Thursday, August 26, 2010

சற்று சிந்திப்போம் (சுவைக்க ஒரு சூடான பகுதி)


வாழ்கை என்ற பயணத்தில் ஒரு முக்கியமான திருப்பு முனைதாங்க மணவாழ்கை. இதை நாம் சரியான பாதையில் அமைத்துக் கொண்டால் நம் வாழ்கைப் பயணம் மிகவும் அமைதியாகவும் தடுமாற்றம் இல்லாமலும் அமையும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதாவது மனைவி/கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அப்படின்னு சொல்லுவாங்க. ஒரு மனிதனின் வாழ்கையின் சந்தோசத்தை தீர்மானிக்கின்ற சக்தி இந்தக் கல்யாணம். அப்படிப்பட்ட கல்யாணத்தில் இடம் பெரும் சமூகச் சீரழிவான சீதனம் பற்றிய பார்வைதான் எனது இவ்வெழுத்துக்களின் நோக்கம்.

வாங்க நுழையலாம்.

இந்த சீதனம் இன்று பல ஏழைகளின் கண்ணீருக்கும், பலரின் வாழ்கை பிரச்சினைக்கும், கணவன் மனைவியின் அமைதியின்மைக்கும் காரணங்களாய் திகழ்கிறது. இன்றய நம் சமூகத்தில் இச் சீதனம் பாரிய ஒரு சமூக நோயாகக் கருதப்பட்டு இதை தடுக்க பல வழிகளில் முயற்சி செய்தும் இதன் வளர்ச்சி மட்டும் மறையவில்லை என்பதுதான் உண்மை. இதற்கு காரணம் இதை எதிர்பவர்களும் கூட சில வேளை அதற்குள் உள் வாங்கப்படுவதுதான். அதாவது இச் சீதனம் இன்று பழ வழிகளில் மனிதனை சீர் கெடுத்துக் கொண்டிருக்கிறது அப்படின்னு தான் சொல்லனும். அந்த வழிமுறைகளை சற்று விரிவாக விளக்குவது என் கடமை கூட.

அவற்றை இங்கு 2 முறையாகப் பிரிக்கலாம்.
1. வெளிப்படையாக.
2. மறைமுகமாக.

1.வெளிப்படையாக
நேரடியாக பெண் வீட்டாரால் பணம் நகை வீடு வாகனம் போன்றவைகள் கொடுக்கப்படுவது.(மணமக்கள் அறிந்து)

இதிலும் இரண்டு வகை உண்டு
1. ஆண் வீட்டாரின் வற்புறுத்தலில் பெருவது
2. பெண் வீட்டாரால் தாமாக விரும்பிக் கொடுப்பது.

இதில் முதல் வகையில் நேரடியாகவே பிரச்சினை தோற்றமெடுக்கும். ஆண் வீட்டார் பெண் வீட்டாரிடம் கேட்கும் தருணமே பெண் வீட்டாருடைய மனதில் ஆண் வீட்டார் பற்றிய தப்பெண்ணம் உருவாக ஆரம்பிக்கிறது. பெண் வீட்டாரால் அது வெளியில் சந்தோசமாக கொடுக்கப்பட்டாலும் இவர்களின் உள் மனதில் இவை சம்மந்தமாக மறைமுக கருத்துக்கள் தோற்றமெடுக்கிறது என்பது தான் யதார்த்தம். எனவே ஆரம்பத்திலயே மனதில் தப்பெண்ணம் தோன்றும் போது அவை போகப் போக பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்து இரண்டு குடும்பங்களுக்கும் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

இரண்டாவது வகையில் பெண் வீட்டாரின் விருப்பத்தில் இது வழங்கப்படால் இங்கு எழும் பிரச்சினை மறைமுகமாக தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது பெண் வீட்டாருக்கு நாங்கள் எல்லாம் கொடுத்து இருக்கிறோம் என்ற ஒரு வித பெருமை தொற்றிக் கொள்ளும். இதனால் அவர்களின் செயல்கள் சற்று வித்தியாசமான நடத்தையை பிரதிபலிப்பதோடு மணமகனின் தன்மானத்துக்கும் மட்டுமல்லாமல் அவனின் குடும்பத்துக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல் ஆண் வீட்டாருக்கு அவர்களைப் பற்றிய சற்று தாழ்வுப் பிரச்சினை ஏற்பட காரணமாயிருக்கும். எனவே இதுவும் திருமணத்தை நிறுத்திவிடவோ அல்லது திருமணத்தின் பின் வாழமுடியாமல் தடுக்கவோ காரணமாயிருக்கும். இவற்றை தடுக்க அந்த ஆண் மகனால் மட்டுமே முடியும்.


2.மறைமுகமாக

மறைமுகமாக எனும் போது மணமக்கள் அறியாமல் இரு குடும்ப பெரியவர்கள் மட்டும் பேசி கொடுப்பது எடுப்பது. இது மிகப் பெரிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும். மேலே சொல்லப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் இதனுல் அடங்கினாலும் இந்த விடயங்கள் வெளியில் வரும் போது ஏற்படும் பாதிப்பு அந்தக் குடும்பங்களின் மீது சமூகம் தொடுக்கும் பார்வைகள் என்பன இன்னும் அதிகம் ஆதிக்கம் செலுத்தும். பெரியவர்கள் விட்ட தவறுக்காக இங்கு பாதிக்கப்படுவது இரண்டு அன்பான கணவன் மனைவியின் வாழ்கை என்பது இங்கு சுட்டிக்காட்டப் பட வேண்டும். எனவே இந்த விடயங்களில் அனைவரும் கவனமாய் இருக்கவேண்டும் என்பதுடன் கணவன் அல்லது மனைவி இச் சந்தர்பத்தில் சற்று ஆறுதலாய் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

எனவே இப்படியான பல வழிகள் இருந்தும் வெளிப்படை மறைமுகம் என்ற வரையறைக்குள் முடித்திருக்கிறேன் சுருக்கத்துக்காக. இங்கு ஒரு விடயத்தை அவதானித்திருப்பீர்கள். நாம் நம் இலேசுக்காக வெளிப்படை மறைமுகம் என்று பிரித்தாலும் எழும் பிரச்சினைகள் எல்லாம் ஒன்றுதான்.

அடுத்து நாம் நோக்க வேண்டியது இந்த சீதனம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பொருப்பு கூற வேண்டியது யார். என்னைப் பொருத்தவரை 80% ஆண்கள் (மன்னிச்சுடுங்கப்பா ஆண்களே). ஆமாங்க இதற்கு பொருப்பெடுக்க வேண்டியவர்கள் ஆண்கள் தான் குறிப்பாக அந்த மணமகன் தான்.(வெளிப்படையான சீதனத்தில் மட்டும்)



இந்த விடயத்தில் ஒரு மிகப் பெரும் தவறான கூற்று ஒன்று நிலவி வருகின்றது. அதை தகர்க்க வேண்டியது என் கடமை கூட. அதாவது சீதனம் கேட்கப்படுவது அந்த ஆண்மகனின் தாயின் மூலமாக என்று சில கருத்துக்களும் முன் வைக்கப்படுகிறது. வாங்கப்டும் மொத்த சீதனத்துக்கும் தன் தாய் மேல் பழி போடும் மகன்களை நினைத்து வெட்கப்படத்தான் முடிகிறது.

சரிங்க நம்ம அவங்க விவாதத்துக்கே வரலாம். உன் தாய்தான் சீதனம் கேட்கிறாங்க என்று வைத்துக் கொள்ளுவோம். நீ என்ன ஊமையா? எங்கே போனது உன் வாய்ப் பேச்சுக்கள். தன் தாயிடம் அழகான முறையில் சொல்லி இது தவறு என்று புரியவைக்க கூட உன்னால் முடியவில்லை என்றால் நீ ஆண் மகன் என்று மார்தட்டிக் கொள்ளும் உரிமை உனக்கில்லை. உன் உள் மனதில் ஆசையை வைத்துக் கொண்டு தன் தாயை தூண்டிவிட்டு பிறகு அவள் மேலயே பழிபோடும் நீயெல்லாம் ஒரு மனிதனா? என்று கேட்கத் தோன்றுகிறது அவர்களை நோக்கி. இப்ப யோசிங்க யார் பொருப்பு? என்று. இந்த விடயங்களை சம்மந்தப்பட்ட அந்த மணமகன் நினைத்தால் தடுக்கலாம். ஆனால் இன்று அதுசரி இவர்கள் எல்லாம் பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்ற ஜாதி போல....

என்னிடம் சீதனத்துக்கு வரைவிலக்கனம் கேட்டால் 'குடும்பம் எனும் நாடு செல்ல பெண்னுக்கு ஆண் விதிக்கும் ஆகாத வரி' அப்படின்னு சொல்லலாம். இதற்கு முழுப் பொருப்பெடுக்க வேண்டியவர்கள் ஆண்களே.

உலகில் நாம் ஒரு விடயத்தை பற்றி யோசிப்போம். அந்த விடயத்தில் ஏதாவது நன்மையும் இருக்கலாம் தீமையும் இருக்கலாம். ஆனால் சில விடயங்களில் மட்டும் தீமை மட்டுமே இருக்கும் அப்படிப்பட்ட ஒரு விடயம் தான் இந்த சீதனம். சற்று யோசிப்போம் இந்த சீதனத்தால் ஏற்பட்ட நன்மை எது? கிடையாது. அதற்கு மாற்றமாக வெறும் பிரச்சினைகள் மட்டுமே உருவாக்கப்படுகிறது. எனவே இப்படிப்பட்ட ஒரு சமூகச் சீரழிவைத்தான் நாம் இன்னும் அனைத்துக்கொண்டிருக்கிறோம் என்பது தான் வெட்கப்பட வேண்டிய விடயம். நாம் எல்லாம் 6 அறிவுள்ள மனிதர்கள் என்று பெருமைப் படுகிறோம் ஆனால் நடப்பது 5 அறிவுள்ள மிருகங்களை விட கேவலமாக... சிந்தியுங்கள் (கொஞ்சம் over ரா போயிட்டனோ?).

இளைஞர்களே, ஆண்களே சற்று சிந்தியுங்கள் நீங்கள் நினைத்தால் மாத்திரம் தான் தடுக்க முடியும். நான் சீதனம் வாங்குவதில்லை கொடுப்பதில்லை என்ற முடிவுடன் உங்கள் சொந்தங்களில் நடைபெரும் திருமணத்திலும் அவற்றை தடுக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆண்மைக்கு அழகு சேருங்கள். நடந்ததை விட்டுவிடுங்கள். இனி நடப்பதை மட்டும் பாருங்கள். நிச்சயமாக நீங்கள் துணிந்தால் இவற்றை தடுக்க முடியும். துணிவீர்கள் என்ற நம்பிக்கையில் முடிக்கிறேன்.

இது என் தனிப்பட்ட கருத்துக்கள் தான், வாழத்தி வரவேற்பதா? இல்லை தர்கித்து தகர்பதா? இரண்டுக்கும் நான் தயார் நீங்கள்?????


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment