Friday, July 23, 2010

டெஸ்ட் போட்டியிலிருந்து முரளிதரன் ஓய்வு




டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்த பந்து வீச்சாளரான இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் நேற்றுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

தனது இறுதிப் போட்டி யுடன் 800 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி சாதனை வீரராக முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நேற்று காலியில் முடிவுற்ற இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்று கடந்த 7 ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்திருந்தார். அது வரை அவர் 792 டெஸ்ட் விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.

800 டெஸ்ட் விக்கெட்களுடன் ஓய்வு பெற விரும்புவதாக அவர் அச்சமயம் குறிப்பிட்டிருந்தார். அது முதல் முரளிதரன் தனது 800 ஆவது டெஸ்ட் விக்கெட்டை இப்போட்டியில் கைப்பற்றுவாரா என்ற கேள்வி இலங்கை மற்றும் உலகளாவிய கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் தொக்கி நின்ற கேள்வியாக இருந்தது.

நேற்றுடன் முடிவுற்ற இந்தியாவுக் கெதிரான டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 520 ஓட்டங்களை பெற்றதும், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையினால் தடைப்பட்டதும், இந்திய அணியை 4 நாட்களில் இரண்டு தடவை அவுட்டாக்க முடியுமா என்ற கேள்வியும் முரளியின் ஆதரவாளர்களையும் உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களையும் கேள்விக்குள்ளாக்கியது.

எனினும் 4 நாட்களில் இந்தியாவை தோற்கடித்ததுடன், தான் குறிப்பிட்ட இலக்கான 800 விக்கெட்களையும் கைப்பற்றி மிகப் பெரிய சாதனை வீரராக டெஸ்ட் கிரிக்கெட் உலகில் இருந்து முரளிதரன் நேற்றுடன் ஓய்வுபெறுகிறார்.

எனினும் ஒரு நாள் மற்றும் டுவெண்டி டுவெண்டி 20 ஓவர் போட்டிகளில் முரளி தொடர்ந்தும் விளையாடுவார். 2011 இல் நடைபெறும் உலகக் கிண்ண போட்டியுடனேயே தான் கிரிக்கெட் உலகில் இருந்து முழுமையாக ஓய்வுபெறுவதாக முரளிதரன் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

800 விக்கெட்கள் என்ற இந்த சாதனையை பெறுவதற்காக முரளிதரன் இந்திய வீரர் பி.பி. ஓஜாவை வீழ்த்தி வெளியேற்றினார். இது முரளி விளையாடிய 133 வது டெஸ்ட் போட்டியாகும். இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் எட்டு விக்கெட்களை அவர் கைப்பற்றினார். அவரது சாதனையைப் பற்றி ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் இந்த டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுப்பது அனைவரது மனதிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காலியில் நடைபெற்ற இலங்கை – இந்தியா வீரர்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற டெஸ்ட் போட்டியின் 5வது நாளான நேற்று முரளிதரன் பெற்றுள்ள சாதனை இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும்.

அதேவேளை குறித்த டெஸ்ட் போட்டியுடன் விடைபெறும் முரளி தரனுக்கு இப்போட்டியில் வெற்றிபெற்று அந்த வெற்றியை பரிசாக வழங்குவோம் என இலங்கை அணித் தலைவர் சங்கக்கார தெரிவித்திருந்தார். அதன் பிரகாரம் தற்போது நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றிபெற்றுள்ளது.

கடந்த 18ம் திகதி தொடங்கிய போட்டியின் 2ம் நாள் மழை காரண மாக விளையாட்டு நடைபெறாத போதிலும், 3ம் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 520-8 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

அதையடுத்து இந்திய அணி துடுப்பெடுத்தாடி 276 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்த நிலையில், திரும்பவும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை தொடரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நினைவுப் பரிசில் ஒன்றை வழங்கி முரளியின் மகத்தான சாதனையை பாராட்டினார். போட்டி முடிந்த பின்னர் நேற்று மாலை அவருக்கு மாபெரும் விழா காலியில் எடுக்கப்பட்டது.

முரளிதரன் இது வரை 133 டெஸ்ட் போட்டிகளை ஆடி உள்ளார். அதே போல் 334 ஒருநாள் போட்டிகளில் ஆடி 512 விக்கெட்டு க்களையும் வீழ்த்தி உள்ளார்.

முரளிதரன் நேற்று மைதானத்தில் ஆடச் சென்றபோது அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

133 டெஸ்டில் விளையாடியுள்ள முரளி 51 ஓட்டங்கள் கொடுத்து 9 விக்கெட்களை கைப்பற்றியமை அவரது சிறந்த பந்து வீச்சு பெறுதி ஆகும். டெஸ்ட்டில் 22 முறை 10 விக்கெட்களுக்கு மேலும், 67 முறை 5 விக்கெட்களுக்கு மேலும் எடுத்துள்ளார்.

முரளிதரனுக்கு அடுத்தபடியாக வோர்ன் (அவுஸ்திரேலியா), 145 டெஸ்டில் 708 விக்கெட்களை கைப் பற்றி 2 வது இடத்தில் உள்ளார். கும்ளே (இந்தியா) 619 விக்கட் களும், மெக்ராத் (அவுஸ்திரேலியா) 563 விக்கெட்களும், வோல்ஸ் (மே. தீவு) 434 விக்கெட்டும் எடுத்துள்ள னர். 1992 ஆகஸ்ட் 28 ஆம் திகதி தனது 20 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி கொழும்பு கெத்தாராம விளை யாட்டரங்கில் நடைபெற்றது. முதரளிதரனின் அறிமுக டெஸ்ட் போட்டி இதுவாகும்.

அப்போட்டியில் “கிரெய்க் மெக்டர்மட்” இன் விக்கட்டே முரளிதரன் கைப்பற்றிய முதலாவது டெஸ்ட் விக்கெட் ஆகும். அப் போட்டியில் முரளி 141 ஓட்டங் களைக் கொடுத்து 3 விக்கெட்டு க்களை கைப்பற்றினார்.

அப்போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டொம் மூடியின் விக்கெட்டை முரளிதரன் கைப்பற்றினார். மூடியை ஆட்டமிழக்கச் செய்ய முரளி வீசிய பந்து ஓப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து சுமார் 2 அடி தூரம் சுழன்று லெக் ஸ்டம்பை வீழ்த்தியது. அந்த பந்தின் மூலம் கிரிக்கெட் உலகுக்கு திறமையான ஒப் ஸ்பின் பந்து வீச்சாளரின் வருகையை முரளி உணர்த்தினார். பின்னாளில் டொம் மூடி இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

அன்று முதல் முரளிதரன் பந்து வீச்சு திறமை ஒவ்வொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் பரிணமித்தது.

1993 ஆகஸ்ட்டில் மொரட்டுவையில் தென்ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முரளிதரன் 104 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை முரளி கைப்பற்றியமை அது முதலாவது தடவை யாகும். அந்த டெஸ்ட் போட்டியில் முரளி கைப்பற்றிய 5 விக்கெட்டுக்கள் கெப்லர் வெஸல்ஸ், ஹன்ஸி குரோஞ்ஞே, ஜொன்டிரோட்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளும் உள்ளடங்கியிருந்தது.

முரளிதரன் அவுஸ்திரேலிய அணியின் கிரேக் மெக்மெட்டை எல்பி. டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்கச் செய்ததால் தனது கன்னி விக் கெட்டைக் கைப்பற்றினார்.

50 வது விக்கெட்டுக்காக சித்து வையும், 100 வது விக்கெட்டுக்காக ஸ்டீபன் பிளமிங்கையும், 150 வது விக்கெட்டுக்காக கை விட்டலையும் 200 வது விக்கெட்டாக பென் ஹொலி ஹொக்கையும், 250 விக் கெட்டுக்காக நவிட் அஷ்ரப்பையும் 300 வது விக்கெட்டுக்காக ஷோன் பொலக்கையும் 350 விக்கெட்டாக முகம்மட் சரீப்பையும், 400 வது விக் கெட்டாக ஹென்ரி ஒலங்காவையும் 450 விக்கெட்டாக டரல் டபியையும் 500 வது விக்கெட்டாக மிச்சல் கஷ்பரொவிச்சையும் 550 விக்கெட் டாக காலிட் மசுட்டையும் 600 வது விக்கெட்டாக காலிட் மசுட்டையும் 650 விக்கெட்டாக மக்காயா நிட்டி னியையும் 700 வது விக்கெட்டாக செய்யட் ரஷலையும், முரளிதரனின் 709 வது விக்கெட்டாக போல் கொலிங்வூட்டை வீழ்த்தியதன் மூலம் ஷேன் வோனின் 708 விக்கெட் சாதனையை முறியடித்தார்.

750 விக்கெட்டாக கங்குலி யையும் 800 விக்கெட்டாக பிராக் கன் ஒஜா வையும் வீழ்த்தியே இச் சாதனைக்கு சொந்தக்காரராக மாறினார்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment