Thursday, February 24, 2011

"படிப்பினை கொண்டு....."



மனித மாமிசங்கள் விலையாய்க் கொடுத்து,
பதவி வாங்கும் காலம் இது!
இருளுக்குள் இருக்கும் உலகின்,
இறுதி நேரம் இது!

அடக்குமுறை, ஜனநாயகம் அனைத்திலும்
நீதி பறிபோன காலம் இது.
நீதி கேட்பவருக்கெல்லாம்,
நிதி பதில் சொல்லும் நேரம் இது.

வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன,
வான் பொழியும் அடை மழை போன்று...
நல்ல மாற்றங்கள் நடக்கின்றன,
பாலைவன நிழல் மரம் போன்று....

ஏமாற்றியே பலகி விட்டான் பதவி உள்ளவன்.
ஏமாந்தே நொந்து போனான் அதைக் கொடுத்தவன்.
உண்மையைச் சொல்ல எவருமில்லை.
சொன்னவன் இன்று உயிரோடும் இல்லை.

காகிதத்தில் கவி எழுதி பலனுமில்லை.
அதை வாசிப்பவர் உள்ளம் யோசிப்பதில்லை.
இருந்தும் எனக்கு வேறு வழியில்லை.

அடுத்தவனின் அவமானம்,- இன்று
அன்றாட அரசியலாகி விட்டது.
இதை பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பது
தவிர்க்க முடியா பொழுதுபோக்காகி விட்டது.

உலகமே;
இன்று பல நாடுகளாய்,
நாடுகள் எல்லாம் பல ஊர்களாய்,
உணர்வுகள்;
இன்று பல மொழிகளாய்,
மொழிகள் எல்லாம் மதங்களாய்,
பிரிந்தே இருக்கிறதே தவிர,
எதிலுமே இணையவில்லை.

ஒற்றுமையை பற்றி,
ஒரு வரி பேசவில்லை நாம்.
பிரிவினை பற்றி மட்டும்,
பலவாறாக பேசி விட்டோம்.

நல்ல திட்டங்கள் பற்றி பேசவில்லை நாம்.
மற்றவன் கருத்தில் குறை மட்டும்,
கூடுதலாய் பேசுகின்றோம்.

குறை மட்டுமே நம் இருவரினதும்
குறிக்கோளாகிப் போனது.

குறை இல்லாதவன் உலகில் இல்லை,
ஆனால் குறை மட்டுமே வாழ்வும் இல்லை.
சற்று சிந்திப்போம் சில நிமிடம்,-அதனால்
வரும் காலத்தில் நற் காற்றை சுவாசிப்போம்.

மற்றவன் குறை தேடும் முன்,
நாம் எதை நிறைவு செய்தோம்??????
என்று யோசிப்போம்.

பலவாறாக பிரிந்து விட்ட நாம்,
மனிதர்கள் எனும் அடிப்படையில்
ஒன்றுபடுவோம்.
நம்மை விட தாழ்ந்த
மிருகங்களை பார்த்தாவது
"படிப்பினை கொண்டு....."


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment