Monday, July 12, 2010

ஸ்பெயினா? நெதர்லாந்தா? யுத்தத்தில் ஸ்பெயின் சாம்பியன்



உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், ஸ்பெயினா? நெதர்லாந்தா? என்ற யுத்தத்தில் ஸ்பெயின் சாம்பியனானது.

உலக கிண்ணத்தில் இன்று நடைபெற்ற 64ஆவது போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது. ஸ்பெயின் உலக கிண்ணத்தை வெல்வது இதுவே முதல்முறை.மேலும் உலக கோப்பையை வென்ற 8ஆவது நாடு என்ற பெருமையையும் ஸ்பெயின் பெற்றது.

19ஆவது உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி கடந்த ஜுன் 11ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. இதில் 32 அணிகள் கலந்து கொண்டன. இதற்கு முன் உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் (5முறை) இத்தாலி (4 முறை) ஜெர்மனி (3 முறை)அர்ஜென்டினா (2 முறை) உருகுவே (2 முறை) இங்கிலாந்து (ஒரு முறை) பிரான்ஸ் (ஒரு முறை)அணிகள் இந்த முறை இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை. இவற்றுக்கு பதிலாக 2008ஆம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் முதல்முறையாக உலகக் கிண்ணத்துக்கு இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

ஸ்பெயின் அரைஇறுதியில் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது, மறுமுனையில் நெதர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்த இரு அணிகளும் இதற்கு முன் உலகக் கிண்ணத்தை வென்றது இல்லை. நெதர்லாந்து அணி 1974 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியிடமும் 1978ஆம் ஆண்டு ஆர்ஜென்டினாவிடமும் இறுதி போட்டியில் தோல்வி கண்டு கிண்ணத்தை கோட்டை விட்ட அணி. எனவே இந்த முறை எப்படியாவது கிண்ணத்தை கைப்பற்றி விட வேண்டும் என்று அந்த அணி கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியது. ஸ்பெயின் அணி தனது இறுதி 32 ஆட்டங்களில் இரண்டில் மட்டும்தான் தோல்வி கண்டுள்ளது. அதுபோல் நெதர்லாந்து அணியும் இறுதியாக நடந்த 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஸ்பெயின் அணியின் ஸ்டிரைக்கர் பெர்னான்டோ டார்ரஸ் முதல் 11 அணி வீரர்களில் ஒருவராக களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஜெர்மனிக்கு எதிராக அசத்திய பெட்ரோ களம் இறங்கினார். நெதர்லாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஆட்டம் துவங்கஆரம்பமாகி 5ஆவது நிமிடமே ஸ்பெயினுக்கு கோல் போட வாய்ப்பு கிடைத்தது. செர்ஜியோ ரமோஸ் தலையால் முட்டிய பந்து மின்னல்வேகத்தில் கோல்கம்பத்தை நோக்கி சென்றது. ஆனால் அதனை நெதர்லாந்து கோல்கீப்பர் ஸ்டெக்லன்பர்க் பாய்ந்து தடுத்து விட்டார்.

ஸ்பெயின் தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தது. முதல் 20 நிமிடங்கள் ஸ்பெயின் வீரர்கள் நெதர்லாந்து வீரர்களை விளையாடவே விடவில்லை. கிடைத்த இடைவெளியில் நெதர்லாந்தின் கோல்கம்பத்தை முற்றுகையிட்ட வண்ணம் இருந்தனர். ஒருவழியாக நெதர்லாந்தும் தனது பலத்தை காட்ட ஆரம்பித்தது. பம்மி பதுங்கியபடி இருந்த நெதர்லாந்து கோல் அடிக்கும் முனைப்புடன் விளையாட ஆட்டம் சூடு பிடித்தது.

இதனால் ஆட்டத்துக்கும் பஞ்சம் இல்லை. முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை.ஆனால் 14 ஆவது நிமிடத்தில் வான்பார்சி,16ஆவது நிமிடத்தில் கார்லஸ் புயால்,21ஆவது நிமிடத்தில் மார்க் வான் பொம்மல்,23ஆவது நிமிடத்தில் செர்ஜியோ ரமோஸ்,28ஆவது நிமிடத்தில் நைஜல் டி ஜோங் ஆகியோர் மஞ்சள் அட்டைகளை பெற்றனர்.

தொடர்ந்து பிற்பாதியிலும் மஞ்சள் அட்டை பெறும் படலம் தொடர்ந்தது. இந்த முறை நெதர்லாந்து அணியின் தலைவர் ஜியோவானி வான் புரோன்காஸ்ட் 53ஆவது நிமிடத்திலும் 55ஆவது நிமிடத்தில் ஹெட்டிங்காவும் முரட்டு ஆட்டத்திற்காக மஞ்சள் அட்டை பெற்றனர்.ஆனால் ஆட்டத்தில் சூடு குறையவில்லை. இரு அணி வீரர்ளும் கோல் அடிக்க தொடர்ந்து முயற்சித்து வந்தனர். 62ஆவதுநிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ராபனுக்கு கோல் போட நல்ல வாய்ப்பு கிடைத்தது. குயித்திடம் இருந்து வந்த பந்தை பெற்ற ராபன் ஸ்பெயினின் இரு தடுப்பாட்டக்காரர்களை கடந்து கோல் கம்பத்தை நோக்கி அடித்தார்.பந்தை பிடிக்க பாய்ந்த ஸ்பெயின் கோல்கீப்பர் கேசிலாசின் காலில் பட்டு பந்து வெளியேறி விட்டது.இதனால் ஸ்பெயின் மயிரிழையில் தப்பித்தது.

அடுத்த 7ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டேவிட்வில்லாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.ஜீசஸ் நவாஸ் கிராஸ் செய்த பந்து நெதர்லாந்து பெனால்டி பகுதிக்குள் அங்கும் இங்கும் சென்றது.எதிர்பாராமல் அது டேவிட் வில்லாவுக்கு கிடைக்க நிச்சயம் இது கோல்தான் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில் நெதர்லாந்து கோல்கீப்பர் மேலேயே டேவிட் வில்லா அடிக்க ஸ்பெயினுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு பறி போனது.

தொடர்ந்து ஸ்பெயினுக்கு பல வாய்ப்பு கிடைத்தன. செர்ஜியோ ரமோஸ் நல்ல பல வாய்ப்புகளை உருவாக்கினார். அவ்வப்போது நெதர்லாந்து வீரர்களின் பின்கள அரணை உடைக்கவும் அவர் தவறவில்லை. நெதர்லாந்து வீரர்களின் தடுப்பாட்டம் அபாரமாக இருந்ததால் ஸ்பெயின் வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சி பலிக்கவில்லை.

கோல் அடிக்கும் ஆர்வத்தில் ஜெர்மனிக்கு எதிரான கால்இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி செய்த தவறை ஸ்பெயின் வீரர்களும் இந்த ஆட்டத்தில் செய்தனர். இதனால் 82ஆவது நிமிடத்தில் ராபனுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து வீணானது. ஸ்பெயின் தடுப்பாட்டக்காரர்கள் அனைவரும் முன்களத்திற்கு சென்றிருந்த சமயத்தில் ராபனுக்கு ஒரு திடீர் பாஸ் கிடைத்தது.பந்தை கடத்தி வந்து கடைசியில் கோட்டை விட்டார் ராபன். மீண்டும் ஸ்பெயின் தப்பித்தது.நிர்ணயிக்கப்பட்ட 90 ஆவது நிமிட ஆட்டமும் கோல் எதுவும் விழாமல் சமநிலையில் முடிந்ததால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.

கூடுதல் நேரத்தில் 5ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெப்ரிகாஸ் தனக்கு கிடைத்த எளிதான வாய்ப்பை நெதர்லாந்து கோல்கீப்பர் ஸ்டெக்லைன்பர்க் மேல் அடித்து வீணடித்தார்.18ஆவது நிமிடத்தில் பெனால்டி பகுதி அருகே ஸ்பெயின் வீரர் இனியஸ்டாவை கீழே தள்ளி விட்ட ஹெட்டிங்கா இரண்டாவது மஞ்சள் அட்டையை பெற்றதால் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. இதனால் அவர் களத்தை விட்டு வெளியேறினார்.

இறுதி 10 நிமிடங்கள் நெதர்லாந்து 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. கூடுதல் நேரத்தில் 116ஆவது நிமிடத்தில் ஆன்ட்ரஸ் இனியஸ்டா அட்டகாசமாக ஒரு கோல் அடித்து ஸ்பெயினுக்கு முன்னிலை தேடி கொடுத்தார்.பெப்ரிகாஸ் கொடுத்த பாசை பயன்படுத்தி இந்த கோலை இனியஸ்டா அடித்தார். இந்த ஒரே ஒரு கோலால் ஸ்பெயின் 1-0 என்று வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை பெற்றது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment