இது ஒரு ஊஞ்சல் பயணத்தின் ஒப்பிடம்,
உணர்வைக் கிறுக்கும்
ஒரு கைக் குழந்தையின் ஓவியம்.
பிரிவை விடப் பயங்கரம் பூமியில் இல்லை,
அதை ருசிப்பவன் மறுமுறை மரணிப்பதில்லை.
நினைவோடு வாழ்ந்தால்
எங்கிருந்தும் வாழலாம் என்ற
என் கருத்துக்கள் எல்லாம்
கண்முன்னே கருகிப் போகிறது..
கண்களிடம் இருந்து, கனவுகளை;
காலம் கழட்டி எறிந்த வலி
இன்னும் தீரவில்லை.
வலியினால்
விழி நீர் விழுவதை
தடுக்க முடியவில்லை.
"விமான நிலையம்"
என் போன்றோருக்கு
கண்ணீரைக் காதலிக்கும்
ஒரு கல்லறைக் கட்டடம்.
பிரிவுகளுக்கு
பின்னணி இசை வடித்துக் கொண்டிருக்கிறது
ஏறி இறங்கும் விமானங்கள்.
போலிப் புன்னகையின் பெறுமதியை
புரியவைக்கிறது காலம்.
நடிப்பு என்ற மனித குணம்
நல்லது என்பதை கற்றுக் கொடுக்கிறது வாழ்க்கை.
சுமக்க முடியாத உறவுகளின் பிரிவை,
சுமந்து கொண்டு பறப்பது காலக் கட்டாயமாகிப் போனது..
சூரியன் மேல் வாழும்
பனித்துளியாய் கரைகிறது வினாடிகள்..
கட்டி அனைத்து விடை கொடுக்கிறது
அத்துணை உறவுகளும்
அவள் ஆன்மாவைத் தவிர..
தாய் மண்ணோடும்
தன் உறவுகளோடும்
ஏதோ பேச நினைக்கிறேன்
மொழிகள் மறந்து மௌனித்து விடுகிறேன்.
மறுபடி முயல்கிறேன்
மீண்டும் தோற்கிறேன்.
வறண்ட உதடுகள் நனைத்து,
ஒரு முறை கனைத்து சொல்கிறேன்
போய் வாறன்
கைகளை அசைத்து விட்டு
திரும்பி நடக்கும் என் உறவுகளுடன்
என் நிஜம் நடப்பதைப் பார்கிறேன்.
வெறும் நிழலாய் நான் நடந்து
ஒரு முறை திரும்பிப் பார்கிறேன்,
மௌனத்துக்குள் அழும் என் குரல்
இவர்கள் செவி சேராது என்றெண்ணி
என் திசையில் நடக்கிறேன்..
நாளை நிச்சயமில்லா உலகில்
நடப்பதை இறைவன் நாட்டத்தில் விட்டு..
வாழ்த்துக்கள் !
ReplyDelete