Tuesday, December 25, 2012

கொலைகார நண்பன்..


என் கண்கள் பார்க்க
வெறுத்தது
இவன் முகமே..

ஒரு கொடூரச் சம்பவம்
சுமந்து பதை பதைக்கிறது
என் மனமே..

சிந்தனைச் செல்களுக்குள்
ஒரு சோகக் கீற்று
துளிர் விடுகிறது..

நானும்,அவனும்
நல்ல நண்பர்கள் தான்.
அந்த அனர்த்தத்துக்கு முன்னர்..

அப்பா.. அறிமுகப்படுத்தியவன்
இவனோடு விளையாட
விலைகள் இல்லை.

எனக்கு காதலைக் காட்டியவன்.
என் காதலியாய், அவளை
அவனுக்குத்தான்
முதலில் காட்டினேன்.

இன்று..
பல கோடி உயிர்களைப் பறித்தவன்
இவனைத் தண்டிக்க உலகச் சட்டத்துக்கு
தெரியவில்லை..

அன்றில் இருந்து
இவனோடு உறவாடுவதில்லை
நான்...

அதன் பின்பு
இன்று தான் என் முதல் தரிசனம்.
இதுவும் கடைசியாகத்தான் இருக்கும்.

அவன் நடத்திய
மனித வேட்டையின்
வினாடிகளே என் ஞாபக அணுக்களில்..

இதயம் வெடித்து இரத்தமாய்
கண்ணீரைக் கக்கியது கண்கள்.

திரும்பும் திசை எங்கும்
மனிதப் பிணங்களே..
என் விழிகளில் தெரிகின்றன.

நாலு திசையிலும்
உணர்விழந்த கதறல்களே..
காதுகளில் ஒலிக்கின்றன.

நினைவுகள் பின்நோக்கி நகர
நான் மெல்ல மெல்ல
அவனை முன்நோக்கி நடந்தேன்.


என் மடியில்
உயிர் துறந்த ஒரு சிறுமி,
நான் பிறக்கி எடுத்த பிணங்கள்,

பிரியும் உயிரை அருகில் இருந்து
அனுபவித்த நிமிடங்கள்,
உடையின்றி, சொத்தின்றி
நிர்வாணமாக்கப் பட்ட மனிதர்கள்,

பயத்துடன், பரிதவிப்புடன்,
பதட்டத்துடன் உறவுகளைத் தேடிய விழிகள்..

இவைகளே..
இவனைப் பார்க்கும் போது
என் கொடூர நினைவுக்குள்
இன்றும் ஒலிக்கும் சோக கீதங்கள்.

பேச மறுத்தது வாய்.
உள்ளம் பேசியது..

"ஏய் கொலைகாரக் கடலே!
நாங்கள் விட்ட கண்ணீர் சேர்த்து
ஒரு சமுத்திரம் செய்து
உன்னை அழித்தொளிக்கிறேன் பார்"
என்று சவால் விட்டது
என் சிறிய மூளை.

அமைதியாய் வந்து
என் பாதம் தொட்டு
மன்னிப்புக் கேட்டுச் சென்றது..
அந்த அலை..
கொலைகார நண்பனின் தூதாய்.

வந்த அலையிடம்
வாய் விட்டுச் சொன்னேன்.
"மறக்கவே முடியாத போது
மன்னிப்பு எங்கிருந்து சாத்தியம்??"


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

1 comment: