Tuesday, January 18, 2011

உன்னிலும் மாற்றமில்லையோ??????



"யார் பிரிந்த துயரமிது?
இப்படியழுகிறது இந்த வானம்"
வினவினேன், மேகத்தில் இருந்து
விடைபெற்று வந்த மழைத்துளியடம்.

"பூமாதேவியின் அசுத்தம் துடைக்க
அனுப்பியிருக்கிறது எங்களை மேகம்"
என்று சொல்லி கண்சிமிட்டிப் புதைந்தது,
பூமிக்குள் அச் சிறு மழைத்துளி.

அடுத்து வந்த துளியிடம் வினவினேன்
"அசுத்தமா? என்ன அது?"
வந்த ஒவ்வொரு துளிகளும், ஒவ்வொன்றாய்
சொல்லிச் சொல்லி பூமிக்குள் ஒழிந்து கொண்டன.

"போரால் படிந்த இரத்தம் கழுவ,
வேற்றுமையை மறக்கடிக்க,
உதவாக்கரங்களையும் உசுப்பிவிட,
ஊமையான மனிதத்தை பேசவைக்க,

மறந்த இறைவனை நினைவில்வைக்க,
மனிதனை புனிதனாக மாற்றியமைக்க,
பசியின் கொடூரத்தைப் பகிர்ந்தளிக்க,
வாழ்வியலின் யதார்தத்தை புரிய வைக்க".

துளிகள் சொன்ன செய்தியை கேட்டுக் கொண்டே,
அவைகளோடு நானும் காய்ந்தேன்.
என்னில் இருக்கும் அசுத்தம் கழுவ,
நனைந்தவர்களின் கண்கள் ஈரமும் காய.

துளிகள் ஓய்ந்தது.
தொலைத்த இன்பங்கள் எங்கிருந்தோ ஒட்டிக் கொண்டது.
கண்களில் ஈரமும் வற்றியது.
தேகத்துடன் மனமும் இணைந்து வெயிலில் நனைந்தது.

இருந்தும்,
துளிகள் சொன்ன எதுவும் நடக்கவில்லை.
பூமியிலும் நடக்கவில்லை,
என்னிலும் நடக்கவில்லை.

துளியாய் நான் மாறி மேகத்திடம் கேட்க வேண்டும்!
"இந்த மாறாத மனிதனுக்காக,
வீணாக உன் (இரத்த) துளிகளை இழக்கிறாயே.....
தியாகத்தின் முழு வடிவம் நீதானோ?

நீயும் அவனைப் போன்றுதானா?
உன்னிலும் மாற்றம் இல்லையோ?"......

Post Comment

Tuesday, January 04, 2011

பிறக்கவில்லை புது வருடம்!!!



"பிறக்கவில்லை புது வருடம்",
எதுவும் மாறவில்லை,
அதுதான் காரணம்.

வானில் வேட்டு வேடிக்கை,
வாழ்வில் சோக வாசனை,
இது புது வருடம் அல்ல,
நேற்றய வருடங்களின் தொடர்சி.

பசி தீரவில்லை,
பஞ்சம் அகலவில்லை,
கண்ணீர் குறையவில்லை,
அகதிகள் அழியவில்லை,
வாழ்வில் பசுமையில்லை,
வாழவும் தெரியவில்லை,
மனிதரில் மனிதம் இல்லை,
மன்னிக்கத் தெரியவில்லை,

தாயின் பாசத்திலும் ஒரு கலக்கம்,
தந்தையின் அரவணைப்பிலும் ஒரு குழப்பம்,
பிள்ளையின் ஆதரவிலும் சில திருத்தம்,
கணவனின் காதலிலும் ஒரு காயம்,
மனைவியின் நேசத்திலும் ஒரு மாயம்,
நண்பனின் நட்பிலும் சில நடுக்கம்,
சொந்தங்களின் அன்பிலும் ஒரு சோகம்,
ஆகவே புது வருடம் இன்னும் பிறக்கவில்லை.

சமாதனம் மலர வேண்டும்,
சமத்துவம் ஓங்க வேண்டும்,
வசந்தம் வருட வேண்டும்,
பசுமையோடு உறங்க வேண்டும்.

செல்வம் பெருக வேண்டும்,
மகிழ்ச்சி தொடர வேண்டும்,
விவசாயம் செழிக்க வேண்டும்,
விஞ்ஞானம் வளர வேண்டும்.

பணம் பறிபோக வேண்டும்,
பண்டமாற்று மீண்டும் அறிமுகமாக வேண்டும்,
யாவரும் உழைக்க வேண்டும்,
எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

மழழைச் சிரிப்பொலி கேட்க வேண்டும்,
குழந்தை போல் நாமும் மாற வேண்டும்,
சொந்தங்கள் இணைய வேண்டும்,
சுகங்கள் தொடர வேண்டும்.

புது யுகம் மலர வேண்டும்,
பூமி பூமாலை அணிய வேண்டும்,
இப்படியொரு புது வருடம் பிறக்க வேண்டும்,
நானும் அதை ரசிக்க வேண்டும்.

எதிர்பார்க்கிறேன் ஆவலாய்.....
கற்பனை அடுத்த ஆண்டில் நிஜமாகும்,
என்ற நம்பிக்கையில்....

Post Comment