Monday, August 02, 2010

தெவிட்டாத தென்றல்......

மூன்று வயதினிலே ஆசை அம்மாவுடன்
அரவனைப்பில் நானிருக்க என் விசிறி
பொம்மையை தட்டிப் பறித்து என்னோடு
விளையாடிப் பார்த்தது அந்த தெவிட்டாத தென்றல்

ஆறு வயதினிலே ஆற்றங்கரையிலே
அறியாப் பருவத்தில் அழகாய் விளையாடுகையில்
சுட்டெரிக்கும் சூரியனின் சூட்டைக் களைக்க
வீசியது அந்த தெவிட்டாத தென்றல்.

பத்து வயதினிலே பள்ளியிலே
பாடம் படிக்கையில் பயிற்சி செய்யத் தவறி
ஆசிரியரிடம் அடிபட்ட தருணம் வலி தீர்க்க
தவழ்ந்து வந்தது என் மாடி வகுப்பறைக்கு
அந்த தெவிட்டாத தென்றல்.

பதினைந்து வயதினிலே குடும்பத்தைப் பிரிந்து
கல்வியை கரம் பிடிக்க தனித்துட்ட வேளை
ஒற்றயாய் ஜன்னலருகில் நின்ற என்னை நோக்கி
என் விழி நீர் துடைக்க விரைந்து வந்தது
அந்த தெவிட்டாத தென்றல்

பதினெட்டு வயதினிலே காதல் நினைவுகளால்
கடற் கரையில் வெறித்த பார்வையால்
விம்மி அழுது நானிருக்க என்னை தேற்ற
தேடி வந்தது அந்த தெவிட்டாத தென்றல்

இருபத்து மூன்று வயதினிலே வேலை செய்ய
நான் எத்தனிக்க முதல் நாளே முந்திக் கொண்டு
வாழ்த்துச் சொல்லி குளிர் கொண்டு
வருடியது அந்த தெவிட்டாத தென்றல்.

இருபத்தெட்டு வயதினிலே மங்கையவள் கரம் பிடித்து
மோகம் இட்ட ஆசையில் இரு உடல் உரசி
காமத்தீயால் ஏற்பட்ட வியர்வை துடைக்க
விரைந்து வந்தது அந்த தெவிட்டாத தென்றல்.

ஆசை இட்ட அடித்தளத்தில் ஆழப் பிறந்தவனை
அள்ளிக் கொஞ்சுகையில் எங்கிருந்தோ வந்து
என்னை முத்தமிட்டுச் சென்றது அந்த தெவிட்டாத தென்றல்

முழுதாய் வாழந்த மகிழ்வில் மூச்சை துறந்த
என் உடலுக்கு இருதி அஞ்சலிக்காக இயல்பாய்
வீசியது என் இருதி ஊர்வலத்தில் இந்த
தெவிட்டாத தென்றல்.

காற்றோடு கலந்து விட்ட என் மூச்சையும்
சேர்த்துக் கொண்டு அடங்கிப் போனது அந்த
தெவிட்டாத தென்றல் என்றும் என்னை பிரியாதவளாக....


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment