சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு சமையல்காரராக இருந்த இப்ராகிம் அல் குவாசி (50) என்பவர், அமெரிக்கக் கடற்படைத் தளமான குவாண்டகாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சூடானைச்சேர்ந்த அவர், கடந்த 8 ஆண்டுகளாக அந்த சிறையில் இருக்கிறார். அவர் மீதான விசாரணை அமெரிக்க இராணுவ நீதிமன்றில் நடைபெற்று வந்தது.
கடந்த மாதம் தனது குற்றங்களை இப்ராகிம் ஒப்புக்கொண்டார். அப்போது அவர்,
"சூடான் நாட்டில் பின்லேடனை நான் சந்தித்தேன். பின்னர், அவருடன் ஆப்கானிஸ்தான் சென்று, அங்கு அவருக்கு சமையல்காரராகப் பணியாற்றினேன்.
சில சமயங்களில் அவருக்கு டிரைவராகவும் இருந்துள்ளேன். தோரா போரா மலைப்பகுதியில் நடந்த அமெரிக்க இராணுவத் தாக்குதலில் இருந்து பின்லேடன் தப்பிச்செல்வதற்கு உதவி செய்தேன். ஆனால், எந்தவித தீவிரவாத தாக்குதல்கள் குறித்தும் முன் கூட்டியே எனக்குத் தெரியாது" என்று தெரிவித்தார்.
இதையடுத்து, இப்ராகிம் அல் குவாசிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பிறகு, குவாண்டனாமோ சிறையில் உள்ள ஒருவருக்குத் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
No comments:
Post a Comment