Sunday, January 13, 2013

பெத்த மனம் பித்து பிள்ள மனம் கல்லு.


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை' என்றார்கள். (Bukahari Volume:6 Book:78)

இது எனக்கு மிகவும் பிடித்த அறிவுரைகளில் ஒன்று. இதை நான் இங்கு சுட்டிக் காட்டுவதற்கும் நான் பகிரப் போகும் விடயத்துக்கும் நிறையவே ஒற்றுமை உண்டு. விடயத்துக்கு வருகிறேன்.

அன்று சண்டே.. ஆஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இரண்டாவது கிரிக்கெட் போட்டி.. நானும் மிக ஆவலாக இந்தப் போட்டியிலாவது இலங்கை வெல்லுமா என பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது யாரோ என் வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டு போய் திறந்து பார்த்தேன். வயதான பெண்மணி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

விசயத்தைப் புரிந்து கொண்டு 10 ரூபா எடுத்துக் கொடுத்து கதவடைக்க முயன்றேன் அப்போது அவர் என்னைப் பார்த்து "குடிக்க தண்ணி இருக்குமா?" என்றார். "உள்ளே வாங்க" என சொல்லிவிட்டு அம்மாவை கூப்பிட்டு இவருக்கு தண்ணி குடுக்கும் படி கூறிவிட்டு நான் ஓடிச் சென்று டிவிக்கு முன்னாள் உட்கார்ந்து கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து யாரோ அழுவது போன்ற சத்தம் கேட்டது என்ன நடக்கிறது என்று பார்க்க வெளியில் சென்றேன் அந்த வயாதான பெண்மணியின் கண்கள் கண்ணீரைச் சொந்தமாக்கியிருந்தது. சமையலை முடித்து விட்ட என் அம்மாவும் அவருக்கு சாப்பிடுவதற்கு உணவையும் கொடுத்திருந்தார். நான் அப்படியே உள்ளே சென்று டிவியின் சத்தத்தை குறைத்து விட்டு என் அம்மாவும் அந்தப் பாட்டியும் உறவாடுவதைக் கேட்கலானேன்.


அவர் ஒரு ஏழை என்றும் அவருக்கு ஆண் மகன் ஒருவன் இருப்பதாகவும் ஆனால் அவனோ யாரோ ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு அவன் உழைப்பதை எல்லாம் அந்தப் பெண்ணுக்கு மட்டும் கொடுப்பதாகவும் தன்னை கவனிப்பதில்லை என்றும் அதனால் தான் தனக்கு இப்படி அடுத்தவரிடம் கை ஏந்த வேண்டிய நிலை என்றும் அவனை வலப்பதற்கு தான் மிகுந்த கஷ்டம் பட்டதாகவும் சொல்லிக் கொண்டு அழுதார்.

இந்த கதையை கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் மனதுக்குள் வலித்துக் கொண்டிருந்தது. என் அம்மா வாய் விட்டு அவனை ஏசிய போது என் மனதும் அம்மாவுடன் கை கோர்த்திருந்தது.

இது போன்ற பல சம்பவங்கள் நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். இது எவ்வளவு பெரிய அநியாயம் என்பதும் எமக்குத் தெரியும். இன்றைய வாலிபர்களில் பெரும் பகுதியினர் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் நாம் எத்தனை பேர் நம்மை இது வரை வளர்த்து ஆளாக்கிய நம் பெற்றோருக்கு சரியான முறையில் நடந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான்.

ஏனெனில் இக் காலத்தில் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளே அதிகம். அதிகரித்திருக்கின்ற முதியோர் இல்லங்களும் அவை இன்னும் அதிகரிக்கப் பட வேண்டும் என்கிற தேவைப் பாடுகளையே நாம் இதற்கான ஆதாரமாக கொள்ளலாம்.

"தாய்" உலகில் சொல்லால் மதிக்கப் பட்டாலும் நிஜத்தில் நசுக்கப் படுகிறாள் என்பதுதான் மனம் வலிக்கின்ற உண்மை. ஒரு தடவைக்கு இருதரம் அவள் ஒரே விடயத்தைக் கேட்டால் அலுத்துக் கொள்கிறோம். நம் சிறு வயது ஒரு தடவை எண்ணிவிட்டால் அவளை முதுகில் ஆயுளுக்கும் சுமக்கலாம். ஒரு பிரசவ நேரத்து வலி போதும் அவள் எது சொன்னாலும் நாம் தலையாட்டி விடலாம்.

பொக்கிஷங்கள் இன்று வீதிகளில் அலைந்து திரிகிறது. அவசர மனிதனுக்கு அவைகளை திரும்பிப் பார்க்க நேரம் இல்லாமல் ஆசையும் பணமும் கட்டிப் போட்டிருக்கிறது.

மதங்களில், வேதங்களில், பாடல்களில், சினிமாக்களில் என்று எத்தனையோ தாய் பற்றிய விடயங்களைப் படித்தாலும், கேட்டாலும், அனுபவித்தாலும் ஏதோ ஒரு சமயத்தில் மனிதன் நன்றி கெட்டவன் என்பதைக் காட்டி விடுகிறான்.

என் கையில் இருந்த 1000 ரூபாவை அந்தப் பாட்டியின் கையில் வைத்து விட்டு "எந்த ஊர்?" என்றேன் என் ஊர் பெயர் தான் அவள் குரலில் ஒலித்தது. ஒரு இஸ்லாமிய முன் மாதிரிக் கிராமத்திலேயே (அப்படி சொல்லிக் கொள்வதில் இனி ஒரு பெருமையும் இல்லை என்பதை என் மனது சொன்னது) அந்த இஸ்லாத்தை போதித்த இறைதூதரின் போதனைகள் மறைந்து போனது என் ஊர் அடுத்த தலைமுறைக்கு எந்த வடிவில் கிடைக்கப் போகிறது என்பதை காட்டிச் சென்றது.

இலங்கை அணி மிகச் சிறப்பாக ஆடி இந்த போட்டியை வென்ற போதும் என் மனது ஏனோ சந்தோசப் படவில்லை. போகும் போது அந்த பாட்டி சொன்ன விடயங்கள் மட்டுமே என் நினைவுக்குள் இருந்தது. "என் மகன் பற்றி எனக்கு வருத்தம் தான் ஆனாலும் அவன் நல்லா இருக்கணும் தம்பி.. அவனை நான் மனது நோகல " இதை தான் சொல்வார்கள் போல் "பெத்த மனம் பித்து பிள்ள மனம் கல்லு என்று"


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

3 comments:

  1. அவன் நல்ல இருக்கணும் தம்பி

    ReplyDelete
  2. merit casino【WG】best slots games for 【WG98.VIP】
    【WG98.VIP】【WG98.VIP】 바카라 【WG98.VIP】 【WG98.VIP】,www 샌즈카지노 casino.zoominfo,similar 메리트카지노총판 websites,

    ReplyDelete