கற்றுத்தேர்ந்தவர்களோடு நாம் பழகினால், நாமும் பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். மேலும் நாம் கற்றதையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம்.
இதற்கு இன்டர்நெட்டில் எங்கு செல்வது? நமக்கென ஒரு வலைமனை (Blog) அமைத்து வைத்தாலும், அனைவரும் வந்து படிப்பார்கள். சரியான கருத்துரைகளை (Comments) பதிவார்கள் என்பது என்ன உறுதி? இந்த குறையைப் போக்கும் வகையில், கற்றவர்கள் கலந்துரையாடி, தங்களுக்கு தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ள இணையத்தில் ஒரு தளம் உள்ளது. அதன் முகவரி www.wepapers.com. இது ஒரு கல்வியாளர்களின் சோஷியல் நெட்வொர்க் என்று சொல்லலாம்.
இதில், பெரும்பாலும் பல்கலை மற்றும் கல்லுõரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இடம்பெறுகின்றனர். இதில் கலந்து கொள்வதன் மூலம் அதில் உள்ள அறிவு சார்ந்த கட்டுரைகளைப் படிக்கலாம். நமக்கு தெரிந்ததை இதில் பதிப்பிக்கலாம். ஆய்வுச் சுருக்கங்கள் (abstracts)கட்டுரைகள், உரைக்குறிப்புகள், ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவை இங்கு பெருமளவில் இடம்பெற்றுள்ளன.
இவற்றை வகைப்படுத்தி பட்டியலிட்டுள்ளனர். 40 வகைகளில் இவை கிடைக்கின்றன. உலகின் அனைத்து பொருட்களும் இதில் அடங்கும். இந்த கட்டுரைகள் பிளாஷ் தொழில்நுட்பத்தில் காட்டப்படுகின்றன. (யுட்யூப் மற்றும் பிற வீடியோ கிளிப்புகளைக் காட்டுவது போல) கட்டுரைகளில் சுருக்கம் அல்லது ஒரு சிறிய முன்னோட்டத்தினைப் பார்த்து, பின் அவற்றை டவுண்லோட் செய்திட வேண்டுமா என்பதனை முடிவு செய்து டவுண்லோட் செய்திடலாம்.
இந்த தளத்தின் இடது பக்கம் உள்ள பிரிவில், நாங்கள் விரும்பும் கட்டுரைகள் (Papers We Like) என்று ஒரு பட்டியலில், அப்போது பதியப்பட்ட சிறந்த ஏழு கட்டுரைகள் காட்டப்படுகின்றன. நீங்களாக ஒரு பொருள் குறித்து கட்டுரை ஒன்றை தேட வேண்டும் எனில், நடுப்பக்கத்திற்குச் செல்லலாம். இங்கு உள்ள Search கட்டத்தில் பொருள் குறித்த சொல்லை டைப் செய்து "எனி (any)' என்பதில் கிளிக் செய்தால் உடன் கட்டுரைகளின் பட்டியல் கிடைக்கும்.
நிச்சயமாக, நீங்கள் அதிசயப்படத்தக்க வகையில் தேடுவதற்கு கொடுத்த பொருள் குறித்த பல்வேறு கோணத்தில் கட்டுரைகளின் தலைப்பைக் காணலாம். நீங்கள் உங்கள் கட்டுரையை இதில் பதிய வேண்டுமா? இதில் பதிவு என்பது மிக மிக எளிமையானது. பெயர், கல்லூரி அல்லது பல்கலை முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கொடுத்து Capcha சோதனையை முடித்தால் போதும். பின்னர் sign up செய்து உள்ளே நுழையலாம். நீங்கள் ஒரு பொருள் கற்றுக்கொடுக்க எண்ணினால், கோர்ஸ் லீடர் என்ற பிரிவின் மூலம் செல்லலாம். அல்லது உங்கள் கட்டுரையை உங்கள் மாணவர்கள் அல்லது மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து குழுவாக அமைத்திடலாம்.
கட்டுரைகளை அப்லோட் செய்வதும் மிக எளிதாக உள்ளது. அப்லோட் செய்த பின்னர், அந்த கட்டுரை குறித்த சுருக்க தகவல்களை நீங்கள் அதற்கான படிவத்தில் தர வேண்டும். கற்கும் மாணவர்களுக்கும், கற்றுக்கொடுக்க எண்ணும் பேராசிரியர்களுக்கும், ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஒர் அருமையான இணையதளம் இது. இஸ்ரேல் நாட்டின் ஜெருசலம் நகரைச் சேர்ந்த Hanan Weiskopf மற்றும் Ehud Zamir என்ற இரு மாணவர்களால் இந்த தளம் தொடங்கப்பட்டு நடத்தப்படுகிறது. பல நாடுகளில் இருந்து இதற்கான நிதி உதவியாக வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment