிரைத் துறந்து உரிமை சுவாசிப்பதே மேல்.."


வாழவேண்டும் என்பது
என் ஆசைதான்
உரிமைகள் இழந்து அல்ல...




Post Comment

Friday, January 25, 2013

"கைகொடுப்போம் வாருங்கள்."


கனவும், கற்பனையும்
கொட்டிக் கிடக்கிறது
நிஜங்கள் இன்று
எதிலுமே இல்லை.

மெய்யும், பொய்யும்
கலந்தே உலகை ஆழ்கிறது.
உண்மையை உணர்த்த
கைகொடுப்போம் வாருங்கள்.

பிரிவினை பூமியில் படர்ந்து விட்டது
மொழியால், ஜாதியால், நிறத்தால்..
பூமிக்கு புரிய வைத்து ஒற்றுமையை
ஊக்குவிக்க கை கொடுப்போம் வாருங்கள்.

"அமைதியாய் வாழ்பவனை
அடக்க நினைக்கிறான்"
அகராதியை விட்டே அடிமையை துரத்த
கை கொடுப்போம் வாருங்கள்.

வாழ்க்கைக்கு வழி காட்டிய
பெற்றோர்கள் இன்று
அன்றாட உணவுக்காய்
வீதிகளில்..

அவர்களின் பசி போக்கி
அன்பால் அரவணைக்க
கை கொடுப்போம் வாருங்கள்.

யுத்த அரக்கனால் உறவிழந்து
பாசத்துக்காய் பரிதவிக்கும்
குழந்தைகள் ஆயிரம்..

அவர்களின்
கண்ணீர் துடைத்து
பாசத்தை பரிசளிக்க
கை கொடுப்போம் வாருங்கள்.

நல்லதைத் தூண்ட..
தீயதைத் துண்டாக்க..
கை கொடுப்போம் வாருங்கள்.

மனிதத்தை வளர்க்க..
மனிதனாய் வாழ..
கை கொடுப்போம் வாருங்கள்.

Post Comment

Thursday, January 17, 2013

உன்னைப் பிரிய மாட்டேன்.


கண்ணுக்குள் உன்னை வைத்து
இமைகளை மூடுகிறேன்,
என் இரவின் கனாக்களிலும்
நீ வர வேண்டும் என்று..

இதயத்துக்குள்
நினைவுகளாய் நிரம்பிவிட்ட
உன் ஞாபகங்கள்,
அத்துணை அணுக்களிலும்
இரத்த ஓட்டமாய் கலந்து..

என் ஒவ்வொரு அசைவிலும்
உன்னையே பிரதிபலிக்கிறது.

அழகிய நினைவுகளும் நீ.
அழகிய நிகழ்வுகளும் நீ.
அழகிய என் நிதர்சனமும் நீ.

என் காதோடு உன் குரல்
கைபேசி வழியே ஊடுருவ..
உலகையே மறந்து போகிறேன்,
உனக்குள் என்னை புதைத்தவனாய்.


வழிகளில் விழி வருடி
நீ செல்கின்ற நேரம்..
உன் மௌனத்துக்குள்
உறைந்து விடுகிறேன்,
விழிகளை மட்டும் அசைத்தவனாய்.

எந் நேரமும் உந்தன் நினைப்பு,
உன்னை பார்க்க மனம் துடிக்கும் துடிப்பு,
நீ அருகில் இல்லாது நான் தவிக்கும் தவிப்பு,

நினைப்பு, துடிப்பு, தவிப்பு,
இவை மூன்றையும் கலந்து
காலம் செய்யும் நகைப்பு,
இந்தக் காதல்.

போராட்டக் கடலில்,
மூச்சுப் பிடித்து சுழியோடி
நான் கண்டெடுத்த காதல் சிற்பிக்குள்,
உயிர் வாழ்ந்த முத்து நீ.

மூச்சே நின்றாலும்..
உன்னைப் பிரியப் போவதில்லை.

Post Comment

Saturday, January 05, 2013

"நல்லவனில்லை"



காதலே யார் நீ?
ஆணையும், பெண்ணையும்
இணைக்கும் பாலமா?
அல்லது அவர்களைப்
பிடித்த சாபமா?

வாழ்வில் ஒளியூடுகிறாய்
சில நேரம்..
வாழ்கையை எரிக்கிறாய்
பல நேரம்..

மாறி மாறி உருவெடுக்கிராயே..
பச்சோந்தி பெத்த பிள்ளையா நீ?

உன்னை வெறுத்தவர்கள்
மணமேடையில் உறவாட,
உன்னை அணைத்தவர்கள்
பின மேடையில் வாடுவதா??

உன் நியாயம்
புரியாப் புதிராகிறதே..

கனவுக்குள்
கற்கண்டாய் இருக்கிறாய்.
பல கவிதைக்கும்
கருவாய் இருக்கிறாய்.
செல்லாக் காசுகளையும்
தங்கமாக்கி ஜொலிக்கிறாய்.
தோழனாய் சில நேரம்
தோள் கொடுக்கிறாய்.




கல்லறைக்குள்
முதற் கல்லாய் இருக்கிறாய்.
கண்ணீருக்கும்
பிறப்பிடமாய் அமைகிறாய்.
எமனுக்கு
தூதாய் வருகிறாய்.
இதயத்தை கிழிக்கும்
முள்ளாய் வலிக்கிறாய்.

நன்மைக்கும், தீமைக்கும்
காரணமாய் இருக்கிறாய்.

உண்மையை சொல்
யார் நீ?

நிச்சயமாய் "நல்லவனில்லை."

Post Comment

Tuesday, December 25, 2012

கொலைகார நண்பன்..


என் கண்கள் பார்க்க
வெறுத்தது
இவன் முகமே..

ஒரு கொடூரச் சம்பவம்
சுமந்து பதை பதைக்கிறது
என் மனமே..

சிந்தனைச் செல்களுக்குள்
ஒரு சோகக் கீற்று
துளிர் விடுகிறது..

நானும்,அவனும்
நல்ல நண்பர்கள் தான்.
அந்த அனர்த்தத்துக்கு முன்னர்..

அப்பா.. அறிமுகப்படுத்தியவன்
இவனோடு விளையாட
விலைகள் இல்லை.

எனக்கு காதலைக் காட்டியவன்.
என் காதலியாய், அவளை
அவனுக்குத்தான்
முதலில் காட்டினேன்.

இன்று..
பல கோடி உயிர்களைப் பறித்தவன்
இவனைத் தண்டிக்க உலகச் சட்டத்துக்கு
தெரியவில்லை..

அன்றில் இருந்து
இவனோடு உறவாடுவதில்லை
நான்...

அதன் பின்பு
இன்று தான் என் முதல் தரிசனம்.
இதுவும் கடைசியாகத்தான் இருக்கும்.

அவன் நடத்திய
மனித வேட்டையின்
வினாடிகளே என் ஞாபக அணுக்களில்..

இதயம் வெடித்து இரத்தமாய்
கண்ணீரைக் கக்கியது கண்கள்.

திரும்பும் திசை எங்கும்
மனிதப் பிணங்களே..
என் விழிகளில் தெரிகின்றன.

நாலு திசையிலும்
உணர்விழந்த கதறல்களே..
காதுகளில் ஒலிக்கின்றன.

நினைவுகள் பின்நோக்கி நகர
நான் மெல்ல மெல்ல
அவனை முன்நோக்கி நடந்தேன்.


என் மடியில்
உயிர் துறந்த ஒரு சிறுமி,
நான் பிறக்கி எடுத்த பிணங்கள்,

பிரியும் உயிரை அருகில் இருந்து
அனுபவித்த நிமிடங்கள்,
உடையின்றி, சொத்தின்றி
நிர்வாணமாக்கப் பட்ட மனிதர்கள்,

பயத்துடன், பரிதவிப்புடன்,
பதட்டத்துடன் உறவுகளைத் தேடிய விழிகள்..

இவைகளே..
இவனைப் பார்க்கும் போது
என் கொடூர நினைவுக்குள்
இன்றும் ஒலிக்கும் சோக கீதங்கள்.

பேச மறுத்தது வாய்.
உள்ளம் பேசியது..

"ஏய் கொலைகாரக் கடலே!
நாங்கள் விட்ட கண்ணீர் சேர்த்து
ஒரு சமுத்திரம் செய்து
உன்னை அழித்தொளிக்கிறேன் பார்"
என்று சவால் விட்டது
என் சிறிய மூளை.

அமைதியாய் வந்து
என் பாதம் தொட்டு
மன்னிப்புக் கேட்டுச் சென்றது..
அந்த அலை..
கொலைகார நண்பனின் தூதாய்.

வந்த அலையிடம்
வாய் விட்டுச் சொன்னேன்.
"மறக்கவே முடியாத போது
மன்னிப்பு எங்கிருந்து சாத்தியம்??"

Post Comment

Thursday, December 06, 2012

"வறுமைக் காற்று"


சோகமாய் சொல்லும்
கவியிலும் சுவாரஸ்யம்
உண்டு.

ஏழையவன் வாழ்வைச்
சொல்லுகையில்
கண்ணீரே உண்டு.

வறுமையின் வலையில்
வசப்பட்டவனே
வாழ்வினில் வலி சுமப்பவன்.

தண்ணீரில் விழுந்த கற்கள் போல்,
வறுமைக் கண்ணீரில்
மூழ்கிப் போனவன் அவன்.

தீயுடன் உறவாடிய
கைக் குழந்தை போல்,
நிஜத்துடன் உறவாடும்
அவனும் என்றும்
காயம் கண்டவனே...

வறியவன் வாழ்வு பற்றி
இன்று அன்றாட அரசியல்..
நெஞ்சில் வருத்தமின்றி
மேடையில் அவன் உணர்வுகள்..

வியாபாரம் செய்கிறான்
அரசியல்வாதி
"ஐயோ..." அவனையே
தலைவன் என்கிறான்
அந்த அறியாவாதி.

பக்கத்து வீட்டுப் பவித்திராவோ?
பாலைவன ஆபிரிக்காவோ?
வறுமையில் பிறந்தவன்
வாழ்விழந்து தவிக்கிறான்.


உலகின் ஒரு மூலையில்
உணவில்லாமல் உயிர்விடுகிறது
ஒரு கூட்டம்.

மறு மூலையில் உணர்வில்லாமல்
உணவை வீணடிக்கிறது
ஒரு கூட்டம்.

ஆசையும், பணமும்
மனிதனை ஆளும் வரை
உதவும் கரங்களுக்கு
உயிரோட்டமில்லை.

வறுமைத் தொற்று நோய்
அழியவும் போவதில்லை.

கனவு உலகத்தில்
வறுமை ஒழிப்புக்கே
முதலிடம்.

வறியவன் வரியாய்
உரத்து ஒலிக்கிறது
இக் கவி என் கனவு உலகில்...

Post Comment

Friday, November 23, 2012

"அழாதே தாயே.."


"அழாதே தாயே.."
ஒரு உவமை தேடுகிறேன்
உன் கண்ணீர் வலி சொல்ல.
ஒன்று கூட கிடைக்கவில்லை
இந்த கவிப் பிரியனுக்கு.

கோடிக் கண்கள் அழுகிறது
உன் நிலை கண்டு.
குருதியும் உறைந்து கிடக்கிறது
உன் மண்ணின் துயர் கண்டு.

"உன் தேசம் அழிகிறது என்று அழுகிறாயோ?"
கண்ணீர் நிறுத்திக் கொள்.
கடைசி வரை நிலைக்கும் அது
உன் மனதில் எழுதிக் கொள்.

"வழியனுப்பி வைத்த மகன்
வரவில்லை என்று அழுகிறாயோ?"
துயர் துடைத்துக் கொள்,
பல இலட்சம் உயிர்கள்;
இன்று உன் மகனாய்,
நினைத்துக் கொள்.


உன் மகன் இரத்தம் படிந்த
பூமி இது.
உன் கண்ணின் ஈரம் கசிந்து
அதை கரைக்கக் கூடாது.

வரலாறு சொல்லப் போகும்
உன் வீர மகனின்
தியாகச் சான்று அது.

நீ அழுவதால் நானும் அழுகிறேன்.
உன்னுடன் இருக்க உயிர் துடிக்கிறேன்.
காரணம் நானும், உன் மகன் தான்...

"அழாதே தாயே.."
சுவன வாசலில் உன் மகன், என் சோதரன்
நமக்காய் காத்திருக்கிறான்.
"அழாதே..."

Post Comment

Monday, November 19, 2012

"என் கரமே உன்னைக் கொல்லும்"


மரணப் பீதி காற்றோடு
மனித தசைகள் அம் மண்ணோடு
என் கரமும் கவியின் வரியோடு
இரத்தம் வடிக்கிறது என் கண்ணோடு

நோபல் பரிசுகள் எங்கே?
மனித உரிமை குழுக்கள் எங்கே?
ஐநா எங்கே? அமெரிக்கா எங்கே?

உலகம் எங்கே? ஊடகம் எங்கே?
சுதந்திரம் எங்கே?
பாலஸ்தீன மக்களின் சுவாசம் எங்கே?

பூமிக்குள் புதைந்த மாதுவின்
கருகிய தேகத்துடன்
கருகிவிட்டது மனிதம்

அவள் கருவுக்கும்
கல்லறை நிலை கண்டு
கரைகிறது என் இதயம்

வெள்ளைச் சிரிப்பில்
என் உள்ளம் வென்ற ரோஜாக்கள்
கரிக் கருப்பாய் காட்சி கொடுப்பதேனோ ?

ஈனப் பிறவியான
இதயக் கனிவற்ற கயவனின்
வஞ்சகம் தானோ....


உன் பால் தேகத்தில்
குண்டு பாய்ச்சியவனுக்கு
உலகம் கேட்க உரத்துச் சொல்கிறேன்
"என் கரமே உன்னைக் கொல்லும்"

என் மௌன சப்தத்தில்
இடியாய் ஒலிக்கிறது
ஒரு சமூகத்தின் கடைசிக் கதறல்

ஓ சமூகமே!
உன்னை கதரவிட்டவனுக்கும்
கடைசியாய் சொல்கிறேன்
"என் கரமே உன்னைக் கொல்லும்"

வெறியாட்டம் ஆடும்
இஸ்ரேலியச் சொறிநாயே
மீண்டும் சொல்கிறேன்
"என் கரமே உன்னைக் கொல்லும்"

Post Comment

Friday, January 06, 2012

என்னைக் கொன்று விடு..


சுவாசமாய் நினைத்து
உன்னை சுவைத்து
சுடுபட்டுப் போன நாட்கள்
போதும் அன்பே..

காதல் தீயில்
கருகிப்போன இதயத்துக்கு
மருந்து போட்டே நகர்கிறது
என் மற்றைய வினாடிகள்..

தொடரும் நிழல் போன்று
உன் நினைவும்..
உளி செதுக்கிய சிற்பமாய்
உன் நாமமும்..
என்னோடு ஒட்டிக்கொண்டன.

பாலைவனத்தில் பட்டமரமாய்
உன்னை சுமந்து கொண்டு
பரிதவித்து நிற்கிறேன்..

கொடிய வறட்சியிலும்
நீ என்னுள் வற்றிப் போகவில்லை.
என் கொடிய நிமிடங்களிலும்
நான் உன்னை கழட்டி ஏறியவில்லை.

ஒருமுறை நிதர்சனமான
மரண வலியையும்,
ஒவ்வொரு வினாடியிலும்
தந்து சென்றவள் நீ..

பெண்ணே!
உன்னிடம் ஒரே விண்ணப்பம்?

என் கண்களின் ஈரம்
வற்றிப்போவதற்க்குள்
என்னைக் கொன்று விடு..

Post Comment

Wednesday, January 04, 2012

தை பிறந்தால் வழி பிறக்கும்?

(சூரியன் fm இன் ரீங்கார நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்பில் எழுதப்பட்ட கவிதை இது. இவ்வருடத்தின் முதல் பதிவு என்பதால் இந்த கவிதை உங்கள் இவ் வருட சிந்தனைக்காகவும்..)


வலிகள், வதைகள்,
கொடுமைகள், கொடூரங்கள்...
இவர்களின் வாழ்வாகிப் போனது.

விலை மதிப்பற்ற செல்வம் கல்விக்காய்..
புத்தக மூட்டை சுமக்க வேண்டிய வயதில்,
அன்றாட பசி போக்க சில சில்லறை காசுகளுக்காய்..
சுமை மூட்டைகள் இவர்களின் முதுகில்.

வறுமையையும், பசியையும்
வாங்கிக் கொண்டு
இவர்கள் இழந்தது ஏராளம்.

கனவுகள் இல்லை,
கல்வியில்லை,
கருணையில்லை,
உடையில்லை,
உறவில்லை,
உறைவிடம் இல்லை.

தொடரும் இழப்புக்களுக்கு
நேரமின்மையால்
முற்றுப் புள்ளி வைக்கிறேன்.

மனக் கொதிப்பால் என்
கண்கள் கண்ணீரை கக்கிவிட
கவி வடிக்கிறேன் இவர்கள் விடிவுக்காய்.

மனிதனின் மனச் சட்டங்கள்
முடங்கிக் கிடக்கும் போது..
ஐ.நா சட்டமோ,
அரசாங்க சட்டமோ,
காப்பாற்ற போவதில்லை இவர்களை.

தெருக்களில்,
வேலைத்தளங்களில்
பிஞ்சுகள் பிழியப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நம் கண்களும், மனமும்
உறங்கி கொண்டதே தவிர
இன்னும் விழிக்கவில்லை.

"குழந்தைத் தொழிலாளிகள்."
தமிழில் மட்டும் அல்ல,
உலக மொழிகள் அனைத்திலும்
தவிர்க்கப் பட வேண்டிய வார்த்தை.

இச் சமூகக் கொடுமையை
தடுக்க இவ்வாண்டிலே
வழி சமைப்போம்.
நமக்கு நாம் வினா தொடுத்து
நம் மனச் சாட்சிகளை
விழிக்க வைப்போம்.

வரும் தைப் பிறப்பில்
இவர்களின் வலி நீங்கி
வாழ வழி பிறக்கட்டும்.
குழந்தையின்
சிரிப்பொலி கேட்டு
பூமி சுற்றட்டும்.

எல்லோரும் நம்புவது போல்
நானும் நம்புகிறேன்.
"தை பிறந்தால் வழி பிறக்கும்?"

Post Comment

Friday, December 30, 2011

உன்னைப் பிரியமாட்டேன்!!


கண்ணுக்குள் உன்னை வைத்து
இமைகளை மூடுகிறேன்.
என் இரவின் கனாக்களிலும்
நீதான் வரவேண்டுமென்று..

இதயத்துக்குள் நினைவுகளாய்
நிரம்பிவிட்ட உன் ஞாபங்கள்..

அத்துணை அணுவிலும்
இரத்த ஓட்டமாய் கலந்து
என் ஒவ்வொரு அசைவிலும்
உன்னையே பிரதிபலிக்கிறது.

அழகிய நினைவுகளும் நீ,
அழகிய நிகழ்வுகளும் நீ,
அழகிய எதிர்காலமும் நீ..

என் காதோரமாய்
கைபேசியில்
நீ பேசுகையில்..

உலகையே
மறந்து போகிறேன்
உன்னை மட்டும்
நினைத்தவனாய்..

கூட்டமாய் நீ வருகையில்
கண்களால்
உன்னோடு கதை பேசி..

மௌனத்துக்குள் உறைந்து விடுகிறேன்
கண்களை மட்டும் அசைத்தவனாய்..

எந் நேரமும்
உந்தன் நினைப்பு,
உன்னை பார்க்க
மனம் துடிக்கும் துடிப்பு,
உன்னை காணாமல்
நான் தவிக்கும் தவிப்பு..

நினைப்பு, தவிப்பு, துடிப்பு.
இவை மூன்றையும் கலந்து
காலம் செய்யும் நகைப்பு
இந்த காதல்..

போராட்டம் நிறைந்த
வாழ்வெனும் கடலில்,
மூச்சுப்பிடித்து சுழியோடி..
நான் கண்டெடுத்த காதல் என்ற
சிற்பிக்குள்,
எனக்கு கிடைத்த முத்து நீ.

பெண்ணே,
மூச்சே நின்றாலும்
உன்னைப் பிரியபோவதில்லை.

Post Comment

Wednesday, December 14, 2011

புரண்டு போன பூமி.


அன்று,
உழைப்பவனின் உழைப்பை
மதிப்பிடத்தான்
பணம்.

இன்று,
உறவுகளின் பாச
அளவீட்டுக் கருவியை
மாறிப் போனது
இந்தப் பிணம்.

முயற்சிக்கு முன்னுரிமை
இருந்தது
அன்று.
அதிஷ்டத்துக்குள் பூமி
மூழ்கிப்போனதால்,
முயற்சிப்பவன் எல்லாம்
மூச்சடைகிறான்
இன்று.

உறவுகளுக்கும்,
உயிரோட்டமில்லை.
முயற்சிக்கும்,
முன்னுரிமையில்லை.

உறவுகளில்
உயிரோட்டம் இருந்தால்,
(இன்று)தாயை
தள்ளிவைக்கமாட்டான் பிள்ளை.

முயற்சியே
முதல் என்றால்,
என்றோ முன்னேரியிருப்பான்.
மீனவனுடன் விவசாயி??

அசாத்தியத்தை
சாத்தியமாக்கி விட்ட உலகம்,
சாத்தியத்தை இன்று
அசாத்தியம் என்கிறது.

தீ
சுட்ட காய வலியை விட,
உலகை நினைத்து எழுதும்
வரியோடு வலிக்கிறது
என் இதயம்.

காகிதத்தில்
கவி கிறுக்குகிறேன்,
கண்டு கொள்பவர்
யாருமில்லை.

குரலை எழுப்பி
கூச்சலிடுகிறேன்,
கேட்பவரும்
அருகிலில்லை.

என் இயலாமையை மறைத்து,
உங்களிடம் ஒப்படைக்கிறேன்?
இவ் வரிகளையும் இவ்வுலகையும்.

புரண்டு போன பூமியை
நிமிர்த்த முயற்சிப்பீர்கள்
என்ற நம்பிக்கையில்.

Post Comment

Friday, December 09, 2011

கருவி ஒன்றை கண்டுபிடி!

(சூரியன் fm இன் ரீங்காரம் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு எழுதப்பட்டு 23 /11 /2011 அன்று வாசிக்கப்பட்ட கவிதை)


கரைந்து விட்டது
நேற்றைய பொழுதுகள்.
கருகிக்கொண்டிருக்கிறது
இன்றைய நிஜங்கள்.
முன்நோக்கி நகர்கிறது
நாளைய நிகழ்வுகள்.

உலகம் இயங்கும் வேகத்திற்கு,
ராகட் கூட இரண்டாம் பட்சம்தான்.

உலகின் சுழலுக்கு ஈடுகொடுத்து,
பசுமை நினைவுகளை
எனக்குப் படம் போட்டுக் காட்ட,
கண்டுபிடி ஒரு கருவி.

இழந்தது எனக்கு
வேண்டும்,
மீண்டும்...

என் காதோரம் கதை சொல்லும் பாட்டி,
நான் தூங்கிய தாய்மடி,
பசுமையான பாடசாலை நாட்கள்,
பழகிப் பிரிந்துபோன நண்பர்கள்,
பாசமாய் அரவணைத்த உறவுகள்......
இவ்வாறு இழந்தவை ஏராளம்.

"எமக்குக் கிடைக்கும் அனைத்தும்
எம்மை விட்டுப் பிரியும்
" எனும் வாழ்வின்
நியதி உடைத்தெறிய,
கருவி ஒன்றைக் கண்டுபிடி.

உன் புதிதான கருவி பிறக்கட்டும்.
இழந்ததால் வலி சுமக்கும் உள்ளங்கள்,
வலி நீங்கட்டும்.

இழந்ததை மீண்டும் இயக்க
கருவி ஒன்றைக் கண்டுபிடி.


Post Comment

Monday, December 05, 2011

மரணித்து விட்டது மனிதம்



காலத்தின் கட்டளைக்குள்
கட்டுண்டு போன நாம்,
அக் காலத்தை விட வேகமாய் ஓடுகின்றோம்.
எதற்காய் ஓடுகின்றோம்?

எதுவுமே நிலையில்லா இவ்வுலகில்
எதை நிலையாக ஓடுகின்றோம்?

நான்?
நீங்கள்?
நம் குடும்பம்?
மனித உயிர்?
பணம்?
பாசம்?
ஆசை?
காதல்?
இதில் எது நிலையானது?

வானம்?
அதில் தோன்றும் நிலவு?
கடலை பிழக்கும் சூரியன்?
ஓயாமல் அடிக்கும் அலை?
அந்த அலை தந்த நுரை?
இதில் எதை சொல்ல முடியும்
நிலையானது என்று?

பணத்தை நோக்கி ஒரு கூட்டம்,
பாசத்தை நோக்கி ஒரு கூட்டம்,
அறிவை தேடி ஒரு கூட்டம்,
ஆகாரத்தை தேடி ஒரு கூட்டம்..

இப்படி ஓடிக்கொண்டே இருக்கிறது
நம் வாழ்வும் வாழ்நாளும்...

வாழப் பிறந்துவிட்ட மனிதனுக்கு
மரணம் மட்டுமே நிதர்சனம்.
மற்றவையெல்லாம் மாயமாய்
மறைந்து போகும் அதிசயம்.

என் ஒவ்வொரு பிறந்தநாளும்
எனக்குச் சொல்லும் சேதி
தெரியுமா உங்களுக்கு?

"மரணத்தை சந்திக்க
நீ ஒரு வருடம்
முன் வந்து விட்டாய்" என்பதுதான்.

மாற்றம் மட்டும் அல்ல,
மரணமும் மாற்றா முடியாததுதான்...

நம் ஓடும் பாதையின் முடிவு மரணம்.
அதை மறந்து விட்டதால்தான்,
இன்று மரணித்து விட்டது மனிதம்.

மரணத்தை நினைப்போம்,
மனிதத்தை வளர்ப்போம்.

Post Comment

Tuesday, November 22, 2011

விடையை தேடுங்கள் உறவுகளே!



சோகமாய் சொல்லிச் செல்லும்
கவிகளில் கூட,
சில சுவாரஸ்யம் இருக்கும்.

ஏழை என்று பிறந்தவன்,
வாழ்வு பற்றி சொல்லும் போது
என்னதான் இருக்கும்?

வறுமையின் வலைக்குள்
வசப்பட்டவர்கள்தான்,
வாழ்கையில் நிர்பந்திக்கப்பட்டவர்கள்.

ஆற்றுக்குள் எறியப்பட்ட
கற்கள் போல், மூச்சுத்திணறி
மூழ்கிப் போனார்கள்,
காலத்தின் கல்லறைக்குள்.

நெருப்போடு விளையாடும்
கைக்குழந்தை போல்,
நிஜத்தோடு போராடும் அவர்கள்,
என்றும் காயப்பட்டவர்களே!.

அரசியல் மேடையில்
தீனியாய் மாற்றப்பட்டுவிட்டது,
இந்த ஏழையின் வறுமை வாழ்க்கை.

அவை கேட்டு
கைகொட்டிச் சிரித்தே,
பழகி விட்டது நம் நிலைமை.

பக்கத்து வீடு பவித்திறாவோ?
பாலைவன ஆபிரிக்காவோ?
வறுமைக்குள் வசப்பட்டவன்,
வாழ்விழந்து தவிக்கிறான்.

ஆசையும், பணமும்
இவ்வுலகை ஆளும் வரை
அழியப்போவதில்லை வறுமை
இவ்வுலகை விட்டு....

ஒரு நேரச் சோறில்லாமல் உறங்கும்
விழிகள் எத்தனை?
உறங்க இடமில்லாமல் ஒதுங்கும்
உறவுகள் எத்தனை?

இதை நினைத்துப் பார்க்கும்
உள்ளங்கள் எத்தனை?
அதை மொழி பெயர்க்கும்
குரல்கள் எத்தனை?

அவை கேட்டு
உதவும் கரங்கள்
எத்தனை?

வினாவுக்கான விடை
தெரியவில்லை எனக்கு
???????

வானை பிளக்கும் இடியாய், வறுமைக்குள்
புதைந்தவர்களின் உணர்வுகள்,
உரத்து; வினாவாக ஒலிக்கிறது
இக்கவியோடு...

நீங்களும்
"விடையை தேடுங்கள்
உறவுகளே"

Post Comment

Thursday, June 09, 2011

உன்னைக் காதலிப்பதால்....



அருக்கப்பட்ட தொப்புள் கொடிக்குள்ளயே
அடங்கிவிடுகிறதா தாயின் பாசம்?
மறக்கப்பட்ட உன் நினைவுக்குள்
மங்கிவிடுமா என் காதல்??

உருகி உருகி மெழுகாவேன்,
அதிலும் உனக்கே உயிராவேன்.
உனக்காய் நானும் இருளாவேன்,
அதல் நீ காணும் கனவும் நானாவேன்.

இன்று என் நினைவில்....
நீ சிரித்துச் செல்லும் நொடிகளில்
என்னை சீரழித்துச் செல்கிறாய்.
நீ உதிர்த்துச் செல்லும் மௌனங்களில்
ஆயிரம் கவி சொல்லிச் செல்கிறாய்.

நீ பிரிந்த நிமிடம் எனக்கு சுடவில்லை.
காரணம் நீ வாழ்ந்த நிமிடம் எனக்குள் குளிர்வதால்...
உன் நினைவுகள் இன்று எனக்கு கசப்பாயில்லை.
காரணம் இன்றும் அது அழகாய் இனிப்பதால்...

நான் உன்னை என்றும் வெறுக்கவில்லை.
காரணம் இன்றும் உன்னைக் காதலிப்பதால்...

நீ சொன்ன வார்த்தைதான் எனக்கு வாழ்வானது.
நீ தந்த காதல்தான் எனக்கு பலமானது.
நீ தந்த நினைவுகள் எனக்கு ஒளியானது.
நீ தந்த கண்ணீரே என்னுடைய கவியானது.

உன்னை நினைந்து எரிந்த இரவுகள் கடந்து,
இதமாய் உறங்கும் உறவுகள் தொடர்கின்றன.
இன்று என் கனவுக்குள் உன் அழகிய நினைவுகளே...

என்னை நேசிப்பதை நிறுத்திவிடு என்றாய்.
நிறுத்திவிட்டேன். நீ சொன்ன அடுத்த நொடியிலயே,
ஆனால் உனை தான் சுவாசமாய் சுவாசிக்கிறேன்
என் அடுத்த நொடியில் இருந்து...

நேசிப்பது மட்டுமல்ல,
சுவாசிப்பதும் காதல்தானே,
சொன்னவளும் நீதானே.

உன்னோடு வாழ்ந்த நான்,
உன்னை நினைத்து வாழப் பழகிக் கொண்டேன்.
காரணம் இன்றும் உன்னைக் காதலிப்தால்...
என் உயிருக்குள்ளும் நீ வாழ்வதால்...

Post Comment