Thursday, January 05, 2012

கிழங்குக் கடை

"டேய் என்ன மச்சி சௌண்ட காணோம்?"

"இல்லடா எப்படி இருந்த நம்ம இப்படி ஆகிட்டோமே எண்டு யோசிச்சிட்டு இருந்தன் மச்சான்"

"சரி சரி விடு அதெல்லாம் ஒரு காலம் நீ ஆபீஸ் போக டைம் ஆகுது எண்டு சொன்னியே கிளம்பு அப்புறம் பேசலாம்"

"யா மச்சி மறந்தே போச்சு ஐல்கால் யு பக்டா பாய்"

"பாய் டா டேக்கேர்" எண்டு வச்சிட்டு என் மொனிடேர்ரையே பாத்துக்கிட்டு இருந்தேன். அவன் சொன்ன வார்த்தை மட்டும் என்னை ஏதோ செய்வது போன்று இருந்தது.

"எப்படி இருந்த நம்ம இப்படி ஆகிட்டோமே" என் இதய அறையில் எங்கோ ஒரு மூலையில் இந்த வார்த்தை முட்டிக்கொண்டு நின்றது. உண்மைதான் எப்படி இருந்தோம்.... இப்போ??? கண்களில் இருந்து ஒரு துளி வெளியே எட்டிப் பார்த்தது. மொனிடேர்ரையே மிச்ச நேரம் உற்றுப் பார்த்தால் எண்டு நினைக்கிறன். மூளையின் நினைவுச் செல்களுக்குள் அந்த காலங்கள் சுழலத் தொடங்கியது.
*********************************************

என் நண்பன் அவன். நாங்கள் பழகிய பசுமையான நாட்கள் அவை. என் பாடசாலை நாட்கள், மரணத்திலும் மறக்கமுடியா நினைவுகள். அவன் நினைவு எனக்கு வந்தாலே முதலில் ஞாபகம் வருவது அந்த கிழங்கு கடைதான். வாரத்தில் இரண்டு அல்லது 3 நாட்கள் அக் கடைக்குச் செல்வது எங்களுக்கு கட்டாயமாக்கப் பட்டு இருந்தது. இன்றைய பேஸ்புக், ட்விட்டர் போன்று எங்கள் ஏக்கங்கள், கனவுகள், அரட்டைகள், சோகங்கள் எல்லாம் சுமந்த கடை அது. குறிப்பாக வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் அவனோடு ஊர் சுற்றி திரிந்து விட்டு அந்த கடையில் போய் இருந்து சூப் குடித்து கிழங்கு சாப்பிடும் சுகம் வேற எந்த உணவிலும் நான் இது வரை ரசித்தது இல்லை.

வெள்ளிக்கிழமை, என் ஊரின் விசேட தினங்களில் ஒரு நாள். அன்று பின்னேரங்களில் என் ஊரு கடற்கரை களைகட்டும். என் ஊரின் பெரும் பகுதி குடும்பமாகவோ அல்லது நண்பர்களுடனோ அன்றைய பொழுதைக் கழிக்க அங்கு வந்து விடுவார்கள் . நம்ம பசங்களுக்கு என்ன வேலை இருந்தாலும் சரியான நேரத்துக்கு மோட்டார் பைக்ல அங்கே வந்துருவானுகள். நாங்க ரெண்டு பேர் மட்டும் என்ன விதிவிலக்கா? என் நண்பன் எதுல சொதபுறானோ இல்லையோ இதுல மட்டும் என்ன விட பேர்பெக்ட்டா இருப்பான். அதுவும் அவனுடைய ஆளும் அங்கு வாரயாம் என்பது தெரிந்தால் வியாழக்கிழமை இரவிலிருந்தே என் நிம்மதி போய்டும்.

இப்படி ரொம்ப ஜோலியா போயிட்டு இருந்திச்சி எங்க லைப். முதல் அடி நான் மேல் படிப்புக்காக என் ஊற விட்டுட்டு வெளி ஊர் வந்துட்டன். தொடர்ந்து அவன்கூட பழக முடியாட்டியும் அப்பப்போ அவன மீட் பண்ண கிடைக்கும். எப்போ நாங்க மீட் பண்ணினாலும் எங்களுக்கு உறைவிடம் அந்த கிழங்கு கடைதான். அடுத்தது அடி இல்ல இடி. அவன் வேலை காரணமாக வெளி நாட்டுக்குப் போய்ட்டான். அதுக்கப்புறம் நானும் ஊருக்கு முதல் மாதிரி போறதும் இல்ல. சில நேரங்களில் போனாலும் அவன் இல்லாமல் கிழங்குகடை வெறுமையாய் போனதாய் உணர்ந்தேன். அதனால் அங்கு போவதையும் நிறுத்திக்கொண்டேன்.இப்போ அவன் கூடத்தான் பேசிட்டு இருந்தேன். அவனை நேரடியாக சந்தித்து 2 வருடம் கடந்திட்டு.. ஏதோ அவன் போன மாதம் தான் சென்றது போல் இருக்கிறது.

{{{ரீங் ரெங்}}} {{{ரீங் ரெங்}}}
*********************************************

ஞாபக சுழற்சிக்குள் இருந்து என்னை எழுப்பிவிட்டது அந்த மொபைல் கால். மொபைல் எடுத்து காதுக்குள் வைத்துக் கொண்டு நேரத்தை பாக்கிறேன் அதற்குள் 1 மணி நேரம் கடந்து இருந்து.
"ஹலோ"

"அடேய் நான்தான் மச்சான்"

"சொல்லுடா இப்பதானடா ஆபீஸ் போறேன் எண்டு போன? வாட் ஹப்ண்டு?"

"நத்திங்டா இங்க வேல இல்ல ப்ரீ தான். நீ ப்ரீதானே?

"எஸ் மச்சி சொல்லு"

"இல்ல மச்சான் நம்ம கிழங்கு கடைல கிழங்கு சாப்பிடனும் போல இருக்குடா என்னமோ தெரியேல்ல திடீர் எண்டு தோணிச்சி"

இதற்க்கு மேல் என்னால் பொறுமையா இருக்க முடியாது என்பது போல் என் கண்ணீர் குப்பென்று வழிந்தது. கையால் துடைத்துக்கொண்டு "ஹி ஹி ஹி கிளம்பி வா மச்சி அதுக்கென்ன சாப்பிடலாம்" எண்டேன், வீதி அபிவிருத்திக்காக அந்த கடை உடைக்கப்பட்டு விட்டது என்று அவனிடம் சொல்லும் தைரியம் எனக்கு இல்லாமல்..


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment