Monday, January 28, 2013

விஸ்வரூபம்+முஸ்லிம்=???? (சுவைக்க ஒரு சூடான பகுதி)


இது முஸ்லிம்களுக்கான பதிவு. நீண்டதொரு வாதம், கலந்துரையாடல், கருத்து மோதலின் பின் தான் நான் இதை எழுதுகிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்னும் மன நிலையில் நான் இதை எழுதவில்லை என்பதையும் முதலில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் பெரிய மேதை எல்லாம் இல்லை. சாதாரண மனிதன். இது என் சிறிய மூளையில் உதித்த ஒரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சி.

விடயத்துக்கு வருவோம். இன்று எல்லோராலும் பேசப்படுகின்ற ஒரு விடயம் விஸ்வரூபம் திரைப்படமும் அதன் பின்னணியில் முஸ்லிம்களின் செயற்பாடுகளும். முதலில் முஸ்லிம்கள் பற்றி பேசுவோம் பிறகு கமல் பற்றிப் பேசலாம்.
சினிமாவுக்கு முஸ்லிம்கள் இவ்வளவு முக்கியத்துவம் ஏன் கொடுக்கிறார்கள் என்பது எனக்கு இது வரை விளங்கவில்லை? இஸ்லாம் தடை செய்த ஒன்றுக்காய் ஏன் இவ்வளவு பெரிய முக்கியத்துவம்? இதற்க்கு அவர்கள் சொல்லும் காரணம் சினிமா இன்று மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற ஒரு ஊடகமாய் மாறி இருக்கிறது. அதனூடாக நச்சுக் கருத்துக்களை பரப்ப முடியும் என்பதே. உண்மைதான் ஆனால் இஸ்லாத்தில் சினிமா என்பது எனக்குத் தெரிந்த அளவில் ஹராமான (தடை செய்யப்பட்ட ) விடயமாகும். அது இஸ்லாத்தில் தடை செய்யப் பட்ட பின்னர் அதை பற்றி பெரிதாக நீங்கள் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் இறைவன் "அந்தப் பக்கம் நீ போகாதே அது உன்னை காயப் படுத்தும்" என்று தடுத்து விட்டான். ஆனால் நாம் அங்கு போய் இருந்து கொண்டு "நான் சினிமா பார்க்க வேண்டும் ஆனால் என்னை காயப் படுத்தக் கூடாது" என்று கோஷமிடுவது முஸ்லிம்களுக்குரிய பண்பாகாது. இஸ்லாம் தடை செய்த ஒன்றுக்குள் நீங்கள் செல்லவே இயலாத போது அதை சீற்படுத்தவா முயற்சிக்கிறீர்கள்?

விளங்கிக் கொள்வதற்காக ஒரு சிறிய உதாரணம் பன்றி இறைச்சி உண்பது ஹராம் (தடை). பன்றி தடை என்றால் அதற்குள் நாம் சென்று இல்லை பன்றி தக்பீர் சொல்லி அறுக்கப் பட வேண்டும் என்று விவாதிப்பது/போராடுவது எந்த வகையில் நியாயமாகும். உனக்குத் தடை என்றால் நீ அங்கு செல்லவே கூடாது என்பது தானே முறை. இதை ஏன் நீங்கள் உணரவில்லை?

சினிமா, ஆடல், பாடல், இசை இவை இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை. அதற்குள் நாம் சென்று எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதே எனது கருத்து.நமக்கு சம்மந்தம் இல்லாத இடத்துக்குள் நாம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும். ஒரு 3 மணி நேர திரை விளையாடல் பார்த்து ஒரு மார்க்கத்தை ஒருவன் விளங்க முற்பட்டால் அவனுக்குப் பெயர் முட்டாள்.

ஒரு சினிமாவுக்காக நீங்கள் நடத்திய போராட்டத்தால் அள்ளாஹ்வின் நாமமும், அவன் தூதரின் நாமமும், புனித இஸ்லாத்தின் நாமமும், எத்தனை தடவைகள் எவ்வளவு எழுத்துக்களால் காயப் பட்டிருக்கிறது என்பதை அறியவில்லையா நீங்கள்? மார்க்கம் தடை செய்த ஒரு விடயத்துக்காய் நீங்கள் நேசிக்கின்ற மார்கத்துக்கு நீங்களே அவப் பெயரை ஏற்படுத்தி விட்டீர்கள் போல் தெரிகிறது. முஸ்லிம் சகோதர்களே இது ஒரு சிறந்த அணுகு முறையாய் இருக்காது என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

குர்ஆன் சொல்வதைப் பாருங்கள்.

(முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.(4:140)

கமல் ஹாசன் இஸ்லாத்தை அவமதின்றாரா? முஸ்லிம்கள் மனதை வேதனைப் பட வைகிறாரா? அவருடன் நீங்கள் சேர்ந்து இருக்க வேண்டாம். நட்பு பாராட்ட வேண்டாம். அவர் அக்கருத்தில் இருந்து நீங்கி உங்களிடம் மன்னிப்புக் கேட்டு திருந்தும் வரை.. இதுதான் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்னுடைய பார்வையில்..

ஆகவே யார் இம்மார்கத்தை அள்ளாஹ்வை அவனுடைய தூதரை பரிகாசிக்கின்றனரோ அவர்களை அவன் பார்த்துக் கொள்ளுவான். நீங்கலாக எதையும் செய்ய முயன்று உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள். இன உறவுகளுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்காதீர்கள்.

எமது சகோதரர்கள் முக நூலிலும், ட்விட்டர் என்னும் சமூக இணையத்தளங்களிலும் பிடித்த சண்டைகள் பரிமாறப்பட்ட கருத்துக்கள் மனித மொழிகளில் இருந்தே அகற்றப் படவேண்டிய சொற்களாக இருந்தது.(இக் கட்டுரைக்கான அவசியத்தை உணர்ந்ததுக்கான காரணம் இதுதான்)


கலைஞர்களே
உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மற்றவன் கழுத்தை நசுக்கக் கூடாது. அது சிறந்த படைப்பாகவும் இருக்க முடியாது. கமல் உங்களுக்கும் எனக்கும் எந்த உறவுமில்லை மனிதன் என்பதை தவிர. நான் சினிமாவை நேசிப்பவனும் அல்ல. ஆனால் இப் பிரச்சினைக்கேள்ளாம் உங்களுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு. இனி வரும் காலங்களிலாவது உங்கள் கலைப் படைப்பு யாரையும் துன்புருத்தாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் இஸ்லாத்தை முழுமையாப் படியுங்கள்.

மாற்று மத சகோதரர்களே
முஸ்லிம்களை பார்த்து இஸ்லாத்தை விளங்க முயற்சிக்காதீர்கள். அது சரியான நடைமுறையும் அல்ல. இஸ்லாத்தை விளங்க குர்ஆன், நபி மொழிகளைப் படியுங்கள். யாரிடமோ உள்ள குறைக்காக அவன் பின்பற்றும் மார்க்க சட்டங்களை, நல்ல மனிதர்களை, அவன் நம்புகின்ற இறைவனை உங்கள் சண்டையில் பலி கொடுக்காதீர்கள்.

இறுதியாக, என்னிடம் கூடுதலானவர்கள் கேட்ட விடயம் நீ விஸ்வரூபத்தை ஆதரிக்கிறாயா? எதிர்கிறாயா? உங்கள் எல்லோருக்கும் என் பதில் "நான் குழப்பங்களை தூண்டும் சினிமாவின் எதிரி".

பின் குறிப்பு : இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்கள் ஏதும் நான் சொல்லி இருந்தால் உடனடியாக சுட்டிக் காட்டவும்.

Post Comment

Friday, January 25, 2013

"கைகொடுப்போம் வாருங்கள்."


கனவும், கற்பனையும்
கொட்டிக் கிடக்கிறது
நிஜங்கள் இன்று
எதிலுமே இல்லை.

மெய்யும், பொய்யும்
கலந்தே உலகை ஆழ்கிறது.
உண்மையை உணர்த்த
கைகொடுப்போம் வாருங்கள்.

பிரிவினை பூமியில் படர்ந்து விட்டது
மொழியால், ஜாதியால், நிறத்தால்..
பூமிக்கு புரிய வைத்து ஒற்றுமையை
ஊக்குவிக்க கை கொடுப்போம் வாருங்கள்.

"அமைதியாய் வாழ்பவனை
அடக்க நினைக்கிறான்"
அகராதியை விட்டே அடிமையை துரத்த
கை கொடுப்போம் வாருங்கள்.

வாழ்க்கைக்கு வழி காட்டிய
பெற்றோர்கள் இன்று
அன்றாட உணவுக்காய்
வீதிகளில்..

அவர்களின் பசி போக்கி
அன்பால் அரவணைக்க
கை கொடுப்போம் வாருங்கள்.

யுத்த அரக்கனால் உறவிழந்து
பாசத்துக்காய் பரிதவிக்கும்
குழந்தைகள் ஆயிரம்..

அவர்களின்
கண்ணீர் துடைத்து
பாசத்தை பரிசளிக்க
கை கொடுப்போம் வாருங்கள்.

நல்லதைத் தூண்ட..
தீயதைத் துண்டாக்க..
கை கொடுப்போம் வாருங்கள்.

மனிதத்தை வளர்க்க..
மனிதனாய் வாழ..
கை கொடுப்போம் வாருங்கள்.

Post Comment

Thursday, January 17, 2013

உன்னைப் பிரிய மாட்டேன்.


கண்ணுக்குள் உன்னை வைத்து
இமைகளை மூடுகிறேன்,
என் இரவின் கனாக்களிலும்
நீ வர வேண்டும் என்று..

இதயத்துக்குள்
நினைவுகளாய் நிரம்பிவிட்ட
உன் ஞாபகங்கள்,
அத்துணை அணுக்களிலும்
இரத்த ஓட்டமாய் கலந்து..

என் ஒவ்வொரு அசைவிலும்
உன்னையே பிரதிபலிக்கிறது.

அழகிய நினைவுகளும் நீ.
அழகிய நிகழ்வுகளும் நீ.
அழகிய என் நிதர்சனமும் நீ.

என் காதோடு உன் குரல்
கைபேசி வழியே ஊடுருவ..
உலகையே மறந்து போகிறேன்,
உனக்குள் என்னை புதைத்தவனாய்.


வழிகளில் விழி வருடி
நீ செல்கின்ற நேரம்..
உன் மௌனத்துக்குள்
உறைந்து விடுகிறேன்,
விழிகளை மட்டும் அசைத்தவனாய்.

எந் நேரமும் உந்தன் நினைப்பு,
உன்னை பார்க்க மனம் துடிக்கும் துடிப்பு,
நீ அருகில் இல்லாது நான் தவிக்கும் தவிப்பு,

நினைப்பு, துடிப்பு, தவிப்பு,
இவை மூன்றையும் கலந்து
காலம் செய்யும் நகைப்பு,
இந்தக் காதல்.

போராட்டக் கடலில்,
மூச்சுப் பிடித்து சுழியோடி
நான் கண்டெடுத்த காதல் சிற்பிக்குள்,
உயிர் வாழ்ந்த முத்து நீ.

மூச்சே நின்றாலும்..
உன்னைப் பிரியப் போவதில்லை.

Post Comment

Sunday, January 13, 2013

பெத்த மனம் பித்து பிள்ள மனம் கல்லு.


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள். (Bukahari Volume:6 Book:78)

இது எனக்கு மிகவும் பிடித்த அறிவுரைகளில் ஒன்று. இதை நான் இங்கு சுட்டிக் காட்டுவதற்கும் நான் பகிரப் போகும் விடயத்துக்கும் நிறையவே ஒற்றுமை உண்டு. விடயத்துக்கு வருகிறேன்.

அன்று சண்டே.. ஆஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இரண்டாவது கிரிக்கெட் போட்டி.. நானும் மிக ஆவலாக இந்தப் போட்டியிலாவது இலங்கை வெல்லுமா என பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது யாரோ என் வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டு போய் திறந்து பார்த்தேன். வயதான பெண்மணி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

விசயத்தைப் புரிந்து கொண்டு 10 ரூபா எடுத்துக் கொடுத்து கதவடைக்க முயன்றேன் அப்போது அவர் என்னைப் பார்த்து "குடிக்க தண்ணி இருக்குமா?" என்றார். "உள்ளே வாங்க" என சொல்லிவிட்டு அம்மாவை கூப்பிட்டு இவருக்கு தண்ணி குடுக்கும் படி கூறிவிட்டு நான் ஓடிச் சென்று டிவிக்கு முன்னாள் உட்கார்ந்து கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து யாரோ அழுவது போன்ற சத்தம் கேட்டது என்ன நடக்கிறது என்று பார்க்க வெளியில் சென்றேன் அந்த வயாதான பெண்மணியின் கண்கள் கண்ணீரைச் சொந்தமாக்கியிருந்தது. சமையலை முடித்து விட்ட என் அம்மாவும் அவருக்கு சாப்பிடுவதற்கு உணவையும் கொடுத்திருந்தார். நான் அப்படியே உள்ளே சென்று டிவியின் சத்தத்தை குறைத்து விட்டு என் அம்மாவும் அந்தப் பாட்டியும் உறவாடுவதைக் கேட்கலானேன்.


அவர் ஒரு ஏழை என்றும் அவருக்கு ஆண் மகன் ஒருவன் இருப்பதாகவும் ஆனால் அவனோ யாரோ ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு அவன் உழைப்பதை எல்லாம் அந்தப் பெண்ணுக்கு மட்டும் கொடுப்பதாகவும் தன்னை கவனிப்பதில்லை என்றும் அதனால் தான் தனக்கு இப்படி அடுத்தவரிடம் கை ஏந்த வேண்டிய நிலை என்றும் அவனை வலப்பதற்கு தான் மிகுந்த கஷ்டம் பட்டதாகவும் சொல்லிக் கொண்டு அழுதார்.

இந்த கதையை கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் மனதுக்குள் வலித்துக் கொண்டிருந்தது. என் அம்மா வாய் விட்டு அவனை ஏசிய போது என் மனதும் அம்மாவுடன் கை கோர்த்திருந்தது.

இது போன்ற பல சம்பவங்கள் நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். இது எவ்வளவு பெரிய அநியாயம் என்பதும் எமக்குத் தெரியும். இன்றைய வாலிபர்களில் பெரும் பகுதியினர் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் நாம் எத்தனை பேர் நம்மை இது வரை வளர்த்து ஆளாக்கிய நம் பெற்றோருக்கு சரியான முறையில் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான்.

ஏனெனில் இக் காலத்தில் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளே அதிகம். அதிகரித்திருக்கின்ற முதியோர் இல்லங்களும் அவை இன்னும் அதிகரிக்கப் பட வேண்டும் என்கிற தேவைப் பாடுகளையே நாம் இதற்கான ஆதாரமாக கொள்ளலாம்.

"தாய்" உலகில் சொல்லால் மதிக்கப் பட்டாலும் நிஜத்தில் நசுக்கப் படுகிறாள் என்பதுதான் மனம் வலிக்கின்ற உண்மை. ஒரு தடவைக்கு இருதரம் அவள் ஒரே விடயத்தைக் கேட்டால் அலுத்துக் கொள்கிறோம். நம் சிறு வயது ஒரு தடவை எண்ணிவிட்டால் அவளை முதுகில் ஆயுளுக்கும் சுமக்கலாம். ஒரு பிரசவ நேரத்து வலி போதும் அவள் எது சொன்னாலும் நாம் தலையாட்டி விடலாம்.

பொக்கிஷங்கள் இன்று வீதிகளில் அலைந்து திரிகிறது. அவசர மனிதனுக்கு அவைகளை திரும்பிப் பார்க்க நேரம் இல்லாமல் ஆசையும் பணமும் கட்டிப் போட்டிருக்கிறது.

மதங்களில், வேதங்களில், பாடல்களில், சினிமாக்களில் என்று எத்தனையோ தாய் பற்றிய விடயங்களைப் படித்தாலும், கேட்டாலும், அனுபவித்தாலும் ஏதோ ஒரு சமயத்தில் மனிதன் நன்றி கெட்டவன் என்பதைக் காட்டி விடுகிறான்.

என் கையில் இருந்த 1000 ரூபாவை அந்தப் பாட்டியின் கையில் வைத்து விட்டு "எந்த ஊர்?" என்றேன் என் ஊர் பெயர் தான் அவள் குரலில் ஒலித்தது. ஒரு இஸ்லாமிய முன் மாதிரிக் கிராமத்திலேயே (அப்படி சொல்லிக் கொள்வதில் இனி ஒரு பெருமையும் இல்லை என்பதை என் மனது சொன்னது) அந்த இஸ்லாத்தை போதித்த இறைதூதரின் போதனைகள் மறைந்து போனது என் ஊர் அடுத்த தலைமுறைக்கு எந்த வடிவில் கிடைக்கப் போகிறது என்பதை காட்டிச் சென்றது.

இலங்கை அணி மிகச் சிறப்பாக ஆடி இந்த போட்டியை வென்ற போதும் என் மனது ஏனோ சந்தோசப் படவில்லை. போகும் போது அந்த பாட்டி சொன்ன விடயங்கள் மட்டுமே என் நினைவுக்குள் இருந்தது. "என் மகன் பற்றி எனக்கு வருத்தம் தான் ஆனாலும் அவன் நல்லா இருக்கணும் தம்பி.. அவனை நான் மனது நோகல " இதை தான் சொல்வார்கள் போல் "பெத்த மனம் பித்து பிள்ள மனம் கல்லு என்று"

Post Comment

Saturday, January 05, 2013

"நல்லவனில்லை"



காதலே யார் நீ?
ஆணையும், பெண்ணையும்
இணைக்கும் பாலமா?
அல்லது அவர்களைப்
பிடித்த சாபமா?

வாழ்வில் ஒளியூடுகிறாய்
சில நேரம்..
வாழ்கையை எரிக்கிறாய்
பல நேரம்..

மாறி மாறி உருவெடுக்கிராயே..
பச்சோந்தி பெத்த பிள்ளையா நீ?

உன்னை வெறுத்தவர்கள்
மணமேடையில் உறவாட,
உன்னை அணைத்தவர்கள்
பின மேடையில் வாடுவதா??

உன் நியாயம்
புரியாப் புதிராகிறதே..

கனவுக்குள்
கற்கண்டாய் இருக்கிறாய்.
பல கவிதைக்கும்
கருவாய் இருக்கிறாய்.
செல்லாக் காசுகளையும்
தங்கமாக்கி ஜொலிக்கிறாய்.
தோழனாய் சில நேரம்
தோள் கொடுக்கிறாய்.




கல்லறைக்குள்
முதற் கல்லாய் இருக்கிறாய்.
கண்ணீருக்கும்
பிறப்பிடமாய் அமைகிறாய்.
எமனுக்கு
தூதாய் வருகிறாய்.
இதயத்தை கிழிக்கும்
முள்ளாய் வலிக்கிறாய்.

நன்மைக்கும், தீமைக்கும்
காரணமாய் இருக்கிறாய்.

உண்மையை சொல்
யார் நீ?

நிச்சயமாய் "நல்லவனில்லை."

Post Comment