Tuesday, August 17, 2010

நேற்றைய ஆட்டத்தில் இலங்கையை வென்றது இந்தியா


Virakesari.
தம்புள்ளையில் நடந்த நேற்றைய முத்தரப்புப் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இந்தியா 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. வருகிறது.

இப்போட்டித் தொடரில் இந்தியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய நாடுகள் பங்கேற்று வருகின்றன.

தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவையும், 2ஆவது ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கட் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும் வென்றது.

இந்த நிலையில் 3ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் நேற்று சந்தித்தன. இரு அணியிலும் தலா இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கணுக்கால் காயத்தில் இருந்து குணமாகி விட்ட இஷாந்த் ஷர்மா மீண்டும் அணிக்கு திரும்பினார்.

இதனால் அபிமன்யு மிதுன் நீக்கப்பட்டார். யுவராஜ்சிங் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு பதிலாக விராட் கோக்லி இடம்பெற்றார். இலங்கை அணியில் ஹெராத், மெண்டிஸ் நீக்கப்பட்டு சூரஜ் ரந்தீவ், பெர்னாண்டோ சேர்க்கப்பட்டனர்.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தொடக்கத்திலேயே நிலைகுலைந்தது. ஓட்ட எண்ணிகையை தொடங்கும் முன்பே விக்கெட்டுக்களை இழக்கத் தொடங்கியது.

பிரவீன்குமாரின் முதல் பந்தில் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் தரங்கா (0) 'கிளீன் போல்ட்' ஆனார். பிரவீன்குமார், நெஹ்ரா, இஷாந்த் ஷர்மா ஆகியோரின் மும்முனை தாக்குதலில் இலங்கையின் விக்கட்டுகள் சரிந்தன. அங்கு நிலவிய `ஸ்விங்' பந்து வீச்சுக்கு ஏற்ற சூழலை இந்திய பவுலர்கள் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டனர்.

ஒரு பக்கத்தில் விக்கெட் போனாலும், மறுபுறம் கொஞ்சம் தாக்குப்பிடித்து ஆடிய மற்றொரு துடுப்பாட்ட வீரர் தில்ஷான் 45 ஓட்டங்களில் (62 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழந்தார். மத்தியில் பிரக்யான் ஓஜா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் சுழலிலும் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறினர்.

இறுதிகட்டத்தில் சூரஜ் ரந்தீவ் (43 ஓட்டங்கள், 61 பந்து, 4 பவுண்டரி), குலசேகரா (22 ஓட்டங்கள், 30 பந்து, 3 பவுண்டரி) ஆகியோரின் ஆட்டம் இலங்கை அணிக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்தன.

முடிவில் இலங்கை அணி 46.1 ஓவர்களில் 170 ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இந்திய தரப்பில் பிரக்யான் ஓஜா 3 விக்கட்டுக்களும், பிரவீன்குமார், இஷாந்த் ஷர்மா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களும், நெஹ்ரா ஒரு விக்கட்டும் எடுத்தனர்.

அடுத்து 171 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேவாக்கும், தினேஷ் கார்த்திக்கும் முதல் விக்கட்டுக்கு 30 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் மெத்யூஸ் பந்து வீச்சில் பிரிந்தனர். தினேஷ் கார்த்திக் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

சர்ச்சை

அடுத்த 2 ஓவர்களில் விராட் கோக்லி, ரோகித் ஷர்மா இருவரும் 'டக்-அவுட்' ஆனதால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதில் ரோகித் ஷர்மாவின் 'ஆட்டமிழப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது. 'துடுப்பின் உள்பகுதியில் பட்டு அதன் பிறகு காலில் பட்ட பந்துக்கு எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டதால் அவர் மிகவும் அதிருப்தியுடன் வெளியேறினார்.

32 ஓட்டங்களுக்குள் 3 துடுப்பாட்ட வீரர்கள் வெளியேறிய நிலையில், 4ஆவது விக்கெட்டுக்கு ஷேவாக்குடன், சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஷேவாக் தனது வழக்கமான அதிரடியைக் கைவிட்டுவிட்டு, நிலைமைக்கு தக்கப்படி ஆடி அணிக்கு கைகொடுத்தார். அணியின் ஸ்கோர் 91 ரன்களை எட்டிய போது ரெய்னா 21 ஓட்டங்களில் (35 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

அடுத்து கேப்டன் டோனி இறங்கினார். ஷேவாக்கின் நேர்த்தியான ஆட்டம் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது. வெற்றி உறுதியானதால் ஷேவாக்கின் வேகமும் கூடியது. அணியின் வெற்றிக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட்ட போது, அவரது சதத்திற்கும் ஒரு ஓட்டம் தேவைப்பட்டது.

அந்த பந்தை அவர் 'சிக்சரு'க்கு விளாச, அது `நோ-பால்' என்று அறிவிக்கப்பட்டதால், அதன் மூலம் 'எக்ஸ்ட்ரா' வகையில் ஒரு ஓட்டம் கிடைத்ததால் இந்திய அணி இலக்கை எட்டியது. இதனால் ஷேவாக்கின் 'சிக்சர்' வீணானதுடன், அவரது சதம் வாய்ப்பும் நழுவிப்போனது.

34.3 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் சேர்த்து 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷேவாக் 99 ஓட்டங்களுடனும் (100 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), டோனி 23 ஓட்டங்களுடனும் (38 பந்து, 2 பவுண்டரி) களத்தில் இருந்தனர். 40 ஓவருக்குள் வெற்றி பெற்றதால் இந்திய அணி போனஸ் புள்ளியையும் (1 புள்ளி) சேர்த்து மொத்தம் 5 புள்ளிகள் பெற்றது.

எதிர்வரும் 19ஆந் திகதி நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ,


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment