Saturday, July 06, 2013

அழகிய தருணங்கள்

அம்மாவின் மடியோடு
உறங்கிய இரவுகள்,
அப்பா அரவணைத்து
தட்டிக் கொடுத்த நேரங்கள்..

இருட்டு வானில்
ஜன்னல் நட்சத்திரம்
எண்ணி மகிழ்ந்த
இரவுகள்..

எதற்கும் துணியும்
இயல்பான வீரனாய்
சுற்றித் திரிந்த
பள்ளிப் பருவங்கள்..

நட்புக்குள் வாழ்வை
சுருக்கி நகைப்புடன்
நடந்த தருணங்கள்..

கரையை சேர போராடும்
அலையில் காதலோடு
கால் நனைத்த நாட்கள்..

மனதை திருடிய
மங்கையை மண மேடையில்
கைப் பிடித்த நிமிடங்கள்..

முதல் மோகத் தீயில்
வெட்கப் போர்வை எரிய
வியர்வையோடு கழிந்த
பொழுதுகள்..

என் உயிர் சுமந்து
புதிதாய் பூத்த பிஞ்சை
அள்ளிக் கொஞ்சி
விளையாடிய வினாடிகள்..

வறட்சியிலும் பசுமையிலும்
நம்பிக்கையோடு வாழ்ந்த நாட்கள்..
சுழலும் வாழ்வினில்
சுகமான அழகிய தருணங்கள்.

ஓடி ஒடுங்கிய -ஒரு
உடலோடு உறவாடும் ஆத்மாவின்
நினைவலைகளின் வாசிப்பு
இவ் வரிகளாய்..


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment