Wednesday, August 11, 2010

'பிளக்பெரி' சேவைகளைத் தடைசெய்யும் திட்டமில்லை : பாஹ்ரெய்ன்


Virakesarei.
'பிளக்பெரி' சேவைகளைத் தமது நாட்டில் தடைசெய்யும் திட்டமெதுவும் இல்லை என பாஹ்ரெய்ன் நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

'பிளக்பெரி'யின் நவீன தொழிநுட்ப சேவைகளுக்கே தாம் முக்கியத்துவம் அளிப்பதாகவும் அது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்காதெனவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக 'பிளக்பெரி' சேவைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் தடை செய்யப் போவதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ள நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'பிளக்பெரி' கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பும் போது,.அவற்றின் மென்பொருள் குறியீட்டுச்சொற்களை (என்கிறிப்ஷன்) அரசாங்கங்களினால் பரிசீலிக்க முடியாத நிலை காணப்படுவதே இதற்குக் காரணம்.

மேலும் இப்பிரச்சினை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அமைச்சர், தீவரவாதிகள் மற்றும் குற்றவாளிகள் தொடர்பு கொள்ள வேறு பல வழிகள் உள்ளதால் இதனை மாத்திரம் பெரிதுபடுத்துவதில் அர்த்தமில்லையெனத் தெரிவித்தார்.

இந்நிலையில் 'பிளக்பெரி' சேவைகளைத் தமது நாட்டில் தடைசெய்ய உள்ளதாக அறிவித்திருந்த சவூதி அரேபியா, தற்போது அத்தடையை விலக்கியுள்ளது.

தற்போது அது 'பிளக்பெரி' கையடக்கத் தொலைபேசிகளின் தயாரிப்பு நிறுவனமான கனடா நாட்டைச் சேர்ந்த ஆர்.ஐ.எம். என்றறியப்பட்ட 'ரிசேர்ச் இன் மோசன்' நிறுவனத்துடன் உடன்பாடொன்றுக்கு வந்துள்ளது.

இதன் பிரகாரம் பாவனையாளர்களின் தரவுகளைப் பரிசீலிப்பதற்கான அனுமதி, அரசுக்கு குறிப்பிட்டளவு வழங்கப்படவுள்ளது. இதற்கான வழிமுறைகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சவூதியின் இத்தீர்மானமானது மற்றைய நாடுகளுக்கும் முன்னுதாரணமாக அமைய வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்தியா, இந்தோனேசியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளும் இவ்விவகாரம் தொடர்பாக அக்கறை செலுத்தி வருகின்றன.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment