Friday, January 06, 2012

என்னைக் கொன்று விடு..


சுவாசமாய் நினைத்து
உன்னை சுவைத்து
சுடுபட்டுப் போன நாட்கள்
போதும் அன்பே..

காதல் தீயில்
கருகிப்போன இதயத்துக்கு
மருந்து போட்டே நகர்கிறது
என் மற்றைய வினாடிகள்..

தொடரும் நிழல் போன்று
உன் நினைவும்..
உளி செதுக்கிய சிற்பமாய்
உன் நாமமும்..
என்னோடு ஒட்டிக்கொண்டன.

பாலைவனத்தில் பட்டமரமாய்
உன்னை சுமந்து கொண்டு
பரிதவித்து நிற்கிறேன்..

கொடிய வறட்சியிலும்
நீ என்னுள் வற்றிப் போகவில்லை.
என் கொடிய நிமிடங்களிலும்
நான் உன்னை கழட்டி ஏறியவில்லை.

ஒருமுறை நிதர்சனமான
மரண வலியையும்,
ஒவ்வொரு வினாடியிலும்
தந்து சென்றவள் நீ..

பெண்ணே!
உன்னிடம் ஒரே விண்ணப்பம்?

என் கண்களின் ஈரம்
வற்றிப்போவதற்க்குள்
என்னைக் கொன்று விடு..

Post Comment

Thursday, January 05, 2012

கிழங்குக் கடை

"டேய் என்ன மச்சி சௌண்ட காணோம்?"

"இல்லடா எப்படி இருந்த நம்ம இப்படி ஆகிட்டோமே எண்டு யோசிச்சிட்டு இருந்தன் மச்சான்"

"சரி சரி விடு அதெல்லாம் ஒரு காலம் நீ ஆபீஸ் போக டைம் ஆகுது எண்டு சொன்னியே கிளம்பு அப்புறம் பேசலாம்"

"யா மச்சி மறந்தே போச்சு ஐல்கால் யு பக்டா பாய்"

"பாய் டா டேக்கேர்" எண்டு வச்சிட்டு என் மொனிடேர்ரையே பாத்துக்கிட்டு இருந்தேன். அவன் சொன்ன வார்த்தை மட்டும் என்னை ஏதோ செய்வது போன்று இருந்தது.

"எப்படி இருந்த நம்ம இப்படி ஆகிட்டோமே" என் இதய அறையில் எங்கோ ஒரு மூலையில் இந்த வார்த்தை முட்டிக்கொண்டு நின்றது. உண்மைதான் எப்படி இருந்தோம்.... இப்போ??? கண்களில் இருந்து ஒரு துளி வெளியே எட்டிப் பார்த்தது. மொனிடேர்ரையே மிச்ச நேரம் உற்றுப் பார்த்தால் எண்டு நினைக்கிறன். மூளையின் நினைவுச் செல்களுக்குள் அந்த காலங்கள் சுழலத் தொடங்கியது.
*********************************************

என் நண்பன் அவன். நாங்கள் பழகிய பசுமையான நாட்கள் அவை. என் பாடசாலை நாட்கள், மரணத்திலும் மறக்கமுடியா நினைவுகள். அவன் நினைவு எனக்கு வந்தாலே முதலில் ஞாபகம் வருவது அந்த கிழங்கு கடைதான். வாரத்தில் இரண்டு அல்லது 3 நாட்கள் அக் கடைக்குச் செல்வது எங்களுக்கு கட்டாயமாக்கப் பட்டு இருந்தது. இன்றைய பேஸ்புக், ட்விட்டர் போன்று எங்கள் ஏக்கங்கள், கனவுகள், அரட்டைகள், சோகங்கள் எல்லாம் சுமந்த கடை அது. குறிப்பாக வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் அவனோடு ஊர் சுற்றி திரிந்து விட்டு அந்த கடையில் போய் இருந்து சூப் குடித்து கிழங்கு சாப்பிடும் சுகம் வேற எந்த உணவிலும் நான் இது வரை ரசித்தது இல்லை.

வெள்ளிக்கிழமை, என் ஊரின் விசேட தினங்களில் ஒரு நாள். அன்று பின்னேரங்களில் என் ஊரு கடற்கரை களைகட்டும். என் ஊரின் பெரும் பகுதி குடும்பமாகவோ அல்லது நண்பர்களுடனோ அன்றைய பொழுதைக் கழிக்க அங்கு வந்து விடுவார்கள் . நம்ம பசங்களுக்கு என்ன வேலை இருந்தாலும் சரியான நேரத்துக்கு மோட்டார் பைக்ல அங்கே வந்துருவானுகள். நாங்க ரெண்டு பேர் மட்டும் என்ன விதிவிலக்கா? என் நண்பன் எதுல சொதபுறானோ இல்லையோ இதுல மட்டும் என்ன விட பேர்பெக்ட்டா இருப்பான். அதுவும் அவனுடைய ஆளும் அங்கு வாரயாம் என்பது தெரிந்தால் வியாழக்கிழமை இரவிலிருந்தே என் நிம்மதி போய்டும்.

இப்படி ரொம்ப ஜோலியா போயிட்டு இருந்திச்சி எங்க லைப். முதல் அடி நான் மேல் படிப்புக்காக என் ஊற விட்டுட்டு வெளி ஊர் வந்துட்டன். தொடர்ந்து அவன்கூட பழக முடியாட்டியும் அப்பப்போ அவன மீட் பண்ண கிடைக்கும். எப்போ நாங்க மீட் பண்ணினாலும் எங்களுக்கு உறைவிடம் அந்த கிழங்கு கடைதான். அடுத்தது அடி இல்ல இடி. அவன் வேலை காரணமாக வெளி நாட்டுக்குப் போய்ட்டான். அதுக்கப்புறம் நானும் ஊருக்கு முதல் மாதிரி போறதும் இல்ல. சில நேரங்களில் போனாலும் அவன் இல்லாமல் கிழங்குகடை வெறுமையாய் போனதாய் உணர்ந்தேன். அதனால் அங்கு போவதையும் நிறுத்திக்கொண்டேன்.இப்போ அவன் கூடத்தான் பேசிட்டு இருந்தேன். அவனை நேரடியாக சந்தித்து 2 வருடம் கடந்திட்டு.. ஏதோ அவன் போன மாதம் தான் சென்றது போல் இருக்கிறது.

{{{ரீங் ரெங்}}} {{{ரீங் ரெங்}}}
*********************************************

ஞாபக சுழற்சிக்குள் இருந்து என்னை எழுப்பிவிட்டது அந்த மொபைல் கால். மொபைல் எடுத்து காதுக்குள் வைத்துக் கொண்டு நேரத்தை பாக்கிறேன் அதற்குள் 1 மணி நேரம் கடந்து இருந்து.
"ஹலோ"

"அடேய் நான்தான் மச்சான்"

"சொல்லுடா இப்பதானடா ஆபீஸ் போறேன் எண்டு போன? வாட் ஹப்ண்டு?"

"நத்திங்டா இங்க வேல இல்ல ப்ரீ தான். நீ ப்ரீதானே?

"எஸ் மச்சி சொல்லு"

"இல்ல மச்சான் நம்ம கிழங்கு கடைல கிழங்கு சாப்பிடனும் போல இருக்குடா என்னமோ தெரியேல்ல திடீர் எண்டு தோணிச்சி"

இதற்க்கு மேல் என்னால் பொறுமையா இருக்க முடியாது என்பது போல் என் கண்ணீர் குப்பென்று வழிந்தது. கையால் துடைத்துக்கொண்டு "ஹி ஹி ஹி கிளம்பி வா மச்சி அதுக்கென்ன சாப்பிடலாம்" எண்டேன், வீதி அபிவிருத்திக்காக அந்த கடை உடைக்கப்பட்டு விட்டது என்று அவனிடம் சொல்லும் தைரியம் எனக்கு இல்லாமல்..

Post Comment

Wednesday, January 04, 2012

இரவுச் சத்தம்.

"உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....."

அழகான மௌனத்துக்குள் அலாரமாய் மாறி விட்டது அந்த சத்தம். இரவின் திடீர் விழிப்பு எவ்வளவு கொடுமை என்பதை உணர்ந்து கொண்டேன். என் அறை திறந்து வெளியே வந்தேன். நடந்தது என்னவென்று தெரியாமல் என் மொத்த குடும்பமும் விழி பிதுங்கி நின்றது. ஒருவரை ஒருவர் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டே வீட்டு வாசல் கதவைத் திறந்தோம்.

ஒரே ஆச்சரியம்!!! ஊரே ஒன்று கூடி என்ன மாநாடு நடத்துகிறது இந்த நடு இரவில்??

எல்லாரும் எங்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அவர்கள் பேச்சோடு பிஸியாகிவிட்டார்கள். அம்மா பெண்கள் பக்கமும், அப்பா ஆண்கள் பக்ககமும் செல்ல என் தம்பி திரும்பவும் அவன் அறைல போய் கதவ சாத்திக்கிட்டான். என் வீட்டுத் திண்ணையில் நான் தனித்து தூக்கக் கலக்கத்தோடு நின்றிருந்தேன். ஏதேதோ பேசிக்கொண்டார்கள். அவர்களை கவனிக்கும் அளவுக்கு என் கண்கள் விழித்து இருக்கவில்லை.
"வட் த ஹெல் ஆர் தீஸ் பீப்பில் டூஇங் திஸ் டைம்?" எண்டு கோபம்தான் வந்தது. ஒரு வழியா அப்பா வந்து சேந்தாரு. அப்புறம் அம்மாவும் வந்தாங்க.

செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் வந்த பின்பு நானும் அவர்களுடன் சேர்ந்து உள்ளே சென்றேன். மாநாடு முடிந்து விட்டது என்றும் தோன்றியது.

"அம்மா என்ன பிரச்சினை?"

"யாருக்கும் தெரியல்லடா, எல்லாரும் நாம கேட்டத போல சத்தம் ஒண்ட கேட்டாங்கலாம்" என்றார்.

"அட பாவிகளா என்ன விஷயம் என தெரியாமலே மாநாடா?" என நினைத்துக் கொண்டு நான் என் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டேன். என்ன நடந்தது என்று யோசிக்க தூக்கம் இடம் கொடுக்கவில்லை எனக்கு. எத்துனை மணிக்கு தூங்கினேன் எண்டு தெரியாது.

6.30 மணிக்கு எழும்பி மொபைல் எடுத்து பார்த்தேன். எழும்பும் போது உடல் சோம்பலாகத்தான் இருந்தது. அதுக்கு மேல தூங்க முடியாது. என் வீட்டு நிலைமை அப்படி. நேத்து அக்டிவ் பண்ணின சைலன்ட் மூட் அப்படியே இருந்தது. 25 மெசேஜ், 11 மிஸ்ட்டு கால். நமக்கு என்ன பில்கேட்ஸ்ட இருந்தா கால் வந்திருக்கப் போகுது? எல்லாம் நம்ம பசங்கதான். மெசேஜ் ரீட் பண்ண டைம் இருக்கல்ல. அப்போதான் என் மைண்ட்ல ஓடிச்சு. டுடே ஈவினிங் மேட்ச் இருக்கு எண்ட விஷயம். வெட்டிப் பசங்க காலைலயே ஆரம்பிச்சிடாங்க எண்டு மொபைல் தூக்கி சார்ஜ்ல போட்டுட்டு வெளிய வந்தேன்.

வீதியில் கிசு கிசுக்கும் சத்தம் கேட்டது. அது வரைக்கும் இரவு நடந்த விடயம் என் ஞாபகத்தில் இல்ல. "என்ன மறுபடியும் மாநாடா?" எண்டு அப்பா கிட்ட கிண்டலா கேட்டுட்டு சோபால இருந்தேன். அப்பா ஏதோ யோசனைல இருந்திருப்பார் போல பதிலே வரல.அப்படியே எழும்பி அவரும் கீழ போயிட்டாரு "அம்மா!!! அம்மா!!!!!" எந்த பதிலும் இல்ல. "ஒரு வேல இவங்களும் மாநாடு நடக்கும் இடத்தில் இருக்காங்களோ?" எண்டு நினச்சிட்டு வாஷ் ரூம் போயிட்டு வந்து காலை காபிக்காக வெயிட் பண்ணிக் கொண்டு இருந்தேன்.பெண்களுக்கே உரித்தான மாநாடு போடும் பழக்கம் என் அம்மாவுக்கு மட்டும் இல்லாமலா இருக்கும்.என் தம்பி இன்னும் அசந்து தூங்கிக் கொண்டுதான் இருந்தான். அவன் தூங்கினா என் வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்க பிகோஸ் அவன் சின்ன பாப்பாவாம். நான் அவன் வயசில் அதிகமா தூங்கினப்போ உதை வாங்கின சம்பவங்கள் உண்டு.

என் வீட்டு வானொலி படித்துக் கொண்டிருந்தது. 6 .45 செய்தி சொல்லும் நேரம் எண்டு கொஞ்சம் கூட்டி வச்சிட்டு மேட்ச்க்குத் தேவையான பொருட்களை எடுப்பதற்கு என் ஸ்டோர் ரூமுக்கு சென்றேன்.வானொலி செய்தி என் காதுகளுக்குள் இடியாய் ஒலித்தது.

"நேற்று நள்ளிரவு இலங்கையின் தெற்கு பிரதேசத்தில் சிறிய அளவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. எந்த வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையெனவும் மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது....."

நடுங்கிய கைகள் என் மொபைலை தேட கால்கள் அதை நோக்கி ஓடியது...

Post Comment

தை பிறந்தால் வழி பிறக்கும்?

(சூரியன் fm இன் ரீங்கார நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்பில் எழுதப்பட்ட கவிதை இது. இவ்வருடத்தின் முதல் பதிவு என்பதால் இந்த கவிதை உங்கள் இவ் வருட சிந்தனைக்காகவும்..)


வலிகள், வதைகள்,
கொடுமைகள், கொடூரங்கள்...
இவர்களின் வாழ்வாகிப் போனது.

விலை மதிப்பற்ற செல்வம் கல்விக்காய்..
புத்தக மூட்டை சுமக்க வேண்டிய வயதில்,
அன்றாட பசி போக்க சில சில்லறை காசுகளுக்காய்..
சுமை மூட்டைகள் இவர்களின் முதுகில்.

வறுமையையும், பசியையும்
வாங்கிக் கொண்டு
இவர்கள் இழந்தது ஏராளம்.

கனவுகள் இல்லை,
கல்வியில்லை,
கருணையில்லை,
உடையில்லை,
உறவில்லை,
உறைவிடம் இல்லை.

தொடரும் இழப்புக்களுக்கு
நேரமின்மையால்
முற்றுப் புள்ளி வைக்கிறேன்.

மனக் கொதிப்பால் என்
கண்கள் கண்ணீரை கக்கிவிட
கவி வடிக்கிறேன் இவர்கள் விடிவுக்காய்.

மனிதனின் மனச் சட்டங்கள்
முடங்கிக் கிடக்கும் போது..
ஐ.நா சட்டமோ,
அரசாங்க சட்டமோ,
காப்பாற்ற போவதில்லை இவர்களை.

தெருக்களில்,
வேலைத்தளங்களில்
பிஞ்சுகள் பிழியப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நம் கண்களும், மனமும்
உறங்கி கொண்டதே தவிர
இன்னும் விழிக்கவில்லை.

"குழந்தைத் தொழிலாளிகள்."
தமிழில் மட்டும் அல்ல,
உலக மொழிகள் அனைத்திலும்
தவிர்க்கப் பட வேண்டிய வார்த்தை.

இச் சமூகக் கொடுமையை
தடுக்க இவ்வாண்டிலே
வழி சமைப்போம்.
நமக்கு நாம் வினா தொடுத்து
நம் மனச் சாட்சிகளை
விழிக்க வைப்போம்.

வரும் தைப் பிறப்பில்
இவர்களின் வலி நீங்கி
வாழ வழி பிறக்கட்டும்.
குழந்தையின்
சிரிப்பொலி கேட்டு
பூமி சுற்றட்டும்.

எல்லோரும் நம்புவது போல்
நானும் நம்புகிறேன்.
"தை பிறந்தால் வழி பிறக்கும்?"

Post Comment