Tuesday, August 10, 2010

மலர்களின் நறுமணம் மறைந்து போகும் அபாயம்!:ஆய்வில் தகவல்

Virakesari.

நமக்கெல்லாம் பூக்களின் மணம் என்றால் பிடிக்குமல்லவா?

இயற்கை மணத்தை அள்ளித் தருவதில் பூக்களுக்குத்தான் முன்னுரிமை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் இவற்றுக்கும் கூட மணம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காரணம் யார் தெரியுமா?

நாம்தான். நாம் பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை தான் மலர்களின் மணத்தைக் கபளீகரம் செய்து விடுவதாக ஆய்வொன்று கூறுகிறது.

காற்றுமாசின் விளைவாக இயற்கைச் சூழல் மாசடைவது நாம் அறிந்ததே. இது தொடர்பான ஆய்வில், வாகனப் புகை, பூக்களின் இயல்பான நறுமணத்தைச் சிதைத்து விடுகிறது என்ற வேதனையான தகவல் தெரிய வந்திருக்கிறது.

இதனால் நமக்கென்ன பிரச்சினை என்கிறீர்களா?

முதலில் தேன் குடிக்கும் வண்டுகளுக்கும், வண்ணத்துப் பூச்சிகளுக்கும் தேனீக்களுக்கும் திண்டாட்டம். பூச்சிகள் பூக்களிலிருந்து தேன் அருந்துவது இரண்டாம் காரணம்தான்.

வாகனப் புகையால் பாதிப்பு

மலர்கள் மணம் பரப்பி விளம்பரம் செய்வதே, மகரந்தச் சேர்க்கை செய்யும் பொருட்டு தேனீக்கள், வண் ணத்துப்பூச்சிகளைத் தன்னை நோக்கி ஈர்ப்பதற்காகத்தான். வாகனப்புகையால், பூக்களின் மணம் குறைந்தால் மலர்களின் இருப்பிடம் தெரியாமல், பூச்சிகள் திணறித் திண்டாடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் ஜோஸ் ஃபியுயென்டாஸ் எனும் ஆராய்ச்சியாளரின் தலைமையில் உள்ள குழு, இந்தத் தகவலை கண்டறிந்தது.

அதிகமான காற்று மாசில்லாத சூழலில், பூக்களிலிருந்து வெளியேறும் மணம் சுமார் 1000-1200 மீட்டர் (சுமார் 1-1/4 கி.மீ) தூரம் வரை பயணிக்கும். ஆனால் காற்றில் வாகனப்புகை கலந்து படிந்த நிலையில் மலர்களின் மணம் சுமார் 200 மீட்டர் தூரம்வரை கூட எட்டாதென அந்தத் தகவலில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

"பூக்களின் நறுமணத்தைப் பரப்பும் மூலக்கூறுகள், வாகனப் புகையால் உண்டாகும் ஓசோன், நைட்ரேட் போன்ற நச்சுப் பொருட்களுடன் உடனடியாகக் கலந்துவிடுகின்றன. இதனால் மலர்களின் மணம் அழிந்து விடு கிறது" என்கிறார் ஜோஸ் ஃபியு யென்டாஸ்.

காற்றில் வாகனப்புகை கலப்பால், பூக்கள் மணம் பரப்பாத நிலையில், பூக்களின் தேன் மற்றும் மகரந்தத்தை உண்டு வாழும் தேனீ மற்றும் வண்டுகளின் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இதனால் பூக்களின் இனப்பெருக்கம் தடைபடுகிறது. சிறு உயிரினங்கள் தங்களின் இனப்பெருக்கத்தன்மை இழக்கும் அபாய நிலை நம் முன்னே காத்திருக்கிறது.

உலகில் நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள காய்கறிகள், பழங்கள் போன்றவை. அனைத்தும் பூக்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதால்தான் நமக்கு கிடைக்கின்றன.

சூழல் மாசுபடுவதால் தாவரங்கள் அழியும் வாய்ப்பும், பூச்சிகளுக்கும் நமக்கும் உணவுப் பிரச்சினையும் ஏற்படும் என்ற அச்சமூட்டும் உண்மைகளும் நம்மை விழிப்படைய வைத்துள்ளன.

இதனடிப்படையில், அனைத்து உயிரினங்களும் இயல்பு வாழ்வை இழந்து தவிக்கின்றன என்பது மட்டும் உறுதி.

இதனைத் தடுக்கும் பொறுப்பு மனிதராகிய நம் கரங்களில் தான் உள்ளது என்பதில் தவறில்லை அல்லவா?


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment