Monday, October 25, 2010

இவளின் உடலைச் சுமக்க...


நாற்கம்பிக்குள் அடைக்கப்பட்ட
பறவைகளின் வாழ் நாள் போல்,
ஏக்கங்களாகிப்போனது என் வாழ்நாளும்.
என்னை தனியாய் விட்டு நீ பிரிந்து சென்ற நாள் முதல்...

கண்ணை மூடித்தூங்கும் வேளையிலும்,
இருண்ட கனவுக்குள் ஒளிரும் தீபமாய் உன் முகம்.

என்னைப் பார்த்து நீ முதல் பூத்த புன்முறுவல் மறைந்து,
பிரியும் வேளை நீ நடிப்பாய் சிரித்த அந்த ரணங்களின் வினாடிகள்,
சூடாய் ஒட்டிக் கொண்டது என் கண்களில்....,
பச்சை மரத்தானிபோல் பதிந்து போனது என் மனதில்.

நீ விளையாடிய மணல்வெளிகள்,
நீ தூங்கிய அறைகள்,
நீ வாழ்ந்த இடங்கள்,
இவற்றை பார்க்கும் வேளை
ஊசி கொண்டு குத்துகின்றன,
என் ஒவ்வொரு நொடி பார்வையும்
என் கண்களை..

நீ செய்த குறும்புகள்,
நீ சிரித்த சிரிப்புகள்,
நீ அழுத நாட்கள்,
என் நிழல் போன்று என்னைத் தொடர்கிறது,
என் ஒவ்வொரு அசைவிலும்...

நம் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும்
உன் கனீரென்ற குரல்,
இடியாய் அழைக்கிறது என்னை
அம்மா அம்மா என்று....

அறையில் தூங்குகிறாய் என்று
அமைதியாய் தூங்கியவள் நான்-இன்று
நீ இல்லாத உன் அறையை
வெறித்த பார்வையுடன் பார்த்து
வலியால் விழியில் நீர் வடிய
விடிகிறது என் தூங்காத இரவுகள்....

கணவனை கடைக்கனுப்பிவிட்டு
என் உயிரையும் நினைவுகளையும்
உன்னிடம் அனுப்பி விட்டு
என்னுடல் மட்டும் தனியாய் ஊஞ்சலாடுகிறது
நான் ஆடும் ஊஞ்சலுடன்...

தொலைபேசியில் நீ தொலைவில் இருந்து
அழைக்கும் நாட்களுக்காக,
காத்துக்கிடக்கிறேன் உன் குரல் கேட்க,
நான் அனைத்தையும் தொலைத்து விட்டு.

போகாதே என்று தடுத்த வேளை என் எதிர்காலம்
அதுதான் என்று என் வாயடைத்தாய்.
அன்று மூடிய என் வாய் இது வரை துறக்கவில்லை..

பக்கத்தில் இருந்து பாசத்தை காட்டுவாய்
என்று எண்ணியிருந்தேன் நான்,
ஆனால் பல மைல்
கடந்து சென்று பணத்தை காட்டுகிறாய்...

பணத்தின் தேவையை உணர்ந்த உனக்கு
பாசத்தின் அருமை புரியும் நாள் வெகு தொலைவில் இல்லை..

உன் வாழ்கை இனிதாய் மலர
என் இறைவனிடம் வேண்டுகிறேன்..

வேதனையின் உச்சம் பிரசவம்,
பிரசவத்தின் வலி பெரிதாயில்லை.
நீ பிரிந்த வலி நிமிடங்களுக்கு முன்னால்.....

இந்த பரிதாப தாயின் உயிர் பிரிவதற்குள்
வந்து விடு "இவளின் உடலைச் சுமக்க..."


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

1 comment:

  1. அனுபவத்தின் ஆழமான மாதிரி ,,
    அழகாக சொல்லிருக்கிங்க ,,
    தொடர்ந்து எழுதுங்கள் ,,
    வாழ்த்துக்கள்

    ReplyDelete