Tuesday, August 03, 2010

வெற்றியை தீர்மானிக்கும் இறுதி டெஸ்ட் இன்று ஆரம்பம்


Virakesari.


இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான வெற்றியை தீர்மானிக்கும் 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று பி சரா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் காலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொழும்பில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

டெஸ்ட் தொடரை சமன் செய்ய இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்திய அணியின் துடுப்பாட்டம் வலுவாக உள்ளது. ஆனால் பந்து வீச்சு தான் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது. சகீர்கான், ஸ்ரீசாந்த் இல்லாததால் வேகப்பந்து இந்தியாவின் நிலை பரிதாபமாக உள்ளது.

மேலும் முன்னணி சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங்கால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. 3 வேகப்பந்து வீரர் ஒரு சுழற்பந்து வீரர் அல்லது 2 வேகப்பந்து வீரர்- 2 சுழற்பந்து வீரர் என்ற நிலையில் களம் இறங்கும். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 ஆவது டெஸ்டில் விளையாடாத கம்பீர் நாளைய டெஸ்டில் இடம் பெறுவார். தமிழக வீரர் விஜய் கழற்றி விடப்படுவார்.

யுவராஜ்சிங் காய்ச்சல் காரணமாக 2 ஆவது டெஸ்டில் விளையாடவில்லை. அவர் தற்போது உடல் தகுதியுடன் இருந்தாலும் நாளைய டெஸ்டில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.

ஏனென்றால் அவருக்கு பதிலாக விளையாடிய சுரேஷ் ரெய்னா அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்து முத்திரை பதித்தார். இதனால் யுவராஜ் சிங்கைவிட ரெய்னாவே தேர்வு பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னணி துடுப்பாட்ட வீரர்களான ராகுல் டிராவிட், லட்சுமண் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நாளை டெஸ்டில் அவர்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். டெண்டுல்கரும், ஷேவாக்கும் தொடர்ந்து நல்ல நிலையில் உள்ளனர்.

இலங்கை அணியை பொறுத்தவரை தொடரை சமன் செய்தாலே தொடரை வென்றுவிடும். துடுப்பாட்டத்தில் பரணவிதான, அணி தலைவர் சங்ககர, ஜயவர்த்தன ஆகியோர் சிறப்பாக உள்ளனர்.

காயம் காரணமாக 2 ஆவது டெஸ்டில் விளையாடாத அணியின் முன்னணி வேகப்பந்து வீரர் மலிங்க 3ஆவது டெஸ்டில் ஆடுகிறார். அவரது வருகை அணிக்கு கூடுதல் பலம் என்பதில் சந்தேகம் இல்லை. இரு அணிகளும் இன்று மோதுவது 35 ஆவது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 34 டெஸ்டில் இந்தியா 13 போட்டியிலும், இலங்கை 6 போட்டியிலும் வெற்றி பெற்றன. 15 டெஸ்ட் சமநிலையில் முடிவடைந்தது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment