Monday, May 23, 2011

அனுபவமே வாழ்கையா?

வாழ்கை விசித்திரமான ஒன்றுதான். யாராலும் அவ்வளவு சீக்கிரமாக இதை புரிந்து கொள்ள முடியாது. இதுவரைக்கும் எனக்கும் புரியவில்லை, ஆனால் புரிந்து கொள்ள முயற்சிகள் மட்டும் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படி நான் செய்த முயற்சியின் பலனாக ஒரு விடயத்தை நான் புரிந்து கொண்டேன்.

அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதுதான் எனது இக் கட்டுரையின் நோக்கம்.

பெரியவர்கள் சில நேரம் பேசிக் கேட்டிருப்பீர்கள்... அதாவது 'அவனுக்கு அனுபவம் போதாது, அதனால் அவன் செய்தால் சரியாக வராது' என்றெல்லாம் பேசுவார்கள். அப்பொழுது நாம் அதை பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் அதற்குள் தான் முழு வாழ்கையின் தத்துவமும் அடங்கியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

ஆமாம் ஒரு மனிதனை பூரணமாக்குவது அவன் பெற்றுக் கொள்ளும் அனுபவங்கள்தான். அது நல்லவிடயமாகவும் இருக்கலாம், அல்லது தீய விடயமாகவும் இருக்கலாம். வாழ்கை என்ற ஆசானை நாம் அடயாளம் காணவேண்டுமெனில் அனுபவம் என்ற பாடசாலைக்குள் நுழைய வேண்டியதாயிருக்கும். வாங்க கொஞ்ச நேரம் போயிட்டு வரலாம்.

அனுபவம்!!! இதற்குள் ஒழிந்திருப்பது மிகப் பெரிய அர்தங்கள்.

அனுபவம் என்றால் என்ன?

நமக்கு நடந்த விடயங்களை நாம் அனுபவம் என்று சொல்கின்றோம். அது உண்மைதான். இந்த அனுபவங்களில் பொய் என்று எதுவும் கிடையாது. காரணம் அனைத்துமே நடந்து முடிந்தவையாக இருக்கும். ஒரு விடயம் நடைபெற்று முடிந்தால் அதை யாரும் பொய் என்று சொல்ல முடியாது. இதை நான் இங்கு சொல்வதற்கு காரணம் சில பேர் சில விடயங்களுக்காக பொய்யான அனுபவங்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் எதை கூறுகிறார்கள் என்று பிறகு பார்ப்போம் ஆனால் அப்படி கூறுவது பொருத்தம் அல்ல என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த அனுபவத்தை பொதுவாக இரண்டு வகைகளாக பிரிக்க முடியும்
1. நல்ல வகையான அனுவங்கள்.
2. தீய வகையான அனுபவங்கள்.

ஒரு மனிதன் அவனுடைய வாழ்கையில் இதில் இரண்டையும் பெறுபவனாகவே இருப்பான். இதனடிப்படையில் தான் இன்று உலகமே இயங்குகிறது. உதாரணமான கண்டுபிடிப்புகள், ஆராய்சிகள், மனித செயற்பாடுகள், அனைத்துக்கும் காரணகர்தாவாக இருப்பது அவன் பெறும் அனுபவங்கள் தான்.

ஒரு சராசரி மனிதன் நெருப்பை கண்டு அஞ்சுகிறான். காரணம் அவனுக்கோ அல்லது அவன் சார்ந்த யாருக்கோ அந்த நெருப்பு சுட்டு காயப்படுத்திய அனுபவம் இருக்கும். இது போன்றுதான் எல்லாமே.

இன்று உலகில் நடக்கின்ற பிரச்சினைகளுக்கோ அல்லது நல்ல விடயங்களுக்கோ எங்கோ ஒரு மூலையில் ஒரு அனுபவம் தான் காரணமாக இருக்கும்.

இன்று உலகில் நடக்கின்ற யுத்தங்களளை எடுத்துக் கொள்ளுங்கள் அந்த இரு தரப்பினரிடையும் ஏதோ ஒரு கசப்பான அனுபவம் இருக்கும்.

ஆனால் நாம் இங்கு நோக்க/கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் நாம் பெறும் நல்ல/தீய அனுபவங்கள் மற்றவரை எவ்வாறு பாதிக்கிறது அதை தடுக்க என்ன முறைகளை கையாளலாம் என்பது தான். உதாரணமாக என்னுடைய வாழ்வின் ஒரு சிறிய பகுதியை நான் இந்த அனுபவத்துடன் இணைக்கின்றேன்.

"என்னுடைய தந்தை சற்று கடினமானவர். அவருக்கு முன்னிலையில் நாம் எதுவும் அவரைவிட மிஞ்சி சொல்லிவிட முடியாது. ஆம் தன்நிலை சரிதான் என்று சொல்பவர். இவருடைய மகனாக பிறந்த எனக்கு இருக்கும் பிரச்சினைகளை உங்களால் ஊகிக்க முடியும் என்று நினைக்கிறேன். இவர் இவ்வாறு செயற்படுவதற்கு காரணம் என்ன? ஆம் நாம் மேற் சொன்னது போன்று அவர் அவருடைய வாழ்கையில் சந்தித்த அனுபவங்கள் தான். இதை அவரே பல தடவைகள் என்னிடம் கூறியுள்ளார். சின்ன வயதில்,படிக்க வேண்டிய வயதில்(8) குடும்ப சுமை காரணமாக (அவருடைய தந்தை இறந்து விட்டதால்) வேலைக்குச் சென்று இருக்கின்றார்.

அந்த நேரத்தில் அவர் பெற்ற அனுபவங்கள் மிகக் கடுமையானது. ஒரு அடிமை போன்ற வாழ்கை. எதுவும் எதிர்த்து பேசி விட முடியாது. தனக்கு மேல் இருக்கும் பணம்,பலம்,செல்வாக்கு படைத்த முதலாலிகளின் மனநிலை இவரையும் ஆட்கொள்கின்றது. அந்த நேரத்தில் சிறுவனாக இருந்தபடியால் அந்த தாக்கம் இவரை சற்று வெகுவாகவே பாதித்திருக்கும். அதாவது அடக்கி ஆழும் தன்மை. இது இன்னும் சற்று காலப் போக்கில் அவருடைய குணமாகவே மாறிவிடுகிறது.

பார்தீர்களா? இவருடைய வாழ்கையின் பாதையை மாற்றியது எது? இவர் பெற்ற அனுபவங்கள். அதனை அடிப்படையாக கொண்டுதான் இவர், இவர் சார்ந்தவர்களை வழிநடத்துவார். இது தான் இன்றய உலகில் நடந்து வரும் நிகழ்வுகள்.

இன்னும் உங்களுக்கு புரியவில்லை என்றால் மிகவும் சுலபமான ஒரு உதாரணம்.
படிக்காமல் இன்று வாழ்வில் கஷ்டப்படும் ஒரு வரித்திடத்தில் சென்று உங்கள் வாழ்கை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டால் அவர் கூரும் பதில் 'படிச்சு இருந்தா நான் இவ்வாறு கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்' என்பதாக இருக்கும்.

படிச்சு முடிச்சு நல்ல வேளையில் இருந்தும் அவன் வாங்கும் சம்பளம் போதவில்லை என்பவனிடம் சென்றால் 'நான் படிச்ச காலத்துக்கு சொந்தமாக ஒரு தொழில் செஞ்சு இருந்த நல்லா இருந்திருக்கும்' அப்படின்னு சொல்வார்.

இப்போது நான் உங்களிடம் கேற்கிறேன் இதில் எது உண்மை? சொல்ல முடியுமா உங்களால்? இரண்டும் உண்மைதான் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்களை பொறுத்து.

இதுதான் வாழ்கை இந்த ஒரு சின்ன விஷயத்துலதான் முழுஉலகமும் இயங்குகிறது. நாம் நமக்கு கிடைக்கும் அனுபவங்களை வைத்தே மற்றவர்களை வழி நடத்துகின்றோம். இது சரியா? பிழையா? என்று கேட்டால் அது ஒரு புறம் இருக்க இதனால் ஏற்படும் விளைவுகளைப் பார்த்தால் அது எல்லோருடைய பார்வையிலும் சரி என்றுபடாது.

காரணம் இங்குதான் பிரச்சினை ஆரம்பமாகின்றது. உதாரணமாக என்னுடைய குழந்தையின் மீது, நான் பெற்ற அனுபவங்களை வைத்து அவனுடைய வாழ்கையை பற்றி தீர்மானமெடுக்க முடியாது. காரணம் நான் வாழ்ந்த காலத்தில் அவ்வாறான சூழ்நிலை, அது சரிதான் என்ற சமூக நியதி போன்றவைகள் என்னை கட்டுப்படுத்தியிருக்கலாம். இதை வைத்துக் கொண்டு என் பிள்ளைக்கும் அப்படித்தான் இருக்கும் என்று நான் முடிவெடுக்க முடியாது. மாற்றம் என்பது இன்னும் நடந்து கொண்டுதானே இருக்கிறது. என்னுடைய காலங்கள் மாறி இப்போ வித்தியாசமான ஒரு காலமாக இருக்கும்.

எனவே அனுபவங்களை வைத்து மட்டும் நாம் முடிவெடுத்துவிட முடியாது. இதை அனைவரும் புரிந்து கொண்டால் சகல பிரச்சினைகளுக்கும் இது ஒரு தீர்வாக இருக்கும். ஒரு முறை நடந்ததுதான் மறுமுறை நடக்கும் என்று வாழ்கை நமக்கு எதையும் கற்பித்து தரவில்லை. சில அனுபவசாலிகளே பல இடங்களிலே தோற்று விடுகிறார்கள்.

அனுபவம் என்பது வாழ்கைக்கு இன்றியமயாதவொன்று. ஆனால் அதை மட்டும் நம்மை சார்ந்தவர்களின் வாழ்வுபற்றியோ அல்லது நம் சமூகம் பற்றியோ முடிவெடுத்துவிட முடியாது.

அனுபவ அறிவுரை என்ற பெயரில் பூமிக்கு கிடைக்க வேண்டிய எத்தனையோ நல்ல விடயங்கள் இன்று அதற்குள் புதைக்கப்ட்டுக் கொண்டிருப்பதையும் நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அனுபவம் இல்லை என்பதற்காக எத்தனையோ இளைஞர், யுவதிகள் தொழில் வாய்பில்லாமல் சிரமப்படுவதையும் கண்டு கொண்டேயிருக்கிறோம்.

அது மட்டுமல்ல நாம் பெற்ற அனுபவங்களை மற்றவர்கள் மீது திணிக்க கூடாது. ஒரு பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் நாம் அவர்களுக்கு என்னுடைய வாழ்கையில் இப்படி நடந்தது என்று சொல்லலாம். 'அதை வைத்து நீயும் இவ்வாறு இரு உன்னுடைய வாழ்வும் நன்றாயிருக்கும் அல்லது இவ்வாறு நடக்காதே அது உன்னுடைய வாழ்கைக்கு ஒத்துவராது' என்றெல்லாம் நாம் அறிவுரை கூற முனைந்தால் சில வேளை நம்மால் அவனுடைய வாழ்கை கெட்டுப் போகவும் இடமுண்டு. அனுபவம் நமக்கு நம்முடைய வாழ்கையை இன்னும் சிறப்பாக்கி கொள்ள கிடைப்பது அது மற்றவர்களின் வாழ்கைக்கு எந்த வகையிலும் உதவ போவதில்லை. அவரவர் பெறும் அனுபவங்களே காலம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப் பெரும் பரிசாகும்.

இனிவரும் காலத்திலாவது அனுபவத்தை மட்டும் வாழ்கையாக்கி கொள்ளாமல் அனுபவங்களை ஒரு வழிகாட்டியாக மாற்றி வாழ முயற்சி செய்வோம் என்ற செய்தியோடு விடைபெறுகிறோம். இது எங்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் தான் இதை வாழ்த்தி வரவேற்பதா? இல்லை தர்கித்து தகர்பதா? இரண்டுக்கும் நாங்கள் தயார் நீங்கள்????

Post Comment

Wednesday, May 11, 2011

'இல்லாமல் நீ'



சுகங்கள் தொலைந்த நிமிடங்களை
சுகமாய் சுவாசிக்கிறேன்.
இரவுகளில் கசியும் கண்ணீரில்
என் இதயம் வாசிக்கிறேன்.

கவலையற்ற நிமிடங்கள் கடந்துவிட்டன,
சுவாசமும் தீயாய் எரிகின்றன,
விழிகளில் அருவிகள் வழிகின்றன,
என் இரவுகள் தனிமையில் விடிகின்றன.

உன் நினைவுகள் என்னை துளைக்கின்றன,
விழும் குருதியும் உன் பெயர் உரைகின்றன.
கனவுகள் கனவாகவே கலைகின்றன,
காலமும் வேகமாய் நகர்கின்றன.

உணரவில்லை என் காதலை நீ...
இனி உயிருமில்லை,
எனக்கு இல்லாமல் நீ.

இஷ்டம் போல் உன் சிறகை விரித்திடு பறவையே
நாம் பறக்க நீல வானம் இருக்குது பறவையே...
ஒழிக்காமல் உன் மழையை பொழிந்திடு மேகமே
உன்னை தாங்க இங்கு பூமி இருக்குது மேகமே...

மனம் விட்டு உன் மணத்தை வீசு மலரே
அதை வாழவைக்க தென்றல் உண்டு மலரே...
வாய்விட்டு ஒரு வார்தை சொல்லு பெண்ணே
உன்னை தாங்க என் கரங்கள் உண்டு பெண்ணே...

புரிந்து கொள்ளடி என்னை...
இல்லை,
புதைத்துக் கொல்லடி என்னை...

Post Comment

Sunday, May 01, 2011

அவன் இல்லையென்றால்



தரணியில் வீடுகள் எங்குமேயில்லை
வானமே கூரை, பூமியே வாசல்
ஏனெனில் அவனில்லை.

உடலை மறைக்க உடையில்லை
நிர்வாணமே நிதர்சனம்
ஏனெனில் அவனில்லை.

நடையைத் தவிர வேறு வழியில்லை
பயணம் பல மைல் தொலைவானாலும்
ஏனெனில் அவனில்லை.

புழுதி படிந்த மரங்கள்,
இலை மேல் அமரும் உணவுகள்,
காய்ந்து, நனைந்து கிடக்கும் கழிவுகள்,
ஏட்டுச் சுரக்காய் போன்ற பூமி,
ஏனெனில் அவனில்லை.

வாங்குபவன் இல்லை,
விற்பவன் இல்லை,
முதலாளிகள் யாருமில்லை,
காரணம் தொழிளாலியவனில்லை.

முயற்சிக்கே முகவரி கொடுத்தவன்
'அவன் இல்லையென்றால்'
என்ற என் கற்பனையின் கிருக்கலே அவை.

அசரவைக்கும் கடல் கூட
ஓயாமல் அலையடிக்க
இவனிடம் கற்றுக் கொண்டது போல்...
ஓயாத இவன் உழைப்பைக் கண்டு.

இயக்கமே உலகின் முதற்புள்ளி
அதையே இயக்கியவன் இவன்.

உலக இயக்கம்
சூரிய விடியலில் அல்ல.
இவன் கண்களின் விழிப்பில்,
கரங்களின் உழைப்பில்,
வியர்வையின் நீரில் தான்.

உலகத்தை இயக்குவதால் இவன் உழைப்பாளி.
அதை தன் தோலிலும் சுமப்பதால் தொழிளாலி.


இவ்வளவு செய்தும்
இவன் வாழ்கை மட்டும்
முன்னேறவில்லை.

முயற்சிக்கு முன்னுரிமையில்லை
இருந்திருந்தால் என்றோ முன்னேறியிருப்பான்.

அதிர்ஷ்டமும், பணமும்
இந்த உலகை ஆளும் வரை
இவன் வாழ்கை விடியப் போவதேயில்லை...

தொழிளாலர் தினம்
இதுவல்ல சரி...
என் தோழனின் தினம்!!!
இதுதான் சரி.

வாழ்த்துக்கள், ஊர்வலங்கள்,
மேடைப் பேச்சுக்கள், பரிசுகள்,
வழமைபோன்றே இன்று மட்டும்....

கொதிக்கும் மனதிடம் புத்தி சொல்கிறது
விடு; இன்றாவது அவனை கொண்டாடட்டும் உலகம்


தெரிந்த உண்மைக்குள்
மறைந்து கிடக்கும் புதிர் போல்,
முன்னேறும் உலகில்
இவன் மட்டும் முடங்கியே கிடக்கிறான்

நானும் வாழ்த்துகிறேன்
இனிமேலாவது
அவன் வாழ்கை மலர...

Post Comment