Thursday, May 01, 2014

#HappyBirthdayThala. (இத லைக் பண்ணி உங்க தன் மானத்தை இழக்காதீங்க)


தொழிலாளர்_தினத்தில் தலைக்கும், தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள் மாறி மாறி பறக்கிறது. எதுக்கு வம்பு #HappyBirthdayThala. சரி இப்போ விசயத்துக்கு வாறன்.. இந்த தினத்தில் உங்களுக்கெல்லாம் என்ன தோன்றுகின்றது என்பது தெரியாது. எனக்கு தொழிலாளர் என்ற சொல்லைக் கேட்டாலே என் மைன்ட் அதுவாகவே குழந்தை என்ற சொல்லையும் அதற்க்கு முன்னால் இணைத்துக் கொள்கிறது.

#குழந்தைத்_தொழிலாளிகள், நம்ம யாருக்கும் இந்த நாட்களில் கண்ணில் படாத ஒரு கூட்டம் இது.

பணத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு பாசத்தைத் தூக்கி வீதிகளில் எறிந்து விட்டோம். கடற் கரையில் மிட்டாய் விற்பதில் இருந்து ஏசிக் காட்சி அறைகளில் தரை துடைப்பது வரைக்கும் இந்த நெட்வொர்க் ரொம்ப பெரியது. நம்மளும் அத கண்டு கண்ணீர் வடிக்காத நாட்களே இல்லை. என்ன செய்வது அவன் தலை எழுத்து?நம்மளை நாம் எடை போட்டுக்க ஒரு சின்ன உதாரணம். "நம்ம பக்கத்து வீட்டுல ஒரு பையன் 12/14 வயசுல வேலைக்கு போறான் எண்டு வச்சிக்குவோம்.. நம்ம வீட்லயும் அதே வயசில நமக்கு ஒரு மகன்..."

நம்ம அந்த பையன எதுக்கு தெரியுமா யூஸ் பண்ணுவோம்...

ஒரே ஒரு டயலாக்
உனக்கு என்னடா குறை? அந்த பையனப் பாரு? இந்த சின்ன வயசுலேயே எவ்வளவு பொறுப்பா இருக்கான்?

இதுக்குதான் யூஸ் பண்ணுவோம். நம் குழந்தையின் குறையை சுட்டிக் காட்ட அவனை யூஸ் பண்ணிட்டு தூரப் போட்டுவோம். நம்மில் எத்தனை பேர் அந்தப் பையனின் கல்வியை நினைத்துப் பார்ப்பதுண்டு? அது சரி நம்ம மனிதன் என்பதில் இருந்து இயந்திரமாய் மாறி பல தசாப்தம் ஆகிட்டு????????

அவர்களுக்கு கஷ்டம் இருப்பதால் தான் வீதியில் இறங்கி வேலை செய்கிறார்கள். நல்ல திறமைகள் வெறும் பணத்தால் செயலிழந்து போகின்றது என்பதுதான் உண்மை.

இந்த இடத்தில் என் நாட்டில் வறுமையும்,சமூகமும் சேர்ந்து பலி கொடுத்த #ரிசானா_நபீக் என்ற சிறுமியையும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நினைத்துப் பார்கிறேன்.

உழைப்பு என்பதும் ஒரு உரிமை... ஆனால் ஒரு குழந்தையின் உரிமை உழைப்பு அல்ல, நல்ல கல்வி. நான் தீர்வு சொல்வதற்கு அனுபமற்றவன்.. அனுபவிப்பதை பகிர்பவன். தீர்வு உங்கள் கையில்.

உழைப்பாளிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் வியர்வையே இந்த பூமிக்கு அழகு.Post Comment

Monday, October 28, 2013

அவள்!


அவள்,
அழகிய வினா?
என் இரகசியக் கனா!

அவள்,
ஆறாத காயம்,
என் வாழ்வின் பாலம்.

அவள்,
இதயத்தின் ஒலி,
என் வறட்சியின் வலி.

அவள்,
ஈரமான தென்றல்,
என் பாதையின் முட்கள்.

அவள்,
உணர்வுள்ள இசை,
என்னை இயக்கும் விசை.

அவள்,
ஊக்க நதி,
என்னை துரத்தும் விதி.

அவள்,
எளிமையின் உருவம்,
என் சுவாசத்தின் துயரம்.

அவள்,
ஏகாந்தப் பாதை,
பனியுடன் பிறந்த காலை.

அவள்,
ஐயத்தின் உடல்,
என் துணிச்சலின் நிழல்.

அவள்,
ஒடுங்கிய இரவு,
என் தனிமையில் உறவு.

அவள்,
ஓவிய வர்ணம்,
என் தேடலின் கிண்ணம்.

Post Comment

Saturday, July 06, 2013

அழகிய தருணங்கள்

அம்மாவின் மடியோடு
உறங்கிய இரவுகள்,
அப்பா அரவணைத்து
தட்டிக் கொடுத்த நேரங்கள்..

இருட்டு வானில்
ஜன்னல் நட்சத்திரம்
எண்ணி மகிழ்ந்த
இரவுகள்..

எதற்கும் துணியும்
இயல்பான வீரனாய்
சுற்றித் திரிந்த
பள்ளிப் பருவங்கள்..

நட்புக்குள் வாழ்வை
சுருக்கி நகைப்புடன்
நடந்த தருணங்கள்..

கரையை சேர போராடும்
அலையில் காதலோடு
கால் நனைத்த நாட்கள்..

மனதை திருடிய
மங்கையை மண மேடையில்
கைப் பிடித்த நிமிடங்கள்..

முதல் மோகத் தீயில்
வெட்கப் போர்வை எரிய
வியர்வையோடு கழிந்த
பொழுதுகள்..

என் உயிர் சுமந்து
புதிதாய் பூத்த பிஞ்சை
அள்ளிக் கொஞ்சி
விளையாடிய வினாடிகள்..

வறட்சியிலும் பசுமையிலும்
நம்பிக்கையோடு வாழ்ந்த நாட்கள்..
சுழலும் வாழ்வினில்
சுகமான அழகிய தருணங்கள்.

ஓடி ஒடுங்கிய -ஒரு
உடலோடு உறவாடும் ஆத்மாவின்
நினைவலைகளின் வாசிப்பு
இவ் வரிகளாய்..

Post Comment