
பனி விழும் இரவு,
மேகமெனும் ஆடை உடுத்திருந்தால் நிலவு,
நீண்டதொரு பயணம்.
மனதில் அவள் நினைவுகளுடன்....
பேரூந்தின் ஜன்னல் திறந்தேன்.
முகத்தை வருடியது சில்லென்ற பனிக் காற்று.
கண்களை மூடிக் கொண்டேன்,
கனவில் அவளோடு கைகோர்த்தவனாக....
பேரூந்து முன்நோக்கி நகர,
கனவோடு நிஜம் சற்றுக் கலக்க,
நகர்ந்தது என் நினைவுகள்,
வாழ்வின் மூன்றாண்டு பின்நோக்கி.
ஒரு இதமான மாலை நேரம்,
சூரியன் மறைந்து விட்ட சோகத்தில் அழத் தொடங்கியிருந்தது வானம்,
கடைத்தெருவில் ஒதுங்கிய கூட்டத்தோடு...
நானும் இணைந்தேன்.
"கொஞ்சம் வழிவிடுங்க" என்றது
ஒரு கெஞ்சும் இசைக் குரல்...
இல்லை இதமான புல்லாங்குழல்.
பெய்யும் மழையுடன் பூமிக்கு
வந்துவிட்டாளா நிலவு???????
என்று தோன்றியது,
அவள் முகம் பார்க்க.
அழகே அதிசயப்படும் அழகு அவள்.
ஆயிரம் வருடமாவது சென்றிருக்கும்,
பிரம்மனுக்கு இவளை சீராக செதுக்க.
என் அதிர்சியை சற்று அசைத்தது,
மின்னலுடன் ஒரு இடி....
இல்லையென்றான் இன்றும் அவ் விடத்தில்
நான் சிலைதான்.
அன்றே முடிவெடுத்து விட்டேன்.
இவளைப் பிடிக்கவே என் கரம்,
இவள்தான் எனக்கு கிடைத்த வரம்.
அடுத்த நொடியிலயே சொன்னேன் என் காதலை.
6 திங்கள் கழித்து அனுமதி கொடுத்தால்,
அவள் கரம் பிடிக்க...
சில காலம் போயிற்று,
என் நிலவின் முகம் பார்த்து.
வாழ்கை போராட்டத்தில் நாடு கடந்து
உழைக்க வேண்டும்,
அது என் விதி.
இரு வருடம் கடந்து,
இன்று திரும்புகிறேன்.
பூமிக்கு வந்த நிலவை பார்க்க.
"ரீங்" "ரீங்" என் கனவை கலைத்தது,
என் தொ(ல்)லைபேசி.
"ஹலோ" ஓ..ஓ..ஓ...ஓ.... அது.. அது...
மீண்டும் அந்த புல்லாங்குழல்.
வாய் அவள் நாமம் உச்சரிக்க,
காதுக்குள் அவள் குரல்,
கண்ணுக்குள் அவள் முகம்,
மனதுக்குள் ஒரு வசந்தம்,
தொடர்கிறது என் நீண்ட பயணம்.........
No comments:
Post a Comment