Friday, August 13, 2010

இறந்த ஆண் - பெண்ணுக்கு கர்நாடாகாவில் திருமணம்!

Virakesari.

இறந்து போன ஆணுக்கும், பெண்ணுக்கும், அவர்களது உறவினர்கள் திருமணம் செய்து வைத்த வினோதமான சம்பவம் கர்நாடகா மங்களூரில் நடந்தது.

கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் யாதவ். இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தவர். ஏழு ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானில் நடந்த சண்டையில் இறந்து விட்டார். இறக்கும் போது அவருக்கு 31 வயது. திருமணமாகாதவர்.

அதே போல், பரமேஸ்வர பூஜாரி என்பவரின் மகள் வரலட்சுமி. உடல்நல குறைவு காரணமாக, 1986இல் இறந்து விட்டார். அப்போது அவருக்கு 11 வயது. இவர்கள் இருவரும் திருமணமாகாமலேயே இறந்ததால், அவர்களின் குடும்பத்துக்கு பாதிப்பு ஏற்படுமென்றும், வேறு யாருக்கும் திருமணமாகாதென்றும் சிலர் கூறினர்.

இதனால், அவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்தனர். ஜோதிடர்கள், மந்திரவாதிகள், பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டனர். அப்போது அவர்கள்,

"இறந்து போனவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால், பிரச்சினை தீர்ந்து விடும்" என்றனர்.

இந்த இரண்டு சம்பவங்களுமே, வெவ்வேறு இடங்களில் நடந்தவை. யாதவ் குடும்பத்தினரைப் பற்றி வரலட்சுமி குடும்பத்தினருக்கு தெரியாது. அதே போல், வரலட்சுமி குடும்பத்தினருக்கு யாதவ் குடும்பத்தினரை தெரியாது.

வரலட்சுமிக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தகுதியான இறந்து போன மாப்பிள்ளை யாராவது உள்ளாரா என, அவரின் குடும்பத்தினர் தீவிரமாக விசாரித்து வந்தனர். யாதவின் குடும்பத்தினரும் அதே போல் விசாரித்து வந்தனர்.

அப்போது தான், இருவர் குடும்பத்தாரும் ஒரே மாதிரியான நிகழ்வுக்காக காத்திருப்பது தெரிய வந்தது. இறந்து போன யாதவுக்கும், வரலட்சுமிக்கும் திருமணம் செய்து வைப்பதென, முடிவு செய்தனர். பொருத்தம் பார்ப்பது, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சடங்குகள் வழக்கம் போலவே நடந்தன.

மங்களூரு புறநகர் பகுதியான பொலாலி என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இரண்டு தனித்தனி இருக்கைகள் அலங்கரிக்கப்பட்டு, மேடை மீது வைக்கப்பட்டன.

அவற்றில் ஒன்றில் மாப்பிள்ளைக்கான புதிய உடைகள், தலைப்பாகை, மாலை ஆகியவை வைக்கப்பட்டன. மற்றொரு இருக்கையில் மணப் பெண்ணுக்கான புடவை, தாலி, மாலைகள் ஆகியவை வைக்கப்பட்டன.

மந்திரங்கள் முழங்க, திருமண நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. மணமக்கள் வீட்டார் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்,

"யாதவுக்கும், வரலட்சுமிக்கும் சிறப்பாக திருமணம் நடந்து விட்டது. அவர்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வலம் வருவர். இனி மேல், எங்கள் குடும்பத்துக்குள்ள திருமண தடைகளும் நீங்கும்"என்றனர்.

"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன" என்ற பழமொழியின் உண்மையான அர்த்தம் இதுதானோ?


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment