Wednesday, July 28, 2010

மணவறைத் தூக்குக் கயிறு.....



முதல் இரவு முண்டியடித்து அறைக்குள்
முற்றுகையிட்டேன் முழுமனதுடன்
என்னை அந்நியனுக்கு ஒப்படைக்க
இறக்கப் போகும் என் வாழ்வு பற்றி அறியாமல்

கையில் ஒரு செம்பு, புதுப் புடவை
கொண்டையில் மல்லிகை, என் வாயில் புண்னகை
ஆயிரம் கனவுகள் என் மனதுக்குள்
ஏதோ செய்தது ஹோமோன்கள் என் உடலினுல்

அடைக்கப்பட்டது அறைக் கதவு
அப்போது தெரியவில்லை அது என்
வாழ்வின் வசந்தத்திற்கும் சேர்த்து
அடைக்கப்பட்டது என்று

முதல் இரவு தொடங்கும் முன்னே
என் வாழ்கையும் முற்றுப் பெற்றது
எழுதிய கடிதம் மெத்தை மேல் இருக்க
எழுதியவனோ எங்கே என்று தேடியவர்களுக்கு
பதில் இதுவரை கிடைக்கவில்லை

"உன்னோடு வாழ எனக்குப் பிடிக்கவில்லை
மன்னித்து விடு" என்ற வார்த்தை
வடிவமைக்கப்பட்டிருந்தது காகிதத்தில்
மன்னித்தேன் மனித சாதி என்பதால் என் விதியை எண்ணி

விடியப்போகும் ஒரு இரவில்
என் வாழ்வின் சூரியன் மறைந்தது
கண்ணீர் என்ற கடலில்

கனவுகள் சுமந்து சென்று
கண்ணீரை பரிசாய்ப் பெற்று
சிதறிய கண்ணாடிகள் போல்
சின்னாபின்னப்பட்டேன்

கொட்டிய மேல தாளங்கள் பறையானது
ஊதிய நாதஸ்வரம் சங்கானது
மணஊர்வலம் இருதி ஊர்வலமானது
முடங்கியது என் உடல் ஒரு ஓரத்தில் உயிரற்ற நிலையில்

மிகப் பெரிய பாரம் என்னை ஆட் கொண்டது
அறியாமல் தொட்டது என் கைகள் மஞ்சக் கயிற்றை
இல்லை என் கழுத்தில் மாட்டப்பட்ட
தூக்குக் கயிற்றை கண்ணீர் கசிய...

ஆனந்தமாய் ஆடிப்பாடியவள்
குறும்புகளால் குத்தாட்டம் போட்டவள்
சிறுமியாய் சிறகடித்தவள்
புண்னகையாலே புகழ் சேர்த்தவள்

அடங்கிவிட்டேன் அவமானத்தால்
குனிந்து கொண்டேன் குருடாகி
சிக்கிக் கொண்டேன் விதி வலையில்
புதைகுழிக்குள் புதைந்து கொண்டேன்

ஆறுதலாய் 4 வரி சொன்ன சொந்தங்கள்
6 நாட்களின் பின் காணாமல் போய் விட்டனர்.
கோபங் கொண்டு கொதித்த நண்பர்கள்
10 நாட்களில் அமைதியடைந்தனர்
பெத்தவங்களும் ஏங்கி ஏங்கி 30 நாட்களில்
முடியாமல் மூர்சையாயினர்.
6 திங்கள் ஆகியும் சமூகம் மட்டும் இன்றும்
சாக்கடைய் சாதித்துக் கொண்டிருக்கிறது.

சமூகமும் சம்பிரதாயமும் இன்றும்
வதைக்கிறது என்னை
மனவறை மாட்டிய தூக்குக் கயிற்றை
கழட்ட விடாமல்..

வதைக்கப்படுவதுதான் என் விதி என்றால்
வாழவைக்க யாரால் முடியும்
பழகிப்போனது என் பாழாப்போன இந்த வாழ்கை
நண்பன் மரணத்தை எதிர்பார்க்கும் எனக்கு.

ஒரு நாள் வதைத்த உணர்வற்றவனை விட
ஒவ்வொரு நாளும் வதைக்கும் இந்த மிருகச் சமூகத்தை எண்ணி
முடிக்கிறேன் இக் கவியோடு என் வாழ்வையும்

வாழத்தகுதியற்றவளாய்
அல்லது வாழ முடியாத கோளையாய்......


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment