Friday, February 25, 2011

இணைந்த இமயங்கள்!

நன்றி:தமிழ் சீ.என்.என்



மொபைல் போன் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இயங்கும் நோக்கியா நிறுவனமும், கம்ப்யூட்டர் உலகில் தனக்கிணை தானே என வலம் வரும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் அண்மையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.

இதன்படி நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களில் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும்.

இதன் பிங் சர்ச் இஞ்சின் நோக்கியாவின் மொபைல் தேடுதளமாக இயங்கும். அதே போல நோக்கியா மேப்ஸ் சேவையை மைக்ரோசாப்ட் பயன்படுத்தும். 20 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் நோக்கியா ஸ்மார்ட் போன்கள் உலகில் பயன்படுத்தப்படுகின்றன.

அதிகமான எண்ணிக்கையில் ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் நிறுவனமாக, நோக்கியா இடம் பெற்றுள்ளது. எனவே இந்த ஒப்பந்தம் மூலம் இரு நிறுவனங்களும் புதிய இலக்குகளில் வெற்றிகளைப் பெறும் என்பதில் ஐயமில்லை.

ஒரு புதிய மொபைல் இயங்கு சூழ்நிலையை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்த இருக்கிறது. தற்போது நோக்கியா போன்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிம்பியன் மற்றும் மீகோ படிப்படியாகக் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் நமக்கு என்ன வசதிகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

1.எளிய வேகமான பயன்பாடு: பல அப்ளிகேஷன்கள் சிம்பியன் சிஸ்டத்தில் இயங்குவதை நாம் அனுபவித்து வருகிறோம். இவை விட்ஜெட் (Widget) என அழைக்கப் படுகின்றன.

விண்டோஸ் மொபைல் இயக்கத்தில் உள்ள இந்த விட்ஜெட்டுகள், இன்ஸ்டால் செய்வதற்கும் இயக்குவதற்கும் எளிதானவை. இதனால் பயனாளர்கள் நிச்சயம் மற்றவற்றைக் காட்டிலும் இவற்றை அதிகம் விரும்புவார்கள்.

2. கேம்ஸ்: மொபைல் போனை விளையாட்டிற்கெனப் பயன்படுத்துபவர்களுக்கு, விண்டோஸ் மொபைல் போன் அதிக உற்சாகம் தரும் சாதனமாக இருக்கும்.

3. ஆபீஸ் டாகுமெண்ட்ஸ்: ஆபீஸ் அப்ளிகேஷன் எனக் கொண்டு வந்து, கம்ப்யூட்டர் பயன்பாட்டிலும், நம் அன்றாட வாழ்க்கை முறையிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் தொகுப்புகளாகும்.

எனவே இன்றைய கம்ப்யூட்டராக மாறிவரும் ஸ்மார்ட் போன்களில், விண்டோஸ் மொபைல் மூலம் இவற்றைப் பெற்றுப் பயன்படுத்துவதனை அனைவரும் விரும்புவார்கள்.

மைக்ரோசாப்ட் வேர்ட், பவர்பாய்ண்ட், எக்ஸெல் மற்றும் ஒன் நோட் ஆகிய அப்ளிகேஷன்களின் மொபைல் பதிப்பு, நோக்கியா போன்களில் இனி இடம் பிடிக்கும். டாகுமெண்ட்களைப் படிப்பதற்கும், தயாரிப்பதற்கும் மற்றும் மற்றவர்களுக்கு அனுப்புவதற்கும் யார் தான் ஆபீஸ் அப்ளிகேஷனை வேண்டாம் என்று சொல்வார்கள்!

4. மியூசிக்: ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளைத் தருவதில் மைக்ரோசாப்ட் தரும் தொழில் நுட்ப வசதிகளை எல்லாரும் அறிந்திருக்கிறோம். எனவே இந்த வகையிலும் விண்டோஸ் மொபைல் முதல் இடத்தைப் பெறும்.

5. இமெயில் பயன்பாடு: மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் சர்வர் மூலம் தங்கள் இமெயில் பரிமாற்றங்களை மேற்கொள்பவர் களுக்கு, விண்டோஸ் மொபைல் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

6. இன்ஸ்டன்ட் மெசேஜ்: உடனடி செய்தி அனுப்பி பெறுதல், கான்பரன்ஸ் பயன்பாடு ஆகியவற்றிற்கு ஆபீஸ் கம்யூனிகேட்டர் மொபைல் கை கொடுக்கும்.

7. உலக மொழிகள் பயன்பாடு: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அனைத்து மொழிகளின் பயன்பாடு எளிதானதாக உள்ளது. இது தற்போது நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களுக்கும் நீட்டிக்கப்படும்.

8. இதர வசதிகள்: நோக்கியாவின் மேப்ஸ் இனி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேப்பிங் சர்வீசஸ் பிரிவின் ஓர் அங்கமாக இருக்கும். இது பிங் சர்ச் இஞ்சினில் இணைக்கப்படும். நோக்கியா தன் மொபைல்போன் மூலம், விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு கட்டணம் செலுத்தும் நெட்வொர்க் ஒன்றை இயக்கி வருகிறது.

இனி இதன் மூலம் விண்டோஸ் மொபைல் கட்டண வசதிகள் விற்பனை செய்யப்படுவது எளிதாகும். ஸ்மார்ட் போன்களுடன் மற்ற வகை போன்களைக் கணக்கிட்டால், தற்போது மற்ற வகை போன்களே அதிகம் புழக்கத்தில் உள்ளன.

உலக அளவில் சென்ற ஆண்டு இறுதியில் 48 கோடி ஸ்மார்ட் போன்களும், 330 கோடி மற்ற வகை போன்களும் இருந்தன. ஆனால் விண்டோஸ் போன்ற கூடுதல் வசதி உள்ள ஸ்மார்ட் போன்கள் வருகையில், வரும் 2015 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை 140 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மற்ற வகை போன்களின் எண்ணிக்கை அப்படியே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மைக்ரோசாப்ட் வழங்கும் விண்டோஸ் மொபைல், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிளின் ஐபோன் சிஸ்டங்களுக்கு நல்ல போட்டியாக இருப்பதால், ஏற்கனவே எச்.டி.சி., சாம்சங் மற்றும் எல்.ஜி. நிறுவனங்கள் விண்டோஸ் போன் 7 சிஸ்டத்தில் இயங்கும் போன்களைத் தயாரித்து வெளியிட்டுள்ளன.

இப்போது நோக்கியாவும் இந்த வரிசையில் பெரிய அளவில் சேர்ந்துள்ளது. ஏற்கனவே மைக்ரோசாப்ட் மோட்டாரோலா நிறுவனத்துடன் இதே போன்ற ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. ஆனால் அது வெற்றிகரமாகத் தொடரவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இனி மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டங் களுக்கிடையே நடக்கும் பந்தயத்தில் ஆண்ட்ராய்ட், ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் மொபைல் 7 ஆகிய குதிரைகளே ஓடும். எது வெற்றி பெறுகிறது என்பது சில மாதங்களில் தெரிந்துவிடும்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment