Monday, March 18, 2013

நான் கவிஞனாய்..



நான் கவிஞனாய்..

நிஜங்களை சொல்லி விட ஆசைதான்
நிதர்சனம் தொகுத்துவிட ஆசைதான்
மனிதனை நேசிக்க ஆசைதான் - அவன்
மனங்களை வாசிக்க ஆசைதான்.

நான் கவிஞனாய்..

கல்லறைக்குள் வாழ்ந்திட ஆசைதான்
கனாவினுள் கண்மூடிட ஆசைதான்
மௌனத்தின் மொழி எழுத ஆசைதான்- முதல்
மோகத்தில் ஊமையாக ஆசைதான்.

நான் கவிஞனாய்..

ஊனங்களை உசுப்பிவிட ஆசைதான்
ஊழல்களை ஒழித்துவிட ஆசைதான்
காதலுக்கு கண் செதுக்க ஆசைதான் - இந்த
காலத்துக்கும் கற்றுக் கொடுக்க ஆசைதான்.

நான் கவிஞனாய்..

எண்ணங்களை எடுத்தியம்ப ஆசைதான்
எளிமையில் ஏழை போல் என் கவியிருக்க ஆசைதான்
குழந்தைக் கோபம் கொள்ள ஆசைதான் -சிறு
குடத்தினுள் குள நீச்சல் போட ஆசைதான்.

நான் கவிஞனாய்..

தாய் போல் அரவணைக்க ஆசைதான்
தாய்மை சுகம் அனுபவிக்க ஆசைதான்
மொழிக்கும் கவிக்கும் உயிர் கொடுக்க ஆசைதான்
மொத்த பூமிக்கும் உதவிட ஆசைதான்.

நான் கவிஞனாய்..

மெழுகு போல் உருகிவிட ஆசைதான்
மக்கள் இருள் நீக்கிவிட ஆசைதான்
உரிமைக்காய் உயிர் துறக்க ஆசைதான் - பின்பு
என் கவியில் நான் சுவாசிக்க ஆசைதான்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

1 comment: