Tuesday, December 25, 2012

கொலைகார நண்பன்..


என் கண்கள் பார்க்க
வெறுத்தது
இவன் முகமே..

ஒரு கொடூரச் சம்பவம்
சுமந்து பதை பதைக்கிறது
என் மனமே..

சிந்தனைச் செல்களுக்குள்
ஒரு சோகக் கீற்று
துளிர் விடுகிறது..

நானும்,அவனும்
நல்ல நண்பர்கள் தான்.
அந்த அனர்த்தத்துக்கு முன்னர்..

அப்பா.. அறிமுகப்படுத்தியவன்
இவனோடு விளையாட
விலைகள் இல்லை.

எனக்கு காதலைக் காட்டியவன்.
என் காதலியாய், அவளை
அவனுக்குத்தான்
முதலில் காட்டினேன்.

இன்று..
பல கோடி உயிர்களைப் பறித்தவன்
இவனைத் தண்டிக்க உலகச் சட்டத்துக்கு
தெரியவில்லை..

அன்றில் இருந்து
இவனோடு உறவாடுவதில்லை
நான்...

அதன் பின்பு
இன்று தான் என் முதல் தரிசனம்.
இதுவும் கடைசியாகத்தான் இருக்கும்.

அவன் நடத்திய
மனித வேட்டையின்
வினாடிகளே என் ஞாபக அணுக்களில்..

இதயம் வெடித்து இரத்தமாய்
கண்ணீரைக் கக்கியது கண்கள்.

திரும்பும் திசை எங்கும்
மனிதப் பிணங்களே..
என் விழிகளில் தெரிகின்றன.

நாலு திசையிலும்
உணர்விழந்த கதறல்களே..
காதுகளில் ஒலிக்கின்றன.

நினைவுகள் பின்நோக்கி நகர
நான் மெல்ல மெல்ல
அவனை முன்நோக்கி நடந்தேன்.


என் மடியில்
உயிர் துறந்த ஒரு சிறுமி,
நான் பிறக்கி எடுத்த பிணங்கள்,

பிரியும் உயிரை அருகில் இருந்து
அனுபவித்த நிமிடங்கள்,
உடையின்றி, சொத்தின்றி
நிர்வாணமாக்கப் பட்ட மனிதர்கள்,

பயத்துடன், பரிதவிப்புடன்,
பதட்டத்துடன் உறவுகளைத் தேடிய விழிகள்..

இவைகளே..
இவனைப் பார்க்கும் போது
என் கொடூர நினைவுக்குள்
இன்றும் ஒலிக்கும் சோக கீதங்கள்.

பேச மறுத்தது வாய்.
உள்ளம் பேசியது..

"ஏய் கொலைகாரக் கடலே!
நாங்கள் விட்ட கண்ணீர் சேர்த்து
ஒரு சமுத்திரம் செய்து
உன்னை அழித்தொளிக்கிறேன் பார்"
என்று சவால் விட்டது
என் சிறிய மூளை.

அமைதியாய் வந்து
என் பாதம் தொட்டு
மன்னிப்புக் கேட்டுச் சென்றது..
அந்த அலை..
கொலைகார நண்பனின் தூதாய்.

வந்த அலையிடம்
வாய் விட்டுச் சொன்னேன்.
"மறக்கவே முடியாத போது
மன்னிப்பு எங்கிருந்து சாத்தியம்??"

Post Comment

Thursday, December 06, 2012

"வறுமைக் காற்று"


சோகமாய் சொல்லும்
கவியிலும் சுவாரஸ்யம்
உண்டு.

ஏழையவன் வாழ்வைச்
சொல்லுகையில்
கண்ணீரே உண்டு.

வறுமையின் வலையில்
வசப்பட்டவனே
வாழ்வினில் வலி சுமப்பவன்.

தண்ணீரில் விழுந்த கற்கள் போல்,
வறுமைக் கண்ணீரில்
மூழ்கிப் போனவன் அவன்.

தீயுடன் உறவாடிய
கைக் குழந்தை போல்,
நிஜத்துடன் உறவாடும்
அவனும் என்றும்
காயம் கண்டவனே...

வறியவன் வாழ்வு பற்றி
இன்று அன்றாட அரசியல்..
நெஞ்சில் வருத்தமின்றி
மேடையில் அவன் உணர்வுகள்..

வியாபாரம் செய்கிறான்
அரசியல்வாதி
"ஐயோ..." அவனையே
தலைவன் என்கிறான்
அந்த அறியாவாதி.

பக்கத்து வீட்டுப் பவித்திராவோ?
பாலைவன ஆபிரிக்காவோ?
வறுமையில் பிறந்தவன்
வாழ்விழந்து தவிக்கிறான்.


உலகின் ஒரு மூலையில்
உணவில்லாமல் உயிர்விடுகிறது
ஒரு கூட்டம்.

மறு மூலையில் உணர்வில்லாமல்
உணவை வீணடிக்கிறது
ஒரு கூட்டம்.

ஆசையும், பணமும்
மனிதனை ஆளும் வரை
உதவும் கரங்களுக்கு
உயிரோட்டமில்லை.

வறுமைத் தொற்று நோய்
அழியவும் போவதில்லை.

கனவு உலகத்தில்
வறுமை ஒழிப்புக்கே
முதலிடம்.

வறியவன் வரியாய்
உரத்து ஒலிக்கிறது
இக் கவி என் கனவு உலகில்...

Post Comment