virakesari.
பாகிஸ்தானில் சிந்து நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு கரைகளை உடைத்து கொண்டு பல்வேறு கிராமங்களில் புகுந்துள்ளதால், மீட்பு பணிகள் மந்தகெதியில் நடந்து வருகின்றன.
அத்தியாவசிய உணவு பொருட்களை கொண்டு செல்லும் பணியில் கழுதைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பெய்த பலத்த மழையால் சிந்து நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்கள் இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான மலைக் கிராமங்களும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி நடந்த போது, மீட்பு பணியில் இராணுவத்தினர் முழு வீச்சில் இறக்கப்பட்டனர். தற்போது ஜனநாயக ஆட்சி நடப்பதால், தலிபான்களை ஒடுக்கும் பணியில் மட்டும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சிந்து நதியில் உடைப்பெடுத்து ஏராளமான கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால், ஒரு கோடியே 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
பாகிஸ்தான் வரலாற்றில் இது போன்ற வெள்ளத்தை பார்த்ததில்லை என, இங்குள்ள மக்கள் கூறுகின்றனர். பல வாரங்களாக தொடர்ந்து வெள்ளம் கிராமங்களைச் சூழ்ந்துள்ளதால், போதிய சுகாதாரமின்றி, கொலரா போன்ற தொற்று நோய்கள் பரவி வருகின்றன.
வெள்ள பகுதிகளை ஐ.நா., பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்று முன்தினம் பார்வையிட்டார். கணிசமான நிதி உதவி தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க போதிய அளவு ஹெலிகொப்டர்கள் இல்லை.
எனவே, மழையால் பாதிக்கப்பட்ட மலைப் பகுதிகளுக்குக் கழுதைகள் மூலம் உணவு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றது.
நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போதிய போக்குவரத்து வசதியில்லை. வாகன வசதி முற்றிலும் முடங்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் மார்பளவு நீரில் மக்கள் நீந்தி செல்லும் நிலைமை காணப்படுகிறது.
உடல் நலம் சரியில்லாதவர்கள், முதியவர்களைக் கயிற்றுக் கட்டிலில் வைத்து மக்கள் சுமந்து செல்கின்றனர். மீட்பு பணிகளுக்கு ஹெலிகொப்டர்களை அளித்து உதவும் படி, சர்வதேச நாடுகளை பிரதமர் யூசுப் ரசா கிலானி கேட்டிருக்கிறார்.
ஸ்வாட் பள்ளத்தாக்கில் குறுகலான மலைப்பகுதிகளில் உணவு பொருட்களைக் கொண்டு செல்லும் 30 கழுதைகளில் இரண்டு மலைச்சரிவில் உருண்டு காயமடைந்துள்ளன.
இத்தகைய மோசமான நிலையையடுத்தே பாகிஸ்தானில் சுதந்திர தின விழா ரத்து செய்யப்படிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment