Sunday, August 22, 2010

எது காதல் (சுவைக்க ஒரு சூடான பகுதி)



கேள்விகள் பல தொடுத்தும் விடை கிடைக்காத ஒரு விடயத்தை அறிந்ததுன்டா நீங்கள் அதுதான் காதல். காதல் என்றால் என்னவென்று கேட்ட போது விடைகொடுக்க முடியாமல் திண்டாடியவர்களை நினைக்கிறேன் நானும் தடுமாறியவனாக. இருவர் சேர்ந்து ஒருவராய் வாழுவது, ஈருடலில் ஓர் உயிர், என்றெல்லாம் பல விளக்கங்கள் இருந்தாலும் இருதி வரை எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒரு விடயம் தான் கவர்சியை அடிப்படையாக கொண்டுதான் காதல் தோன்றுகிறது என்பது.

விடிய விடிய பேசினாலும் விளக்கம் ஒன்றைதான் குறித்து நிற்கிறது இந்தக் காதல். ஒரு ஆணுக்கு, பெண்ணின் மீதும் பெண்ணுக்கு, ஆணின் மீதும் ஏற்படும் கவர்சிக்கு மறு பெயர் தாங்க காதல். கவர்சி என்பது அழகில் மட்டுமல்ல பல விடயங்களிலும் இருக்கலாம். குறிப்பிட்ட அந்த ஆண்/பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட அந்த பெண்/ஆணின் மீது ஏற்படுகின்ற ஈர்ப்பு அழகாலோ, அறிவாலோ, அல்லது நல்ல குணங்களாலோ உள் வாங்கப்படுகிறது என்பதுதான் யதார்தம். இந்த காதல் என்பது மனிதனுக்கு அன்றாடம் எழக்கூடிய உணர்வுகளில் ஒன்றே தவிர வேறு எதுவும் இல்லை. அழுகை, வெட்கம், மகிழ்ச்சி, கோபம் இது போன்றுதான் காதலும். ஆனால் இந்தக் காதல் இன்று உலகில் மற்றய உணர்வுகளை விட முக்கியமானதற்கு என்ன காரணம் அப்படின்னு பார்க்கலாம் வாங்க.....

முதன்மை காரணியாக நாம் சொல்லலாம் யதார்தம் அற்ற சினிமாக்கள் தான். இன்றய சினிமாக்கள் இந்த காதலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வேறு ஏதாவது ஒரு விடயத்துக்கு கொடுத்திருந்தால் அந்த விடயத்தில் அச் சமூகம் சாதித்திருக்கும் என்றால் மிகையாகாது. ஏனெனில் ஒரே காதல் என்ற வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு எத்தனை 3மணி நேரங்கள் வீணடிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையை யாரும் மறைக்கவோ மறக்கவோமுடியாது. காதல் உயிரை விட மேலானது அதற்கு இவ்வுலகில் இணையில்லை அது இல்லை என்றால் வாழ்வில்லை என்றெல்லாம் இன்றய இளைஞர், யுவதிகளை பித்துப்பிடிக்க வைத்த இந்த சினிமாவை பேசியே தீரவேண்டும். காதல் இல்லை என்றால் வாழ்கையில்லை என்று தீர்மானம் எடுக்கும் அளவுக்கு இன்றய இளைஞர், யுவதிகள் மாறியிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுப் பொருப்பெடுக்க வேண்டியது இந்த சினிமாக்கள் தான். ஆனால் அவ்வப்போது வரும் ஓர் இரு சினிமாக்கள் மட்டும் விதிவிளக்காக காணப்படுகிறது. அப்படிப்பட்ட சினிமாக்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் பெரும்பான்மையான சினிமாக்கள் அதே பல்லவியை மட்டும் தான் பாடிக் கொண்டிருக்கிறது.

சரிங்க நம்ம விஷயத்துக்கு வருவோம். நாம் அடுத்து யோசிக்க வேண்டிய விஷயம் இந்த சினிமாக்கள் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து நாம் எவ்வாறு விடுபடுவது என்பதுதான். அத பார்ப்போம் வாங்க.


அவள்/அவன் தான் என் உயிர் என்று புழம்பும் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ யோசிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இந்தக் காதலுக்கு கொடுக்கப்பட்ட வரைவிலக்கனங்கள், விதிகள் யாரால், அல்லது எச் சமூகத்தால் இங்கு கொடுக்கப்பட்டது என்பதுதான். இதற்கு எச் சமூகமும் எந்த தனி நபரோ பொறுப்பேற்க முடியாது. ஏனெனில் இதெல்லாம் கவிஞர்களாலும், சினிமா கதையமைப்பாளர்களாலும். இயக்குனர்களாலும் ரசனைக்காக, காட்சியமைப்புக்காக, சினிமாவின் சுவாரஸ்யங்களை அதிகரிப்பதற்காக கொடுக்கப்பட்ட சில்லறை வார்த்தைகளே தவிர வேறென்றுமில்லை என்ற முடிவுக்குதான் வரமுடியும். (தெளிவாக சிந்தியுங்கோ.) எனவே வெறும் யதார்தம் அற்ற சினிமாக்கல் போல் நீங்களும் வாழ ஆரம்பித்தால் வாழ்க்கை பல பிரச்சினைகளையும் இனைத்துக் கொள்ளும்.

இந்தக் காதல் ஒட்டுமொத்தமாக வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. அதற்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் தேவையற்றது என்பதுதான் என் வாதம்.

இன்னொரு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டிய பொருப்பு எனக்கிருக்றது. அதாவது அம்மா, அப்பா இப்படி இரத்த உறவுகளுக்காக விடாத உயிரை மனிதன் காதலுக்காக தியாகம் செய்கிறானே இது தான் காதலின் புனிதம் என்று சில வாதங்கள் முன் வைக்கப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். இப்படியான வாதங்கள் எவ்வளவு பெரிய முட்டாள் தனமான வாதம் என்று நீங்கள் யோசிக்க வேண்டிய தருணம் இது. இந்த வாதத்தை முட்டாள்தனம் என்று சொன்ன நான் அந்த விடயத்தை முட்டாள்தனம் என்று சொல்ல வரவில்லை. அது ஒரு வழமைக்கு மாற்றமான செயல் என்று சொல்கிறேன். நான் மட்டுமல்ல மன நோய் வைத்திய நிபுணர்களின் அறிக்கை கூட இதைத்தான் குறித்து நிற்கிறது. ஆங்கிலத்தில் இவர்களை Abnormal என்று அழைப்பார்கள். உதாரணமாக ஒரு மனிதர் ஒரு விடயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவனாய் இருக்கிறான். அவனால் அவ்விடயத்தை விட்டு வாழ முடியாது என்று ஒரு நிலை தோன்றும் வேளை இப்படியான சம்பவங்கள் இடம்பெற வாய்ப்பு உண்டு. அதாவது அவனால் அந்த இழப்பை ஏற்க முடியாத ஒரு மனநிலை, தோல்விகளை தாங்கமுடியாத இலகிய மனம், எதிர்பாரதா விடயங்கள் ஏற்படும் போது அதை ஏற்க மறுக்கும் வியப்பான மனநிலை கொண்ட மனிதர்களை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். காதல் தோல்வியால் மட்டுமல்ல பல விடயங்களிலும் இவ்வாறான தற்கொலைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

வீட்டில் பிரச்சினை பரீட்சைமுடிவுகள் திருப்தியில்லை கடன் தொல்லை போன்ற சம்பவங்கள் இதற்கு உதாரணம். இப்படிப்பட்ட மனிதர்கள் காதல் தோல்வியால் மட்டுமல்ல அவர்களின் எந்த தோல்வியான நிலைகளிலும் இப்படியான மோசமான முடிவுக்குத்தான் உள்வாங்கப்படுவார்கள் என்பது இன்றய மனநோய் வைத்திய நிபுணர்களின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது. (நம்ம லொஜிக் படி பார்த்தாலும் ஒரு வேளை சினிமாக்கள் சொந்தங்களின் பிரிவுக்கும் தற்கொலை என்று காட்டியிருந்தால் நம்ம பசங்க அதற்கும் துணிஞ்சிருப்பாங்க போல)

ஆகவே காதல் தோல்வியில் ஒரு மனிதன் தற்கொலை என்பதை விட அவனின் மன வலிமை போதாத நிலையில் தற்கொலை செய்கிறான் என்பது தான் உண்மை. அவனுக்கு காதல் என்பதை விட தோல்வி என்ற ஒரு விடயம் தான் முன்னிலை வகிக்கிறது என்பது தான் இங்கு கோடிட்டு காட்டப்பட வேண்டிய விடயம். (மன்னிச்சுக்குங்க லிட்டில் சுப்பர் ஸ்டார்).

இந்தக் காதலை எவ்வாறு விளங்குவது என்ற சந்தேகம் உங்க மனதில் இப்ப வரலாம். இலேசான ஒரு வழி இருக்குதுங்க.



ஒரு கேள்விய உங்க மனதில் ஓடவிடுங்க. அதாவது சராசரியான ஒரு ஆணையும் சராசரியான ஒரு பெண்ணையும் கற்பனைபன்னுங்க. இவங்க இரண்டு பேரும் ஒத்துப் போகும் ஒரு விடயத்தை தேர்ந்தெடுங்க பார்க்கலாம். மிகக் குறைவு அல்லது உங்களால் முடியாது. ஆகவே இவங்க இரண்டு பிரிவினைரையும் ஒன்றாய் சேர்ப்பதற்காக இயற்கை செய்த மாயம் தான் இந்தக் காதல் எனும் உணர்வு. இந்தக் காதல் வருவதற்கு முன் இவர்கள் பாம்பும் கீரியையும் போல (ஏன் அதை விட கொடுமை). ஆனால் காதல் என்ற உணர்வு இவர்களுக்குள் வந்தவுடன் விட்டுக்கொடுப்பு கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் ஒற்றுமை போன்ற நற் குணங்கள் இவர்களை ஆட்கொள்கின்றது. இயற்கையின் சமநிலை பேணப்படனும் மனிதன் பூமியில் மனிதனாக வாழனும் என்ற விதிக்காக இயற்கை ஏற்படுத்திய இயல்பான உணர்வுதான் காதல்.

எனவே எந்த ஒரு சராசரியான மனிதனும் ஒரு உணர்வை இழந்ததற்காக அவனின் முழு வாழ்கையையும் முடிக்கமாட்டான். சாதிக்க வேண்டிய பல விடயங்கள் அவன் முன்னே இருக்கும் போது காதலை ஒரு விடயமாக கருதி அவனால் செயற்பட முடியாது. இந்த இடத்தில் நான் கேட்ட ஒரு கருத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். "இலட்சியங்கள் நிறைந்த ஒரு மனிதனுக்கு காதல் ஒரு வழிகாட்டியே தவிர வாழ்கையல்ல". ஆகவே இலட்சியம் இல்லாமல் வெறுமனே வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்களால் இன்று காதல் அதன் தன்மை இழந்து விட்டது என்று சொல்லலாம்.

வைரமுத்து தொடக்கம் பா.விஜய் வரை காதலை பாடாத கவிஞர்கள் இல்லை என்கிறீங்களா. ஆமாங்க ஆனால் அவர்களின் நிஜ வாழ்கை????? உங்களை போன்று வலிகள் நிறைந்ததுதான். அவர்கள் வலிகளை வரிகளாக்கினர் அதனால் கவிஞர்கள். நீங்கள் வடுக்கலாக்கி நீங்களே உங்களை வதைக்கிறீர்கள். சேர்ந்து வாழ்வதுதான் காதல் செத்து மடிவதல்ல என்ற ஒரு வசனமும் எனக்கு இவ்விடத்தே நினைவு வருகிறது.
காதலுக்கு நான் எதிரியில்லை ஆனால் அதே நேரம் அந்தக் காதல் என்ற பெயரில் செய்யப்படுகின்ற முட்டாள் தனமான செயலுக்கும் படு மோசமான செயல்களுக்கும் நான் தான் முதல் எதிரி.

காதலுக்கு இன்றய இளைஞர் யுவதிகளிடத்தில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. அதனால் ஏற்படும் சமூகச் சீரழிவுகளை நான் சொல்லித்தான் நீங்க தெரிஞ்சிக்கனும் என்ற நிலை இன்று இல்லை.
இந்தக் காதல் இல்லாவிட்டால் உலகில் உயிரினமே மங்கியிருக்கும் என்ற உண்மையை நாம் மறக்க கூடாது. காதல் அது மதிப்பளிக்கப் பட வேண்டியது, அதுவும் மனிதனின் உணர்வுகளுள் ஒன்று என்பதால். எனவே அதற்குரிய மரியாதை கொடுப்போம். அதற்காக அது உயிரை விட மேலானது என்றெல்லாம் முடிவெடுப்பது எல்லாம் முட்டாள்தனம்.

இன்று காதல் என்ற பெயரில் பல சீரழிவுகளும் நடைபெற்று வருகிறது. அவற்றையெல்லாம் கலைந்து மனித வாழ்கையின் ஓர் அங்கமாக மனித உணர்வுகளில் ஓர் உணர்வாக அதை ஏற்று ஆதரிப்போம்.

இது என் தனிப்பட்ட கருத்துதான் இதை வாழ்த்தி வரவேற்பதா? இல்லை தர்கித்து தகர்பதா? இரண்டுக்கும் நான் தயார் நீங்கள்....


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

2 comments:

  1. ஆழ்மனம் எப்போஹும் அப்பட்டமான நிர்வாணம் தான் ஏற்றுகொள்வது சிரமம் தான் ...........அழகிய வெளிபாடு

    ReplyDelete