Sunday, September 05, 2010

உயர்ந்தது நட்பா? (சுவைக்க ஒரு சூடான பகுதி

இது என்ன புதுசா ஒரு குழப்பம்? ஏன் இப்படி ஒரு கேள்வி? இதில் என்ன சந்தேகம்? என்று சொன்னாங்க சில பேர். நான் இந்தக் கேள்வியை அவர்களிடம் கேட்டபோது. ஆனா இதில் என்ன விஷேசம் என்றால் நான் கேட்ட கேள்விக்கு யாருமே விடை சொல்லவில்லை என்பது தான். அவர்கள் மாறி என்னிடம் கேள்வி கேட்டார்களே தவிர பதில்???????? சரிங்க இப்ப உங்ககிட்ட கேட்கிறேன் உயர்ந்தது நட்பா? தொடர்ந்து படிப்பதற்கு முதல் விடையை உங்க மனதுக்கு சொல்லிட்டு படிங்க.

ஆம் உயர்வானது நட்புத்தான் என்று நாம் எத்தனையோ விடயங்களில் கேள்விப் பட்டிருக்கிறோம். சினிமா, கதை ,கவிதை என்று நட்பை விபரிக்காத உபயோகப்படுத்தாத இடமேயில்லை எனலாம். நட்பு என்றால் என்ன என்ற கேள்வி நம்ம மனதில் எப்பயாவது தோன்றியதுண்டா? கொஞ்சம் யோசிங்க. அப்படி உங்களுக்கு தோன்றியிருந்தால் நீங்கள் இதை படித்து உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஏனெனில் விடை உங்களுக்கு கிடைச்சிருக்கும். சரிங்க நம்ம விஷயத்துக்குள் நுழைவோம்.

நட்பு என்றால் என்ன?
எச் சந்தர்பத்திலோ அல்லது எந்த சூழ்நிலைகளிலோ ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் இன்னொரு தனிமனிதனுடனோ அல்லது ஒரு குழுவிடனோ எதிர்பார்ப்புகள் இன்றி ஏற்படும் அன்பு தான் இந்த நட்பு என்று நாம் சுருங்கச் சொன்னாலும் இதற்கு ஒரு பொதுவான வரைவிலக்கனம் யாராலும் கொடுக்கப்படவில்லை. (எல்லாவற்றினதும் ஆழத்தை அறிந்த புலவர்களால் கவிஞர்களால் நட்பின் ஆழத்தை மட்டும் அறியமுடியவில்லை.) நட்பை பலவாறாக புகழ்ந்தவர்கள்தான் அதிகம். அது புனிதமானது என்று சொன்னவர்கள்தான் அதிகம். அது இல்லை என்றால் ஒன்றுமில்லை என்று சொன்னவர்கள்தான் அதிகம். நட்பை யாரும் குறைகூறியோ அல்லது கேவளப்படுத்தி பேசியோ நாம் கூடுதலாக கேட்டிருக்க முடியாது. எனவே இதெல்லாம் வைத்து பார்க்கும் போது நட்பு உயர்வானதுதான் என்ற முடிவுக்கு நாம் வரலாம்.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது. நாம் இந்த நட்பை பற்றி இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு என்ன காரணம்? நிறைய இருக்கலாம். அது சிலவேளை சாதகமாகவும் சில வேளை பாதகமாகவும் இருக்கலாம். எந்த ஒரு விடயத்திலும் இரண்டு வாதங்கள் முன் மொழியப்படும் போது நட்பில் மட்டும் ஒரே வாதம் அதுதான் நட்பு வாதம் ஒரே கொள்கை அது தான் நட்புக் கொள்கை என்று நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை.

ஒரு மனிதன் நல்லவனோ கெட்டவனோ அனைவருக்கும் நட்பு என்பது பொக்கிஷமாகவே விளங்குகிறது.

இருந்தாலும் இந்த நட்பால் சங்கடப்பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நட்பு எனும் கருவி கொண்டு நம்மை வீழ்த்தி விட ஒரு கூட்டம் நம் பின்னாலயே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் கொஞ்சம் நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். ஏன் சிலவேளை இது உங்கள் வாழ்கையிலும் நடந்திருக்கலாம். நாமே சில சமயம் சம்மந்தப்பட்டிருக்கலாம்.
எனவே நட்பு என்பது இரண்டு விடயங்களுக்கு வழி வகுத்து நிற்கிறது.
1. நல் வழி
2. தீய வழி

நல் வழிக்கும் தீய வழிக்கும் வழி சமைக்கும் நட்பை உயர்வானது என்று சொல்லலாமா? என்ற கேள்வி என் மனதில் ரொம்ப நாளாகவே ஓடிக் கொண்டிருக்குதுங்க. அதற்கு நான் கண்ட பதில் தான் இந்த தலைப்புக்கே காரணம். என் வாழ்விலும் நட்பு நாலா திசைகளிலும் விளையாடித்தாங்க இருக்கு. சரி என் சொந்த விஷயங்களை ஓரம் கட்டி பொதுவான விஷயத்துக்கு வருவோம்.

நான் நின்ற ஒரு பஸ் தரிப்பிடம்.... அங்கு நின்றவர்களிடம் என் வினாவைத் தொடுத்தேன்.

'தம்பி இந்த காலத்துல எவனையும் நம்ப முடியாது. நம்ம கூடவே இருந்து ஆட்டயப் போட்டிட்டு போய்யிடுவாங்க..'(ரொம்ப அடி வாங்கியிருப்பாரோ???) என்று ஆரம்பித்தார் அண்ணா ஒருவர்.

'நீங்க என்ன சார் சொல்ரீங்க நண்பன் என்டு நினைச்சி வீட்ல விட்டா என் அக்காவையே இழுத்துட்டு ஓடிட்டான்'(நீங்க ரொம்ப பாவம் சார்) என்றான் இன்னொருவன்.

'ஆமா சார் இந்த காலத்துல நண்பர்கள்ட கூட நடிச்சுதான் பழக வேண்டியிருக்கு'(இது என்னடா புதுக் கதை) என்று அவர்களுடன் ஒத்துப் போனான் இன்னொருத்தன்.

'நட்பில்லாமல் வாழ முடியுமா???'(சரியான கேள்வி) என்று விவாதம் தொடங்கினால் ஒரு யுவதி அவளின் தோழிகளோடு.

'நண்பர்கள் கூட அளவாக பழகினா நல்லம் தானே'(இது என்ன அரிசியா அளவு பார்த்து வாங்க) என்று அறிவுரை கூறினால் அங்கிருந்த ஒரு வயதான அம்மா.

'தம்பி இன்றய காலத்துப் பசங்களுக்கு நட்பின் கருவே தெரியல' (அப்ப உங்களுக்குத் தெரியுமா????) என்றார் இன்னொரு வயதான தாத்தா.

எனக்கும் அவர் மேல கொஞ்சம் கோபம் தான் இருந்தும் அவரின் கருத்து எனக்கும் சற்று நியாயம் என்று பட்டது. அதனால் எதுவும் பேசாமல் அவர்கள் சொன்ன செய்திகளோடு பஸ் ஏறினேன் நானும் ஒரு முடிவுடன்.

என்ன பார்க்கிறீங்க இத நீங்களும் கேட்டு இருக்கலாம் அல்லது பேசியிருக்கலாம். எனவே இன்றய காலத்தில் நட்பு அந்த தாத்தா சொன்ன மாதிரி அதன் தன்மையை பெருமதியை இழந்துள்ளதா?

இப்ப நம் முன்னாடி 2 கேள்விகள் இருக்குதுங்க.
1. நல் வழிக்கும் தீய வழிக்கும் வழி வகுக்கும் ஒரு விடயத்தை உயர்வானது என்று சொல்ல முடியுமா?
2. நட்பு தற்காலத்தில் அதன் தன்மையை இழந்துள்ளதா?

இவை இரண்டுக்கும் கிடைக்கும் பதில் தான் இந்த எழுத்துக்களின் நிலமையை புரட்டிப் போடப் போகிறது.


முதல் கேள்விக்கு பதில் அளிக்கும் முன் இரண்டாம் கேள்விக்கு பதில் கொடுப்பது சற்று சிறப்பாய் இருக்கும் என நினைக்கிறேன். அதாவது நட்பு இன்றய காலத்தில் அதன் தன்மையை இழந்துள்ளதா? இக் கேள்விக்கு விடை கொடுப்பதற்கு முன் சற்று ஒரு விடயத்தை தெளிவு படுத்த வேண்டியது என் கடமை கூட. அதென்ன தற்காலத்தில்? அப்போ அன்றய காலத்தில் நட்பு நட்பாக இருந்ததா? என்ற ஒரு சிந்தனை உங்க மனதில் வரலாம். நம்ம ஒரு பழ மொழி கேள்விப்பட்டிருப்போம் அதாவது உயிர் காப்பான் தோழன். இது பழ மொழி மட்டுமல்ல பழய வரலாறு கூட. இதற்கு மேலும் அந்த காலத்தைப் பற்றி நான் விபரிக்க தேவையில்லை. எனவே அந்தக் காலத்தில் நட்பு நட்பாகத்தான் இருந்தது என்பதற்கு நிறைய வாதிடலாம். அக் காலத்தில் நவீனம் இருக்கவில்லை ஆனால் நாகரீகம் இருந்தது உண்மையான நட்பு இருந்தது. இன்றய காலத்தில் அது சற்று கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது.

இந்தக் கேள்விக்கு நமக்கு விடை கிடைக்க வேண்டும் என்றால் நாம் நட்பின் அதாவது உண்மையான நட்பின் தன்மைகளை அறிந்து கொண்டால் நான் என்ன நீங்களே சொல்வீர்கள் நட்பு இன்றய காலத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை.

முதலில் அதைப் பற்றி பேசலாம் வாங்க

1. சுயநலம் அறவே இருக்கக் கூடாது.
2. ஏதிர்பார்புகள் அற்றதாய் இருக்க வேண்டும்.
3. நம்பிக்கை காணப்பட வேண்டும்.
4. கருத்து மோதல்கள் காணப்பட வேண்டும்.
5. மரியாதையுடன் கலந்த மகிழ்சி இருக்க வேண்டும்.
6. மற்றவனின் கருத்துக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்
7. எந்த நேரத்திலும் உதவும் மனநிலை இருக்க வேண்டும்.

எனவே இது அடிப்படையாக இருக்க வேண்டிய பண்புகள். இவற்றில் ஒன்றை இழந்தாலும் அது நட்பின் தன்மையை இழந்து விடும். இதில் எல்லாம் சரி அது என்ன கருத்து மோதல்கள் இருக்க வேண்டும் என்று யோசிக்கிரீங்களா? ஆமாங்க நிச்சயமாய் நட்புக்குள் இது காணப்பட வேண்டும். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மிகவும் நெருக்கமாக பழகுகிறார்கள். இவர்களுக்கு இடையில் இருப்பது நட்பா? காதலா? என்று எவ்வாறு அறிவது? காதல் என்றால் அங்கே கருத்து முரண்பாடுகள் குறைவாகவும் நண்பர்கள் என்றால் மிக அதிகமாகவும் காணப்பபடும்(பொதுவாக). எனவே இதுவும் அடிப்படை பண்புகளில் ஒன்றுதான்.

இப்ப யோசிங்க இன்றய காலத்தில் நட்பு அதன் தன்மையை இழந்துள்ளதா? இல்லையா? நிச்சயமாக இழந்துள்ளது. அடிப்படை தன்மைகளில் முதலாவது தன்மையிலயே நம் நட்பு நின்று விடுகிறது. இக் காலத்தில் சுயநலம் அற்றவர்களை பார்க்கவே முடியாது. எனவே நட்பு இன்றய காலங்களில் அதன் தன்மையை இழந்து வருகிறது என்பது தான் நிஜம்.

இன்றய நவீன உலகத்தில் நண்பர்கள் தேடுவது என்பது பெரிய விடயமே இல்லை.(Facebook, twitter etc....) ஆனால் அவ்வாறு நாம் தேடிய நண்பர்கள் நட்பின் தன்மை உள்ளவர்களாக இருக்கிறார்களா? அல்லது நாம் அவர்களுடன் நட்பின் தன்மை வரையறை கொண்டு பழகுகிறோமா??? என்றால் 1% மட்டுமே அல்லது அதனிலும் குறைவு. அன்று நண்பனுக்கு ஆபத்தான நிலைகளில் உயிரைக் கொடுக்கவும் உதவி செய்யவும் துணிந்த நட்பு இன்று வெறுமனே கேலிக்கும் அரட்டை அடித்தலுக்கும் நேரத்தை வீண் விரயமாக்குவதற்கும் தான் பயன்படுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. தேவையென்றால் பேசலாம் இல்லை என்றால் bye என்று சொல்லும் நண்பர்கள் தான் இன்று அதிகம். நண்பன் தன் உதவி தேடி வருகிறான் என்று அறிந்தால் ஒழிந்து கொள்ளும் நண்பர்கள்தான் இன்று அதிகம்.

எதிர்பாற்பற்றது நட்பு. ஆனால் இன்று சில தேவைகள் முடிய வேண்டும் என்பதற்காகவே சிலருடன் நட்பு. ஆகவே அன்றய கால கட்டத்தில் நட்பின் தன்மை மாறுபட்டதோ இல்லையோ அது எனக்குத் தெரியாது அக் காலத்தில் நான் வாழவும் இல்லை. ஆனால் இக் காலத்தில் நிச்சயமாக மாறியிருக்கிறது. வெறும் வாய்ப் பேச்சால் மட்டும் அலங்கரிப்படக் கூடிய ஒரு உயிரற்ற பொருள்தான் இன்று என்னுடைய பார்வையில் நட்பு. இதனால் தான் நட்பு இன்று தீய விடயங்களுக்கும் வழி வகுக்கிறுது.


நல் வழிக்கும் தீய வழிக்கும் இடம் கொடுக்கும் நட்பை உயர்வானது என்று சொல்லலாமா? ரொம்ப சிக்கலில் மாட்டிக் கொண்டேன் இந்தக் கேள்வியை என் நண்பர்களிடம் கேட்டு. நட்பு நல்ல விடயம் தானே அது ஏன் தீய வழிக்கு வழி சமைக்கிறது? அவர்களுக்கு விளங்கப்படுத்தியே என் வாய் அடைத்துவிட்டது. நட்பு என்ற களத்தைப் பயன்படுத்தி தீயவர்கள் இலகுவாக உங்களை ஆட்கொள்ள முடியும் என்று நான் உறுதிப்படுத்திய போது சற்று யோசித்து விடை சொன்னார்கள்.

சிலர் 'ஆம் அது நல்ல வழிக்கு வழி காட்டுகிறது நாம் ஏன் தீயதை பார்க்க வேண்டும் நல்லதை மட்டும் யோசிக்கலாமே'( ரொம்ப பெரிய மனசு சார்)என்றார்கள். இன்னும் சிலர் 'இல்லை நட்பை பயன்படுத்தி தீயவைகள் நடை பெருகின்ற போது அதை உயர்ந்தது என்று கூறமுடியாது'(அட பாவிகளா) என்றார்கள். மிகுதிப் பேர் 'வாழப் போகும் கொஞ்ச நாளில் இந்த ஆராய்சி ஏன் உமக்கு'(நல்ல பதில்) என்று ஒதுங்கிக் கொண்டார்கள்.

சரிங்க இப்ப நம்ம முடிவெடுக்க வேண்டிய தருணம் அதற்கு முதல் இந்த விடயத்துக்கு நான் முடிவெடுத்த முறையை விளக்குவது என் கடமை கூட. நட்பில்லாமல் ஏதாவது வேறு ஒரு விடயத்தை உதாரணமாக எடுத்து நான் பல பேரிடம் வினவினேன். இந்த விடயத்தில் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது. இதை நாம் உயர்வானது என்று சொல்ல முடியுமா எனக் கேட்டபோது இல்லை என்ற பதிலே உயர்ந்து நின்றது. இல்லை என்று பதில் சொன்னவர்களிடம் நட்பு பற்றி கேட்ட போது தடுமாறினார்கள். அப்போ நட்புக்கு மட்டும் நீதி தேவையில்லையா? என்ற தீர்மானத்தில்..... நன்மையும் தீமையும் இருக்கும் ஒரு விடயத்தை நிச்சயமாக உயர்வானது என்று சொல்ல முடியாது நட்பாய் இருந்தாலும் சரி. நன்மையுடன் தீமை கலக்கும் அடுத்த நிமிடமே அது கலங்கப்பட்டு விடுகிறது. எனவே நட்பை புனிதமானது என்றோ உயர்வானது என்றோ கூற முடியாது.(என்ன செய்வது சில உண்மைகளை சொல்லித்தான் ஆக வேண்டும்).

ஒரு சராசரி மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள். அவனிடம் நற்பண்பும் தீயபண்பும் இருக்கிறது. இவன் செய்யும் அத்தனை நல்ல விடயங்களையும் இவனால் விடப்படும் தவறு தகர்த்து இவனை இச் சமூகத்துக்கு கெட்டவன் என அடையாளப்படுத்தி விடும். இது போன்றுதான் இன்றய நட்பின் நிலமையும். நட்பில் புனிதம் இருந்தாலும் தூய்மை இருந்தாலும் இன்றய காலகட்டத்தில் நட்பினால் ஏற்படும் தீய செயல்கள் அதிகமாய் காணப்படுவதாலும் சமூகத்தில் ஏற்பட்ட நட்பை பற்றிய தவறான செய்திகள் காரணமாகவும் நட்பில் இன்று தீயவிதமான பார்வைகளே படிந்துள்ளன.

அது என்ன தீய செயல்கள் அதிகமாய் காணப்படுகிறது என்ற கேள்விகள் உங்க மனதில் ஓடலாம். சற்று விளக்குவது என் கடமை.

ஒரு வீதியோரத்தை தெரிவு செய்யுங்கள். அது நண்பர்கள் கூடும் ஒரு பிரதேசமாக இருகட்டும். அங்கு ஒரு 10 நிமிடம் நின்று வேடிக்கை பாருங்கள். அந்த நண்பர்கள் வட்டாரம் செய்யும் கேலிக்கைகளால் அவர்கள் மீது சமூகம் வீசும் பார்வை காவலிகள், தெருப் பொருக்கிகள், என்றெல்லாம் தவறான கூற்றுக்கள். அவர்கள் மீதும் படிந்து நட்பின் மீதும் படிந்து விடுகிறது. என்ன பார்க்கிரீங்க யாரோ செய்யும் பிழைக்கு நட்பு எப்படி பொருப்பெடுக்கும் என்று? தானே. விளங்குது உங்க தவிப்பு என்ன செய்வது சமூகத்தில் ஆரம்பத்தில் இருந்தே இந்த தவறான எண்ணம் குடி கொண்டு விட்டதால் நாமும் அதனுடன் ஒட்டி ஓட வேண்டியிருக்கு என்பது தான் யதார்த்தம்.ஆகவே ஒரு விடயத்தை பின்பற்றுகின்ற மனிதர்களை வைத்து அந்த விடயத்தை கணக்கிடும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்று இவ் விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியதும் எனது கடமை தான். இப்படித்தாங்க பிரச்சினைகள் தோற்றமெடுக்க ஆரம்பிக்கும்.

எனவே இவற்றை தடுக்கும் பொருப்பை நாம் சம்மந்தப்பட்ட அந்த நண்பர்களிடமே கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வோம். ஆனால் ஒரு விடயம் எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒரு விடயம் தான் நன்மைகளை தீமைகள் அழித்து விடும் என்ற எண்ணக் கரு. எனவே அதனடிப்படையிலும் தீமையுடன் கலந்திருக்கும் நட்பை உயர்வானது என்று சொல்ல முடியாது. இன்றய கால கட்டத்தில் வாழ்தப்படும் நட்பை விட தூற்றப்படும் நட்புகளே கூடுதலாக காணப்படுகிறது என்று நான் சொல்வதை விட நீங்கள் அன்றாடம் கேள்விப்படும் தகவல்களும் நடைபெறும் சம்மவங்களும் போதுமானது. ஆக மொத்ததில் நட்பை உயர்வானது என்று சொல்ல முடியாது.

அப்படியென்றால் தீர்வு அது இன்றய அனைத்து நண்பர்களின் கையிலும் தான் தங்கி உள்ளது. அவர்கள் மாறும் வரை நட்பு மாறப் போவதில்லை.

இருதியாக நாம் முடிவுக்கு வரலாம். அது என்ன? நட்பு இன்றய காலகட்டத்தில் அதன் தன்மையை இழந்து வேறு ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அதனால் ஏற்படக் கூடிய நன்மைகளை விட தீமைகள் அதிகமாகி அதன் புனிதத் தன்மையை இழந்துள்ளது.

எனவே 'தீய விடயங்களுக்கும் வழிசமைக்கும் அதே நேரத்தில் தன் புனிதத்தையும் இழந்துள்ள நட்பை உயர்வானது என்று இன்றய காலத்தில் கூறமுடியாது.'

சந்தர்பங்கள் சூழ்நிலைகள்தான் நட்பை இவ்வாறு மாற்றியிருக்கிறது என்று எவறாவது சொன்னால் நான் அவருடன் வாதிடத் தயார் 'ஆம் அந்த சந்தர்பத்தை ஏற்படுத்தியது நாம் தான்' என்று அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வரை.

ஆனால் இந்த நட்பு இன்றும் சற்று வாழக் காரணம் சில நண்பர்கள் இன்றும் நட்பின் தன்மையை இழக்காததுதான். நாம் அனைவரும் அதற்கு முயற்சிக்க வேண்டும்.

இந்த நட்புக்கு இருக்கும் ஒரு விஷேட தன்மையை சொல்லி இந்த தொடரை முடிக்கிறேன்.
அதாவது உறவுகளில் எந்த உறவுக்கும் இல்லாத ஒரு விஷேசம்.

தாய், தந்தை, கணவன், மனைவி, காதலி, காதலன், சகோதரன், சகோதரி இவ்வாறு எந்த உறவுக்குள்ளும் நட்பை இனைக்கலாம். இனைத்தால் அந்த உறவின் தன்மையை அது பாதிக்காது. உதாரணமாக சகோதரியுடன் நட்பை இனைத்தால் இந்த சகோதரத்துவம் பாதிக்காது அதே நேரம் அதே சகோதரியுடன் காதலி என்ற உறவையோ அல்லது மனைவி என்ற உறவையோ சேர்க்க முடியாது.

அப்படிப்பட்டது நட்பு. இன்று அதன் தன்மையை இழந்து நிற்கிறது காரணம் நாம். எனவே நட்பை நட்பாக மதிக்க நாம் அனைவரும் முன் வரவேண்டும். வெறும் கேலிக்கும் கூத்துக்கும் மட்டும் நட்பை பயன்படுத்தாமல் சாதனைகளுக்கும் சாதிப்பதற்கும் பயன் படுத்த வேண்டும்.

நட்பை உயர்த்த நட்புடன் ஒன்றினைவோம்.

இது என் தனிப்பட்ட கருத்துதான். வாழ்தி வரவேற்பதா? தற்கித்து தகர்பதா? இரண்டுக்கும் நான் தயார்.... நீங்கள்?????????;


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment