Sunday, August 22, 2010

ஒபாமா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் : வெள்ளை மாளிகை விளக்கம்


Virakesari.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதில் எந்த்விதச் சந்தேகமும் இல்லை என வெள்ளை மாளிகை உறுதிபட தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு துணைச் செயலர் பில் பர்டன் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்து மக்களிடையே சந்தேகம் நிலவி வந்தது. இதுகுறித்து அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

அதில், 18 சதவீத அமெரிக்கர்கள், ஒபாமா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தனர். 34 சதவீதம் பேர், ஒபாமா கிறிஸ்தவர் என்று தெரிவித்தனர். 43 சதவீதம் பேர், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை என்று கூறினர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் போது, 11 சதவீதம் பேர் ஒபாமா முஸ்லிம் என்றும், 48 சதவீதம் பேர் அவர் கிறிஸ்தவர் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, ஒபாமா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்தான் என்று வெள்ளை மாளிகை உறுதி அளித்துள்ளது.

இதுகுறித்து, வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு துணைச் செயலர் பில் பர்டன் கூறுகையில்,

"பெரும்பாலான அமெரிக்கர்கள் பொருளாதாரம் சீரடையுமா, ஈரான், ஆப்கானிஸ்தான் போர் எந்த நிலையில் உள்ளது என்பன குறித்து யோசித்துக் கொண்டிருக்கின்றனர். சிலர், ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

இது தேவையற்ற வேலை. இருப்பினும், ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்துகொள்ள பலர் ஆர்வமாக இருப்பதால், அதை தெளிவுபடுத்த வேண்டியது எங்கள் கடமை.

அதிபர் ஒபாமா நிச்சயமாக ஒரு கிறிஸ்தவர்தான். அவர் தினமும் பிரார்த்தனை செய்கிறார். போதகர்களைச் சந்தித்து ஆன்மிகம் தொடர்பாக உரையாடுகிறார். அவர்களது வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்கிறார்.

மதம் தொடர்பான அவரது நம்பிக்கைகள் அவரது தனிப்பட்ட விவகாரம். அதை விவாதப் பொருளாக மாற்ற வேண்டியதில்லை.

நாட்டில், எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. மக்கள் அதில், கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டில் பொருளாதாரத்தை சீரமைப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற பணிகளில் ஒபாமா கவனம் செலுத்தி வருகிறார்" என்றார்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment