காத்தான்குடி நகர சபைக்கும் ஆரையம்பதி பிரதேச சபைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக அவசர கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.
இப்பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்ப்பது என இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா ‘தமிழ்மிரர்’ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் அவரின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காத்தான்குடி நகர சபையானது ஆரையம்பதி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அத்திமீறி அதிக்கம் செலுத்திவருவதாக குற்றம் சுமத்தி ஆரையம்பதி, பிரதேச சபை தலைவி திருமதி கிரிஸ்டினா சாந்தன் உட்பட பலர் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் இக்குற்றச்சாட்டை காத்தான்குடி நகர சபை மறுத்து வருகின்றது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கிலேயே அவசர கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெற்றது. இந்த அவசர கூட்டத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, மாகாண சபை உறுப்பினர்களான பி.பிரசாந்தன் மற்றும் கே.எல்.எம்.பரீட் ஆரையம்பதி பிரதேச சபை தலைவி மற்றும் உறுப்பினர்கள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் மற்றும் மதத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மிக விரையில் இது பிரதேசங்களின் எல்லைகளை நில அளவை திணைக்களத்தின் உதவியோடு நிர்ணயிப்பது. அதன் பிற்பாடு விரும்பியோ விரும்பாமலே எல்லை நிர்ணயத்தை ஏற்றுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு ஏனைய பிரச்சினைகளை இவ்வாறான கலந்துரையாடல்கள் மூலம் சுமுகமான முறையில் தீர்ப்பது என தீர்மானிக்கப்பட்டதாக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
இன்று மாலை இடம்பெற்ற இந்த அவசர கலந்துரையாடலில் காத்தான்குடி நகர சபை தலைவர் மர்சூக் அஹமட் லெப்பை கலந்து கொள்ளவில்லை.
No comments:
Post a Comment