Thursday, August 19, 2010

எச்-1பி' -'எல்-1' விசா கட்டணத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்


Virakesari.
எச்-1பி' மற்றும் 'எல்-1' விசா கட்டணத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனால், ஏராளமான இந்திய முன்னணி கம்பெனிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

அமெரிக்காவில் வேலைக்கு செல்வோருக்காக ஆண்டுதோறும், 'எச்-1பி மற்றும் எல்-1' விசாக்கள் வழங்கப்படுகின்றன. இந்திய கம்பெனிகள், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான், ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற 50 ஆயிரம் விசாக்களை விண்ணப்பித்து வாங்குகின்றன.

ஏற்கனவே உள்ள இந்த வகை விசாக்களை புதுப்பிப்பதோடு, புதிதாகவும் வாங்குகின்றன.

இந்நிலையில், இந்த வகை விசா கட்டணங்களை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாவரை உயர்த்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு, ஐந்து ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும். இதன்மூலம், 2,750 கோடி ரூபா திரட்டவும் தீர்மானித்துள்ளது.

அமெரிக்கா - மெக்சிகோ எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா, 3,250 கோடி ரூபா ஒதுக்கியுள்ளது. அதில், பெரும்பகுதியை விசா கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் பெறவும் முடிவெடுத்துள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விசா கட்டண உயர்வு பொருந்தும்.

அமெரிக்கா குறிப்பிட்ட இந்திய கம்பெனிகளில் டாடா, விப்ரோ, இன்போசிஸ் மற்றும் சத்யம் அடங்கும். தங்களது பணியாளர்கள், அமெரிக்காவில் தொழில்நுட்ப பணியாற்ற அதிக அளவில் எச்-1 பி மற்றும் எல்.1 விசா வாங்குகின்றனர் என்று குறிப்பிட்டிருக்கிறது.

'நாஸ்காம்' அமைப்பு தகவல்படி ஆண்டு தோறும் இக்கம்பெனிகள் மூலம் 50 ஆயிரம் பேர் விசா கேட்டு விண்ணப்பிப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த விசா கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்திய அரசு, இந்த விவகாரத்தை உலக வர்த்தக அமைப்பின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், விசா கட்டண உயர்வு இந்திய கம்பெனிகளையும், இந்தியர்களையும் பெரிதும் பாதிக்கும் என்பதை அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. அதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

எனினும், இந்தக் கட்டண உயர்வால், இந்தியாவுடனான நீண்ட கால பொருளாதார பங்களிப்பு மற்றும் உறவு பாதிக்கப்படாது. அதற்கு மாறாக பலமடையும் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் மார்க் டோனர் கூறியுள்ளார்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment