Friday, August 27, 2010

21 நாட்களாக சுரங்கத்தினுள் 33 பேர் தவிப்பு : சிலியில் அவலம்.



Virakesari.
தென் அமெரிக்க சிலி நாட்டின் காபியாபோவிலுள்ள சுரங்கம் ஒன்றில் சிக்கி 21 நாட்களாக 33 தொழிலாளர்கள் இன்னமும் போராடி கொண்டிருக்கின்றனர்.

சுரங்கத்தின் 3 ஆயிரம் அடி ஆழத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 5ஆம் திகதி சுரங்க பாதை திடீரென இடிந்து விழுந்தது. அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்த 33 தொழிலாளர்கள் அதற்குள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணி நடந்தது. 'ட்ரில்' இயந்திரம் மூலம் துளை போட்டு அவர்கள் இருக்கும் இடத்தை 17 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடித்த போது அவர்கள் அனைவரும் உயிரோடு இருப்பது தெரிய வந்தது.

சிறிய அளவிலேயே இந்தத் துளை போடப்பட்டுள்ளதால், அதன் வழியாக அவர்களை மீட்க முடியவில்லை. எனினும் தகவல் தொடர்பு, வெளிச்சம் வசதிகள் அதன் மூலம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன. அதன் வழியாக குளுக்கோஸ் மற்றும் மாத்திரைகள் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன.

21 நாட்களாக அவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை மீட்பதற்கு இன்னும் ஒரு மாதம் வரை ஆகலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

அதுவரை அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக மிக அத்தியாவசியமான பொருட்களை மட்டும் சுரங்க குழாய் வழியாக அனுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே அந்த பகுதியில் அடிக்கடி பூகம்பமும் ஏற்பட்டு வருகிறது. விபத்து நடந்ததற்கு பிறகு இரு தடவை பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுரங்கம் மேலும் இடிந்து அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment